கனடா எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா! - குரு அரவிந்தன் -
நவம்பர் மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடா எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்களின் மூன்று நூல்கள் கனடா, ரெறன்ரோவில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றன. ரொறன்ரோ கிங்ஸ்டன் வீதியில் உள்ள ஸ்காபரோ விலேஜ் கொம்யூனிட்டி மண்டபத்தில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி, அகவணக்ம், முதற்குடிமக்களுக்கு நன்றி சொல்லல் போன்ற நிகழ்வுகள் முதலில் இடம் பெற்றன. கனடா தேடகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திரு. பா.அ. ஜயகரன் அவர்கள் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார்.
தலைவர் உரையில் எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்கள் தமிழ் இலக்கியத் துறையில் படைத்த சாதனைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், நண்பர் வ.ந. கிரிதரன் அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்ல பழகுவதற்குச் சிறந்த நண்பர் என்பதையும் மேலும் குறிப்பிட்டார். தலைவர் உரையைத் தொடர்ந்து நிகழ்வில் ‘வ.ந.கிரிதரன் கட்டுரைகள்’ பற்றி எழுத்தாளர் திரு. அருண்மொழிவர்மன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 166 பக்கங்களைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஜீவநதி வெளியீடாக வந்திருக்கின்றது.
தொடர்ந்து 23 அத்தியாயங்களைக் கொண்ட ‘நவீன விக்கிரமாதித்தன்’ என்ற நாவல் பற்றி சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான திரு. சிவா முருகுப்பிள்ளை அவர்கள் உரையாற்றினார்கள். வதிலைபிரபாவால் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டு, ஓவியா பதிப்பக வெளியீடாக வந்த இந்தப்புதினம் 152 பக்கங்களைக் கொண்டது.