காலம் செய்த கோலம் - குரு அரவிந்தன் -
(வட அமெரிக்க தமிழ் சங்க (FeTNA) அருவி இதழ் நடத்திய குறுங்கதைப் போட்டி – 2024 இல் முதற்பரிசு பெற்ற கதை)
அவள் மேடைக்கு வந்த போது அழகு மயில் ஒன்று உலா வருவது போலவே இருந்தது. அவள் ஒலி வாங்கியை வலது கையில் பிடித்தபடி மெல்ல மெல்ல அசைந்தாடியபடி அந்தப் பிரபலமான பாடலைப் பாடத்தொடங்கினாள். வெள்ளை நிறப்பட்டுத்துணியில் ஆடை அணிந்திருந்ததால், ‘ஆகா, வெண்மயில் ஒன்று மேடையில் மெல்ல அசைந்தாடுகின்றதே..!’ என்று இவன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
ஆனால் அவள் பாடத்தொடங்கிய போது மயிலாகக்காட்சி தந்தவளின் குரலோ குயிலாக மாறியிருந்தது. அவனை அறியாமலே அவளது அழகிலும், இனிய குரலிசையிலும் தன்னை மறந்து அப்படியே சிறிது நேரம் உறைந்து போயிருந்தான்.
இவன் ஒரு இசை ரசிகன் என்பதால் இவனால் இசையை ரசிக்க முடிந்துது. நிகழ்ச்சி முடிந்து அவள் மேடையை விட்டு வெளியே வந்தபோது அவளுக்காகக் காத்திருந்து அவளைப் பாராட்டினான்.
‘உங்க பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?’
இவ்வளவு பிரபலமான தனது பெயரைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இவன் இருக்கிறானே என்று அவள் நினைத்தாலும், நல்லதொரு ரசிகனின் மனம் நோகக்கூடாது என்பதால், சட்டென்று இறங்கிவந்து ‘நிலா’ என்று சொன்னாள்.
அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
அவர்களுக்குள் ஒருவகை ஈர்ப்பு இருந்திருக்கலாம், அதன் பின் ஏதோவொரு காரணத்தை முன்வைத்து அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். நேரம் கிடைத்த போதெல்லாம் இருவரும் உல்லாசமாகத் திரிந்தார்கள்.
ஒருநாள் உணவகத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, அவன் திடீரெனச் சிந்தனையில் மூழ்கியிருப்பதை அவள் அவதானித்தாள்.
‘என்ன யோசிக்கிறீங்க?’ என்று கேட்டாள்.