(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (2): அட்டுவம்பட்டி - பிளம்ஸ் மரம் - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
அட்டுவம்பட்டி - பிளம்ஸ் மரம்
பள்ளங்கி போகும் வழியில், சப்த கன்னிமாரை பார்த்து, அவர்கள் பொருத்து கேட்டுவிட்டு போகும் நோக்கில், அந்த ஸ்டாப்பில் இறங்கி, அருகில் இருந்த தேனீர் கடைக்குள் நுழைந்தேன். காப்பியை குடித்து முடித்து, மாதிடம் கேட்டேன், கன்னிமார் கோயில் பொருத்து. ஏதேதோ தரவுகளை தர முயற்சித்துவிட்டு, “ஆனா இன்னும் தெரிஞ்சிக்கிறதுன்னா ரெண்டு வீடு தள்ளி இருக்கிற பச்ச வீட்டுல கேளுங்க… அவுக அந்த பூசாரிக்கு சொந்தகாரவுக – சம்பந்தம் இருக்கு…” என்று தணிந்த குரலில் ரகசியமாய் சொன்னாள்… அவள்.
“ஓ கன்னிமாரூ கோயிலா… குமாருன்னு ஒரு பூசாரி இருக்காரு… வில்லேஜ்ஜில கேளுங்க… சொல்லுவாங்க…” என்று அங்கு கூறப்பட்டது.
அட்டுவம்பட்டி என்பது (அப்போது) – அதாவது ஒரு ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு – ஒரு முப்பது நாற்பது வீடுகளை ஒன்று சேர்த்து ஒருபிடி பிடித்து வைத்தது போன்ற ஒரு தொகுதி. ஒடுங்கிய, அந்த பஸ் செல்லும் பாதையின் இரு மருங்கிலும், நெருக்கி நெருக்கி நிற்கும் வீடுகள். அனைத்துமே சிமென்டால் கட்டப்பட்டவை. அதாவது குடிசைகள் இல்லை – இதைத்தான் ஒரு விலேஜ் – கிராமம் என்று இப்பகுதியில் வர்ணிக்கின்றார்கள். இங்கு மாடுகளையும் காணமுடிவதில்லை… இரண்டொன்று தோட்டங்களில் தலையை குனிந்து அப்புறம் இப்புறம் பார்க்காமல் மேய்ந்து கொண்டிருப்பதுடன் சரி…
இது ஒரு மலைப்பகுதி… இரு புறமும் மலைத்தொடர்களின் சரிவுகள்… அச்சரிவுகள் சந்திக்ககூடிய பள்ளத்தாக்குகள் அல்லது படுக்கைகள் – இவற்றில்தான் இந்த குடியிருப்புகள் – வாகன பாதை அனைத்துமே அமைந்து கிடந்தன. பாதையை ஒட்டி இருந்த அந்த குட்டையான சிமென்ட் கட்டடத்திற்குள் இரண்டொரு நடுத்தர வயது பெண்கள் அமர்ந்து சாவதானமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகே ஒருத்தி சிறு சாப்பாட்டு கூடையுடன் நின்றவாறு பேசிக்கொண்டிருந்தாள். வினவினேன்.