ஆய்வு: கலை, இலக்கியத் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதனும் இருப்பு பற்றிய அவரது பார்வையும்!.. - வ.ந.கிரிதரன் -
- ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' மின்னிதழில் வெளியான கட்டுரை. -
'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையினைப் பேராசிரியர் நா.வானமாமலை தனது 'ஆராய்ச்சி' என்னும் காலாண்டுப் பத்திரிகையில் பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துகள் பற்றியதாக எழுதியதற்குப் பதிலடியாக வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்தார். பேராசிரியர் கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலிற்குப் பதில் விமர்சனமாக வெ.சா. 'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்றொரு நீண்ட கட்டுரையினை , 'நடை' சஞ்சிகையில் தொடராக எழுதியிருந்தார். வெ.சா.வின் நீண்ட அக்கட்டுரைக்கு எதிரொலியாக நீண்டதொரு கட்டுரையொன்றினைப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதியிருந்தார். அது பின்னர் அவரது 'மார்க்சியத் திறனாய்வும், இலக்கியமும்' என்னும் நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது. அதிலவர் வெ.சா. தனது 'நா.வானமாமலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' என்றொரு கட்டுரையில் 'நான் கருத்து முதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று குறிப்பிட்டிருப்பார். அதனைத் தனது கட்டுரையில் நுஃமான் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
"'நான் கருத்துமுதல்வாதியா? பொருள் முதல்வாதியா? இரண்டும்தான். இரண்டும் இல்லைதான்' என்று சாமிநாதன் கூறுவது எவ்வளவு பேதமை, தத்துவ சித்தாந்தங்கள் எல்லாம் சாராம்சத்தில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற இரண்டு பிரிவுக்குள் ஏதோ ஒன்றுள் அடங்கும் என்பதும், சாமிநாதன் திட்டவட்டமாகக் கருத்துமுதல்வாதச் சிந்தனையாளன் என்பதும் தத்துவ விசாரத்தைப் பொறுத்தவரை இதுவும் அல்லாத அதுவும் இல்லாத 'அலி' பிறவிகள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மைகள்' ('மார்க்சியமும், இலக்கியத் திறனாய்வும்' பக்கம் 126)