வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (3) - கலாநிதி சு. குணேஸ்வரன் -
3.3.1 தமிழர் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரதிகள்சங்கிலியன் என்ற நாடக எழுத்துரு மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. ஈழத் தமிழ் மன்னன் பற்றிய நாடகம். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் சங்கிலியன் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் இதனை எழுதியுள்ளார். ஏற்கனவே தமிழ்ச்சூழலில் இது தொடர்பான பல நாடக நூல்கள் வந்திருக்கின்றன. மாதகல் புலவர் சூசைப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாட்டுக் கூத்து’, பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாடகம்’, காரை ந. சுந்தரம்பிள்ளையின் ‘சங்கிலியம்’, வித்துவான் கந்தையாவின் ‘சங்கிலியன் நாடகம்’, மு. அருட்பிரகாசத்தின் ‘மாவீரன் சங்கிலியன' ஆகியன எழுதப்பட்டுள்ளன. ஈழத்து அரசியல் வரலாற்றிலும் சங்கிலியன் அரசனுக்கு முக்கியத்துவம் உண்டு.
ஏழுமலைப்பிள்ளை இதனை நான்கு காட்சிகளைக் கொண்ட ஒர் எழுத்துருவாகத் தந்துள்ளார். காக்கைவன்னியன் சங்கிலியின் தளபதியை வஞ்சமாகக் கொலை செய்துவிட்டு பறங்கியருடன் சேர்ந்து சங்கிலியனைக் காட்டிக்கொடுப்பதே இந்நாடகம் ஆகும்.
யாழ்ப்பாண இராட்சியத்தின்மீது வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கும்போது சங்கிலியன் போருக்கான ஆயத்தங்களைச் செய்கிறான். வீரமாணிக்கதேவர் என்ற தளபதியை வீரநாயகனுடன் சேர்ந்து சதி செய்து காக்கை வன்னியன் கொல்கிறான். வீரமாணிக்க தேவன் இறந்ததறிந்து சங்கிலியன் துயரப்பட்டிருந்தபோது பறங்கியர் சங்கிலியனை அரண்மனையில் முற்றுகையிடுகின்றனர். இக்காட்சிகளின் ஊடாக சங்கிலியன் நாடகத்தை நகர்த்தியுள்ளார் ஏழுமலைப் பிள்ளை.