(மீள்பிரசுரம்) மோகத்தின் நிழல் - சுகுமாரன் -
'அம்மா வந்தாள்' ஒன்றைத் தவிர தி. ஜானகிராமன் எழுதிய பிற நாவல்கள் எல்லாமும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. 'ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் 'கணையாழி' போன்ற சிறு பத்திரிகை களிலுமே அவை தொடராக வெளியாகியிருக்கின்றன. பிற்காலத்தில் வெகு ஜனப் பிரபலமுள்ள எழுத்தாளர்கள் உருவாக்கிய தொடர் கதை இலக்கணம் எதற்கும் தி.ஜாவின் நாவல்கள் உட்படாதவை. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசக எதிர்பார்ப்புக்காக ஏற்படுத்திய திடீர் திருப்பங்களோ சுவாரசியச் சிக்கல்களோ இல்லாமல் எழுதப்பட்டவை. எனவே தான் இந்த நாவல்களைத் தொடர்கதைகள் என்று சொல்லாமல், தொடர்கள் என்று குறிப்பிடுகிறேன்.
தி.ஜானகிராமனின் மாஸ்டர் பீஸான 'மோக முள்'ளும் தொடராக வெளி வந்த நாவல்தான். 1955 - 56 ஆண்டுகளில் 'சுதேசமித்திரன்' நாளிதழின் வாரப் பதிப்பில் தொடராக வெளிவந்தது. ஜானகிராமனின் நாவல்களிலேயே அளவில் பெரிய நாவல் இது. மிக அதிகமான பாத்திரங்கள் கொண்ட நாவலும் இதுதான். அவரது நாவல்களில் அதிக அளவு வாசகர்களைப் பெற்றதும் இதுவாகவே இருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் காரணம் அது பத்திரிகைத் தொடராக வெளிவந்ததுதான். ஆணின் விடலை மனப் பாங்குக்கு உகந்ததாக நாவலின் கதைப் போக்கு இருந்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். பதின் வயதில் தைக்கும் முள்ளின் நோவு காலம் கடந்தும் தீராத மோகமாகவே எஞ்சியிருக்கச் செய்யும் ரசவாதம் அதில் இருக்கிறது.