குறுநாவல்: வேட்டை! - கடல்புத்திரன் -
-கடல்புத்திரனின் 'வேட்டை' 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான குறுநாவல். நாவலில் வரும் சம்பவங்கள் , பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள் இவற்றிலிருந்து இக்குறுநாவல் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் சில கட்டங்களைத் தொட்டுச் செல்கின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்நாவலில் பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள், சம்பவங்களிலிருந்து அவற்றின் உண்மையான இயக்கப்பெயர்களை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். பெரிதாக நடந்த இயக்க மோதற் கால அனுபவங்களை மிகவும் யதார்த்தபூர்வமாக விபரிக்கும் குறுநாவலின் அனுபவங்கள் இலேசாக அவ்வப்போது மனத்தில் மெல்லிய வலியினை ஏற்படுத்து விடுகின்றன. அதே சமயம் முட்டி மோதிக்கொண்ட அமைப்புகளின் அடிமட்டத்தோழர்களுக்கிடையிலான நேரடிச் சந்திப்புகளின் அனுபவங்கள் சிலவற்றையும் இக்குறுநாவல் பதிவு செய்கின்றது. -
பயிற்சி முகாமிலிருந்து வந்து ஒரு வருசம் கடந்து விட்டது . ஆனைக்கோட்டைத் தோழர்களைச் சந்திக்கும் ஆசை பெடியகளுக்கு நிறைவேறவே இல்லை . ” போய்ப் பார்ப்போமா ? ” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள் வேறு ” அவன் எங்கே ? ; இவன் எங்கே ? ” …என்ற குரல்கள் அங்காங்கே எழுந்து கொண்டிருந்தன . இங்கேயும் , ரஸ்யப்புரட்சியில் எழுந்த மாதிரி , மென்செவிக்குகள் எழுச்சியுற்று இரண்டாகி பிரிந்து விடுமோ ? என்றிருந்தது . கேள்விகளை எழுப்புவது ,கண்டமாதிரி விமர்சனங்களை அள்ளிக் கொட்டுவது என …. ரசிகர் மன்றம் மாதிரி ஒவ்வொரு பகுதியும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருந்தன . ஒருபுறம் பயிற்சியால் வந்து குவிந்து கொண்டிருக்கும் தோழர்கள் . இந்திய அரசை விலத்தி ஆயுதங்களை வாங்கியதில் கோபமுற்று அத்தனையும் பறித்து விட்ட நிலைமை. வாழ்வியலில் வறுமை எவ்வளவு மோசமோ …அதைப் போன்றதே , . இயக்கத்திலும் ஆயுத வறுமையும் . ஒட்டு மொத்தத்தில் மார்க்சிச வழியில் பிரபலமாக விளங்கிய தாமரை பலவித சிக்கல்களில் சிக்கித் தவித்தது.
வெளியில் , சிதைவுறுகிறதை விட சிதைக்கப்படுகிறதோ…என்ற மாதிரியான நிகழ்வுகள் தான் அதிகம் . முதலில் , தளமாநாடு கூட்டப்படுவதென்றும் , பிறகு , , அதில் பெறப்படும் அறிக்கைகளையும் சீர்தூக்கி பார்த்து பின்தளமாநாடு கூட்டப்படும் என்ற விநோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாயின . ஏற்கனவே , அல்லி இயக்கத்தினுள் காங்கிரஸ் என்று ஒரு அவை கூடி செயலதிபர் தொட்டு பலர் மீள்தெரிவும் , ஆராய்வும் என புதுவிசயங்கள் தொடங்கி விட்டிருந்தன . இருந்தாலும் அதிலேயும் கோடாலியால் கொத்தியது மாதிரிப் பிளவு படும் போலத் தான் இருந்தது . அரசியலில் பல படிகளைக் கடந்து கொண்டிருந்திருந்தாலும் இலக்கை …… அடைவோமா ? என்பது தெரியாது . கழுகு , திறமான இயக்கம் கிடையாது . அப்படி தன்னை நினைத்துக் கொண்டு சங்கரத்தையிலுள்ள முல்லைமுகாம் மீது அதிகாலையிலே தாக்குதலைத் தொடுத்து விட்டது . தூக்கம் கலையாது வரிசையில் படுத்துக் கிடந்த தோழர்களுக்கு “என்ன நடந்தது ? ” எனத் தெரிய முதலே , எம் 16 சுடுகருவி சடசடவென சுட்டுத்தள்ளி விட , திறந்த முளிகளை, மூடாமல்…. சுமார் 24 , 25 உடல்கள் இரத்தக்குளத்தில் கிடந்தன .
‘ ஓரிரு மாதங்களுக்கு முதலே , முல்லைக்கு ‘போதாக்காலம் தொடங்கி விட்டது . வெளியில் தெரிய , அவர்களுடைய தளத்திலிருந்த இரு உபத்தலைவர்களுக்கிடையில் நிலவிய காழ்ப்புகள் முற்றி பூசல்களாக வெடித்திருந்தன . அவ்வளவாகப் படித்திராத . அச்சம் என்பதை அறியாத . சாண்டில்யன் கதைகளில் வருகிற மாதிரி எதிரி சுடுகிற போதிலும் காயங்களுடனும் ஆக்ரோசமாக சிங்கம் போல சிலிர்த்து முன்னேறிச் சென்று அச்சம் கொள்ள வைத்தவர்களும் அதில் இருந்தனர் . பெருமளவு படையினரையும் , பெரிய நகரக்காவல் நிலயமொன்றையும் முழுமையாக ,வெற்றிகரமாக தாக்கி அழித்த இயக்கம் . அச்சமயங்களில் . பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றி மக்களையும் புளாகிதமடையச் செய்திருந்தனர் . குட்டக்குட்டக் குனிபவரில்லை ” தமிழர்கள் ” என புதிய வரலாற்றை புதிதாகத் தொடக்கி வைத்தவர்கள் . வடமராட்சியில் ,ஒருமுறை இவர்களுடன் எதேச்சையாக கழுகுத்தோழர் ஒருவர் கொளுவப் போக ” ஊருக்குள்ளே ஒருத்தருமே கால் வைக்கக் கூடாது ” என கர்ஜித்து , கழுகுக்கெதிராக ஊரடங்குச்சட்டம் போட்டு அட்டகாசப்படுத்தி விட்டார்கள் . கழுகு , அதை வெகு அவமானமாகவேக் கருதியது . ஆனால் காளி சொன்னால் சொன்னது தான் . தாஸின் கண்ணிலிருந்து எவருமே தப்ப முடியாது , அவனது வலது கரமாக நின்றான் . இன்னும் சிலத் தோழர்கள் துவாரபாலகர்கள். தோளை உயர்த்தி சிலிர்ப்பவர்கள் .