வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!

பதிப்பாளர் 'ஜீவநதி' பரணீதரனின் ஓர் அனுபவம்: ஈழத்து எழுத்தாளர்கள், புத்தகம் போட்டவர்கள், போட இருப்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய குறிப்பு! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளரும், ஜீவசஞ்சிகை ஆசிரியரும், பதிப்பாளருமான க.பரணீதரன் யாழ் நகரிலுள்ள ஒரு புகழ்பெற்ற புத்தகக் கடையில் தனக்கேற்பட்ட அனுபவத்தை விபரித்திருந்தார். மிகுந்த அதிர்ச்சியைத் தந்த அனுபவமாக அதனை வாசிக்கையில் நானும் உணர்ந்தேன். அவர் அங்கு எழுத்தாளர்களின் நூல்களை விற்பனைக்காகப் பத்துப் பிரதிகள் கொடுப்பது வழக்கம். பின்னர் ஒரு வருடம் கழித்துச் சென்று விற்கும் நூல்களின் பணத்தைப் பெறுவது வழக்கம். விற்காதவற்றை அங்கு தொடர்ந்து விற்க வைப்பது வழக்கம். வழக்கம் போல் இவ்விதம் அங்கு விற்பனைக்கு வைத்து அவர் , மூன்று வருடங்கள் பின்னர் அங்கு சென்றபோது அங்கு அவர் கொடுத்திருந்த நூல்களின் நிலைகண்டு அதிர்ச்சி அடைந்தார். நூல்கள் மீண்டும் பாவிக்கவே முடியாத அளவுக்கு அழுக்கான சூழலில் வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் அப்புத்தக்கடையில் விற்கப்படும் நூல்களுக்கான பணத்தைப் பெறுவதிலுள்ள சிரமங்களையும், அங்கு பணியாற்றுபவர்கள் நடந்துகொள்ளும் முறையினையும் கவலையுடன் விபரித்திருந்தார். தான் இவ்விதம் இப்பிரச்சினையை வெளிப்படுத்துவதற்குக் காரணம் அப்புத்தக்கடை நல்ல முறையில் தவறுகளைக் களைந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள். இப்புத்தக்கடை தன்னைச் சீரமைத்துக்கொள்ளாதவரை, எதிர்காலத்தில், உங்கள் பதிப்பகம் மூலம் என் நூல்கள் வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், என் நூல்களை அப்புத்தக்கடைக்குக் கொடுக்காதீர்கள்.
பரணீதரன் தனது பதிவில் புத்தகக் கடையின் பெயரைக்குறிப்பிடவில்லை. ஆனால் வேம்படி சந்தியிலுள்ள கடை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். கூகுள் வரைப்படத்தின் 'வீதிப்பார்வை' மூலம் அச்சந்தியை அவதானித்தபோது அதிலிருந்த ஒரேயொரு புத்தக்கடை பூபாலசிங்கம் புத்தகக் கடை என்பதை அறிந்து உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். பரணீதரனின் அக்கடையின் படத்தைக்காட்டி அதுவா கடை என்று கேட்டபோது அவர் ஆமென்றார்.
பூபாலசிங்கம் புத்தக்கடைக்கு இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமானதோர் இடமுண்டு. குறிப்பாக எழுத்தாளர்கள் சந்திக்கும் இடமாக, நூல்கள் வாங்கும் இடமாக அது விளங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நனவிடை தோய்தல்களில் அது நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அண்மையில் கனடாவில் மறைந்த எழுத்தாளர் இராஜகோபாலன் மாஸ்டர் கூட அங்குதான் பலரை எஸ்.பொ. , டொமினிக் ஜீவா என்று சந்தித்திருக்கின்றார். அது பற்றி டொமினிக் ஜீவா நனவிடை தோய்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவ்விதமானதொரு முக்கியமான புத்தகக் கடையில் புத்தகங்கள் இவ்விதம் அழுக்கான சூழலில், மீள்பாவனைக்குரியதல்லாத நிலையில் பேணப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல. விற்பனையான நூல்களுக்கான பணத்தைப் பெறுவதில் இவ்வளவு சிரமங்களைப் பதிப்பாளர்கள் எதிர்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பூபாலசிங்கம் பதிப்பகத்தார் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களென்று நிச்சயம் நம்புகின்றேன்.
இலங்கையின் ஒற்றையாட்சியும், தமிழ் அரசியல்வாதிகளும் , தமிழ்த்தேசியமும் பற்றி... - நந்திவர்ம பல்லவன் -

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2021.05.21 அன்று இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் குருநாகல் மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை. இனவாதம், மதவாதத்துக்கெதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் என் கவனத்தை ஈர்த்தன. இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி கடந்த ஐந்து வருடங்களாகத் (தேசிய மக்கள் சக்தி 2019இல் ஆரம்பிக்கப்பட்டது) தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாட்டு அரசியலைப்பற்றி விமர்சித்து வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பேராதவரவு அளித்திருக்கின்றோர்கள். ஆனால் இதுவரையில் எம் மக்கள் மத்தியில் எம் அரசியல் பற்றி எம் அரசியல்வாதிகள் எவரும் சுயவிமர்சனம் செய்யவில்லை. தொடர்ந்தும் எதற்கெடுத்தாலும் ஜேவிபியைப் பற்றி எமக்குத் தெரியும் என்பார்கள். தமிழ்த்தேசியம் தேசியம் என்று கூச்சலிடுவார்கள்.
முதலில் தமிழ்த்தேசியம் என்று கூறி வாக்குகள் கேட்டுவரும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களைத் தம் அரசியல்நலன்களுக்காக ஏமாற்றி வருகின்றார்கள். தமிழ்த் தேசியம் என்றால் தமிழ்த்தேசத்துக்கான உரிமை பற்றியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காகப் போராடினார்கள்.இறுதிவரை போராடி மடிந்தார்கள். அப்போராட்டம் தமிழ்த்தேசியப் போராட்டம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியம் பேசுவது ஏமாற்று வேலை. தமிழர்கள் பலருக்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று தெரியவில்லை. தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி முறையைக்கொண்டுள்ள இலங்கையின் அரசியல் அமைப்பை ஏற்பதாகச் சபதம் எடுத்துக்கொண்டே பதவியை ஏற்கின்றார்கள். அதனால் வரும் பயன்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களால் ஒருபோதும் தனிநாடு கோரிக்கையை முன் வைக்க முடியாது. இவர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டவர்கள். பிரிவினை கேட்பது தேசத்துரோகம்.
தமிழ்க்கட்சிகளுக்கு மத்தியில் தொகுதிப்பங்கீட்டுடன் கூடிய கூட்டணியொன்றின் அவசியம்! - நந்திவர்ம பல்லவன் -

இலங்கைத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை ஏற்படும் வரையில் தமிழர்கள் மத்தியில் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், ஏனைய தேசியக் கட்சிகள் எனப் பல கட்சிகள் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தனிநாட்டுக் கோரிக்கையடுத்து தமிழ்கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தற்போது மீண்டும் தனித்தனிக் கட்சிகளாகத் தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இது தவிர்க்க முடியாத நிகழ்வு. நாட்டில் மீண்டுமொரு தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியதாக மாறினால் ஒழிய இந்நிலை மாறப்போவதில்லை.
அதே சமயம் தமிழ்க் கட்சிகள் பலவும் தம் தனித்துவத்தை இழக்காமல், தம் வாக்கு வங்கிகளுக்கேற்பத் தொகுதிகளைப் பிரித்து கூட்டணி வைத்துக்கொண்டால் (தமிழகத்தில் கட்சிகள் செய்வதைப்போல்) நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பெரு வெற்றி அடையும் சாத்தியமுண்டு.
இவ்விதம் பல கட்சிகள் இருப்பதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. ஜனநாயகச் சூழலில் இதனை ஆரோக்கியமாகவே பார்க்கின்றேன். எல்லாக் கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் தம் செயற்பாடுகளை, நோக்கங்களைக் கூறுவதற்குப் பூரண உரிமையும், வசதிகளும் உள்ளன. இவற்றைப்பயன்படுத்தி மக்களைத் தம் பக்கம் திரும்ப வைப்பதில்தான் அவற்றின் திறமை தங்கியுள்ளது.
நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் பற்றி ... - நந்திவர்ம பல்லவன்-
இலங்கையென்னும் நாட்டில் அனைத்து மக்களும் சரிக்கு சமமாக இணைந்து வாழ்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையினை நீக்குவோம். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம். அதுவரை மாகாண சபையினை இயங்க வைப்போம். அரசியல் கைதிகளை விடுவிப்போம். ' இவ்விதம் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைக் கேட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு இன, மத, மொழி பேதமின்றி மக்கள் 2/3 அறுதிப் பெரும்பான்மையினை வழங்கியிருக்கின்றார்கள். பெரு வெற்றியை ஈட்டிய அவருக்கும் , ஏனையோருக்கும் வாழ்த்துகள். அநுர குமார திசநாயக்கவுக்கு இனித் தன் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்குத் தடைகள் எவையுமில்லை. அவர் அவற்றை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.
அவருக்குப் பெரு வெற்றியைக் கொடுத்த தமிழ் மக்கள் மட்டக்களப்பு மூலம் எச்சரிக்கையொன்றையும் கொடுத்திருக்கின்றார்கள். தன்னை நம்பி வாக்களித்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம். மகிந்த ராஜபக்சவுக்குக் கொடுக்காத வெற்றியை அநுர குமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வெற்றியைப் படிக்கல்லாக வைத்து நாட்டின் அனைத்துப் பிரச்னைகளையும் அவர் தீர்க்க வேண்டும். தீர்த்தால் வரலாற்றில் சரித்திர புருசனாக நிலைத்து நிற்பார். தவறின் வரலாறு மீண்டுமொரு தடவை சுழலும் பழைய இடத்தை நோக்கி.
உணர்ச்சித் தமிழ்த்தேசியத்திலிருந்து புரட்சிகரத் தமிழ்த்தேசியத்தை நோக்கி.... - நந்திவர்ம பல்லவன் -

யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தினர் அனுபவித்துவரும் பிரச்சினைகளைப்பற்றிச் சிங்கள ஊடகவியலாளரான ஷெலி உபுல் குமார, பிபிசி சிங்கள சேவையில் தெரிவித்த கருத்துகள் பி.பி.சி.சியின் தமிழ்ச்சேவை இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பிரசுரமாகியுள்ளது. இதில் 2022ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் ஷெலி உபுல் குமார யாழ்ப்பாணம் சென்று இது பற்றி ஆராய்ந்து இவ்வாவணத்தைத் தயாரித்துள்ளார்.
இதன்போது அவர் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது அவர் 'தாம் போராட்டங்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த பிரச்னை கிடையாது' என்று பதிலளித்திருக்கின்றார். இது மிகவும் தவறான தகவல் என்பதை நாம் அனைவரும் அறிவோம்., யாழ் மாவட்டக் கிராமங்களில் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் தம் சாதி அடையாளங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.
மீள் பிரசுரம் : அநுர குமார திசாநாயக்க - இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் - ஆங்கிலத்தில்: டி.பி.எஸ். ஜெயராஜ் | தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம் -

அண்மையில் ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் 'Leftist Star Rises Over Sri Lanka' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி Daily Mirror (Sri Lanaka) பத்திரிகையில் எழுதிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பற்றிய கட்டுரை ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு வீரகேசரியில் வெளியானது. அதனை ஒரு தகவலுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.- பதிவுகள்.காம் -
அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ‘ (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரத்தின் ‘ பிரதிகள் பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது.
இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஒரு அர்த்தத்தில் இன்று இலங்கை வானில் எழுந்திருக்கும் சிவப்பு நட்சத்திரம் அல்லது இடதுசாரி நட்சத்திரமே . அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபல்யமாக அறியப்பட்ட திசாநாயக்க 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையின் ஒனபதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்றார்.
55 வயதான திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர். ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்து பிறகு அரசியல் கட்சியாக மாறிய ஜே.வி.பி. ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது.
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா!

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலும், வடகிழக்கு வாக்காளார்களின் தெரிவுகளும் பற்றி...

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல ஆரோக்கியமான முக்கியமான விடயங்களை நான் காண்கின்றேன். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அனுர குமார திசாநாயக்க இத்தேர்தலை ஆரோக்கியமாகக் கையாண்டுள்ளார். அவற்றைப் பட்டியலிட்டால் முக்கியமானவையாக நான் கருதுவது இவற்றைத்தான்.
1. முதன் முறையாகப் பிரதான தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்களத் தேசியம், இனவாதம் போன்ற மக்களை உணர்ச்சியிலாழ்த்தும் விடயங்களை முக்கிய பிரச்சாரமாகக் கைக்கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை.
2. அனுரா குமார திசாநாயக்கவின் சில உரைகளை நான் கேட்டேன். ஓர் உரையில் அவர் தோட்டத்தொழிலாளர்களின் நிலையினை , அவர்கள்தம் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.
புதிய மாற்றத்தின் குறியீடு அநுரா குமார திசாநாயக்க! - வ.ந.கி -

நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது, இதுவரை இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாரம்பரிய அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிப்பொறுப்பை மார்க்சியச் சிந்தனைகள் மிக்க கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் 'தேசிய மக்கள் சக்தி' வேட்பாளரான அனுரா குமார திசாநாயக்கவிடம் கையளித்திருக்கின்றார்கள் மக்கள். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்.
தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் ஏனைய சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. புதிய இளந்தலைமுறையினர் இவ்வின மக்களின் அரசியலைக் கையெடுக்கும் வேளை ஏற்பட்டிருக்கின்றது. அரசியல்வாதிகள் இன, மத, மொழி வாதங்கள் மூலம் தம் அரசியல் நலன்களுக்காக மக்களைப் பிரித்து வைத்ததே நாட்டின் சிறுபான்மையின மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்குக் காரணம். தனது பிரச்சாரங்களில் மத வாதம், இனவாதம் போன்ற பிரிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார் புதிய ஜனாதிபதி. அவர் அதனை நடைமுறைப் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். சவால் நிறைந்த எதிர்காலம் அவருக்காகக் காத்திருக்கின்றது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றியடையவார் என்று நம்புவோம். வாழ்த்துகிறோம்.
வ.ந.கிரிதரனின் புதிய பாடல்கள் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில்!

இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI - - 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் கேட்டுக் களிக்க
1. அலைந்து திரியும் அகதி மேகமே!
நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி அகதியாக அலையும் ஓர் அகதி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=k5ayU9KObjc
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
நாடு விட்டு நாடு நகர்கின்றாய்.
ஊரு விட்டு ஊரு செல்கின்றாய்.
இருப்பதற்கு ஒரு நாடு உனக்கும்
இல்லையோ மேகமே சொல்லுவாய் எனக்கு.
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
போரில் நீயும் குடும்பம் இழந்தாயோ?
இருந்த வீடும் இடிந்து போனதுவோ?
படையினர் உன் வீட்டை அபகரித்தனரோ?
புகலிடம் நாடி புலம் பெயர்ந்தாயோ?
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு உதவி! - முருகபூபதி -

இலங்கையில் முன்னர் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் இந்த வாரம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு கல்வி நிதியத்தின் அம்பாறை மாவட்ட தொடர்பாளர் அமைப்பான பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் தலைவர் திரு. ந. கமலநாதன்( ஓய்வு நிலை அதிபர் ) அவர்களின் தலைமையில் இருதினங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் நிறுவகத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஓர் உலகக் குடிமகனின் தன் நாட்டு அரசியல் பற்றிய சிந்தனைகள்... - வ.ந.கிரிதரன் -
சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.
தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப் பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
வலிமையான பாரதத்துடன் ஏற்படுத்திய 13 அம்ச ஒப்பந்தத்தையே இதுவரையில் நடைமுறைப் படுத்தாமல் இலங்கை அரசு இருக்கும் நிலையில், முதலில் செய்ய வேண்டியது அதனை நடைமுறைப்படுத்த வேண்டி வலியுறுத்துவதுதான். அவ்விதமானதொரு சூழல் எற்பட்டால், அத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டால், காலப்போக்கில் இலங்கையில் மாகாண சபைகள் நன்கு செயல்படத் தொடங்கினால், மாகாண சபைகளின் குறைபாடுகளை மேலும் நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளை வலியுறுத்தலாம். அடுத்த கட்டமாக மாகாண சபைகளை மாநில அரசுகளாக மாற்றும்படி , சமஷ்டி முறையிலான மாநில அரசுகளாக மாற்றும்படி வலியுறுத்தலாம்.
அஞ்சலி! எழுத்தாளர் அ.சேகுவேரா மறைவு! ஆழ்ந்த இரங்கல். - வ.ந.கி -

எழுநா குழுமம் தன் முகநூற் பதிவில் ஊடகவியலாளரும், முன்னாட் போராளியும், வவுனியா பிரசைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும்,, எழுநா ஆவணப்பட வரிசைப் பொறுப்பாளருமான இசைப்பிரியன் என்று அறியப்பட்ட அ.சேகுவேராவின் மறைவுச் செய்தியினை அறிவித்திருந்தது. ஆழ்ந்த இரங்கல்.
அ.சேகுவேரா என்ற பெயரைக்கேட்டதும் உடனடியாக நினைவுக்கு வந்தது பதிவுகள் இணைய இதழுக்கு இவர் அனுப்பிய கவிதைகள், கட்டுரைகள்தாம். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலிலிருந்து தன் படைப்புகளை அனுப்புவார். சில வேளைகளில் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலிலிருந்தும் அனுப்புவார். அவரது கவிதைகள், கட்டுரைகள் சமுதாயப் பிரக்ஞை மிக்க அவரது ஆளுமையை வெளிப்படுத்தின. அதனால் அவற்றைப் பதிவுகள் பிரசுரித்தது.
படைப்புகளூடு மட்டுமே எனக்கு இவருடனான தொடர்பிருந்தது. நேரடியாக நான் அறிந்திருக்கவில்லை. எழுநா குழுமத்தின் இவரது மறைவுச் செய்தி பற்றிய பதிவே எனக்கு இவரைப்பற்றிய நினைவுகள் மீள் ஏற்படுத்தின. இவரது நினைவாக இவர் அனுப்பிப் பதிவுகளில் வெளியான கட்டுரைகளை,கவிதைகளை மீளப்பதிவிடுகின்றேன். ஒரு வகையில் இவை ஆவணப்பதிவுகளாகவும் இருக்கும் என்பதால் முக்கியத்துவம் மிக்கவை.
எழுத்தாளர் அ.சேகுவேராவின் பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகள்:
1. 08 மார்ச் 2014 - “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்! - அ.ஈழம் சேகுவேரா (இளம் ஊடகவியலாளர்-இலங்கை.) -
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21வது கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன், சூடான வாதப்பிரதிவாதங்களுடன் ஆரம்பித்திருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை, அதிருப்தியை சர்வதேச நாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள்-ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா அரசால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியலுரிமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும், காத்திரமான அனைத்துல விசாரணைகள் நடத்தப்பட்டு, இலங்கை ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு இலங்கையைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அ.ஈழம் சேகுவேரா மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.” எனும் இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, காலப்பதிவாக அதன் முழு விவரமும் இங்கு பிரசுரமாகிறது. குறித்த மனு தொடர்பான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் முகவரியூடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
அஞ்சலி: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின - தன் கொள்கையில் நோக்கில் தெளிவும் திடமும் மிக்க தலைவர்களில் ஒருவர். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைக்குரலாக ஒலித்த தென்னிலங்கை அரசியல்வாதி. - வ.ந.கி -

தென்னிலங்கை அரசியல்வாதிகளில் மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தனது கொள்கைகளில் தெளிவுடனிருந்தவர். திடத்துடனிருந்தார். நாடு இனவாதச் சேற்றில் மூழ்கியிருக்கையில் அதற்கெதிராகச் செயற்பட்டவர். நடைபெற்ற யுத்தத்திற்கு ஒருபோதுமே நிதிப்பங்களிப்பு செய்ய மாட்டேனென்று அவர் மேல் மாகாண சபையில் ஆற்றிய உரை முக்கியத்துவம் மிக்கது.
இலங்கையின் சிறுபான்மை மக்களின், குறிப்பாகத் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பற்றி, அவர்கள் அடைந்த இன்னல்கள் விடயத்தில் தெளிவுடனிருந்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின. எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். தனது உறுதியான , தெளிவான அவரது அரசியல் செயற்பாட்டால், நோக்கால் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் பல. பதவி இழந்தார். தலை மறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இவற்றாலெல்லாம் அவர் கலங்கி அடிபணியாமல் தான் கொண்ட கொள்கையில், சிந்தனைகளில் உறுதியுடன் இருந்தார். இதுவே அவரது மிக முக்கியமான ஆளுமை அம்சம்.
மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் பற்றி.. - வ.ந.கி -

மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவின் சாவகச்சேரி மருத்துவ நிலையக் குறைபாடுகள் ,மற்றும் யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள் சிலரின் நடவடிக்கைகள் பற்றிய காணொளிகளைப் பார்த்தேன். இவர் கூறும் மருத்துவச் சீர்கேடுகள் முக்கியமானவை. தீர்க்கப்பட வேண்டியவை. இவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததற்காக இவரைப் பாராட்டலாம்.
அதே சமயம் பொதுவெளியில் நடந்து கொள்ளும் இவரது ஆளுமை அம்சங்கள் விடயத்தில் இவர் சிறிது கவனம் எடுக்க வேண்டும். தனக்குச் சார்ப்பான விடயம் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவர் குழந்தையைப் போல் துள்ளிக் குதிக்கின்றார். ஊடகவியலாளர் ஒருவருடன் இன்னுமொரு மருத்துவர் பற்றி உரையாடும் சமயத்தில் , அவ்வூடகவியலாளர் இவர் குற்றஞ் சுமத்தும் மருத்துவரை வானலைக்கு அழைக்கையில் அம்மருத்துவர் இணைப்பைத் துண்டித்து விடுகின்றார். அம்மருத்துவர் செய்தது சரியான செயல். உடனே இவர் துள்ளிக் குதித்து 'நான் சொன்னேன் பார்த்தியா' என்பதுபோல் ஏதோ கூறுகின்றார்.
இவர் இன்னுமொரு மருத்துவருடன் அவருக்குத் தெரியாமல் தொலைபேசியில் உரையாடிக்கொண்டே , அம்மருத்துவரின் உரையாடலை ஒலிப்பதிவு செய்கின்றார். அம்மருத்துவரோ ஆளுமை விடயத்தில் இன்னும் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றார். பரதேசி என்று வார்த்தைப் பிரயோகமும் செய்கின்றார்.
அஞ்சலி: சமூக, அரசியற் செயற்பாட்டாளர் போல் சத்தியநேசன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபையின் முன்னாள் உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களின் மறைவுச் செய்தியை முகநூல் தாங்கி வந்தது. இவர் என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. எதிர்பாராத மறைவுச் செய்திகளைத் தாங்கி வருவது முகநூலின் இயல்புகளில் ஒன்று. இவரது மறைவுச் செய்தியும் அவற்றிலொன்று. இவரது திடீர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர் துயரிலும் பங்குகொள்கின்றோம். ஆழ்ந்த இரங்கல்.
இவரை நான் ஒரு தடவை, நவம்பர் 2018இல் 'டொராண்டோ'வில் சந்தித்துள்ளேன். நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா), எழுத்தாளர் கடல்புத்திரனுடன் சந்தித்து உரையாடிய தருணங்களைப் பதிவுகள் இணைய இதழிலும், முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதனை இத்தருணத்தில் மீண்டுமொரு தடவை நினைவு கூர்கின்றேன்.
(பதிவுகள்.காம்) நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!
தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாகவும் பதவி வகித்திருக்கின்றார். கிழக்கு இலணடன் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையினைப்பாராட்டி, இவருக்கு கெளரவ பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
200 வருட வரலாற்றுப் பூர்த்தி! இரண்டு நூற்றாண்டுகளாக மலையக மக்கள் இந்த நாட்டுக்கு செய்த பாரிய பங்களிப்பு! - சட்டத்தரணி இரா. சடகோபன், தலைவர், மலையக மக்கள் ஆய்வு அபிவிருத்தி மன்றம் -

மலையக தமிழ் மக்களின் வரலாறு மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்க்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரரீதியிலும் ஏனைய பல்வேறு வழிகளிலும் எந்தளவுக்கு ஆழக் கால் பதித்துள்ளனர் என்பதை சீர்தூக்கிப் பார்த்து அதனை இந்த நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் உரிமைகளையும் கோரிக்கைகளையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டிய அவசியமும் தேவையும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மக்கள் இந்த நாட்டில் குடியேற மூல காரணமாக அமைந்தது.இலங்கையில் முதல் முறையாக 1820 களை ஒட்டிய தசாப்தத்தின் முற்பகுதியில் இலங்கை க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பிப் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாகும். மலைநாட்டின் கம்பளைக்கருகாமை யில் காணப்பட்ட சிங்ஹபிட்டி என்ற இடத்தில் வெறுமனே 150 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஒரு தசாப்த காலத்திலேயே இலட்சம் ஏக்கர்களாகப் பெருகி அதற்கப்பாலும் வளர்ச்சியடைந்து, பின்னர் இந்நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேராக மாற்றமடைந்தது.
அஞ்சலி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்தார்!

அரசியல், திரைப்பட ஆய்வாளார் ரதனின் 'கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா?" என்னும் 'தாய்வீடு'க் கட்டுரை பற்றி.... வ.ந.கி -

கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா' என்னுமொரு கட்டுரையை அரசியல், திரைப்பட ஆய்வாளர் ரதன் ஜூன் மாதத் தாய் வீடு பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். அதில் ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"2000-ம் ஆண்டில் 250,000 டொலருக்கு விற்கப்பட்ட ஒரு வீ டு , 2020-ல் 1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்படுகின்றது . இது 500 வீ த அதிகரிப்பாகும் . வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது. இதனால் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் கனடிய வீட் டுச் சந்தையில் முதலிடுகின்றார்கள் . கனடாவில் வாழ்கின்றவர்களும் பல வீ டுகைள வாங்குகின்றார்கள் . வாடகையும் அதிகமாகவிருப்பதனால் வீட் டுக்கடன்கைள செலுத்துவதும் சிரமமற்று உள்ளது ."
இங்கு அவர் 'வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது' என்று கூறுகின்றார். எண்பதுகளின் நடுப்பகுதியில் கனடாவில் , குறிப்பாக 'டொராண்டோ'வில் வீட்டு விலைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. அவ்விதம் அதிகரித்த வீட்டு விலைகள் அதலபாதாளத்துக்குச் சரியத்தொடங்கின 1989 காலகட்டத்தில் தொடங்கிய பொருளாதார மந்தத்தில். அக்காலகட்டத்தில் $340,000 ற்குக்கட்டப்பட்ட , நான்கு அறைகள் கொண்ட தனி வீடுகள் $200,000ற்குச் சரிந்தன. அதன் பின் மீண்டும் அந்த விலைக்கு மீண்டு வர சுமார் 20 வருடங்கள் எடுத்தன. 2009இல்தான் அது சாத்தியமானது. அக்காலகட்டத்தில் பல வீடுகளை வாங்கிய பலர் அவற்றை இழந்திருக்கின்றார்கள். இவற்றைப்பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கனடாவில் எவ்விதம் வீட்டு விலைகள் மாறுதலடைந்துள்ளன என்பதை அறிய இவ்வரலாறு உதவும்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி!

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை. யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை. இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.
அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மை. இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.
பேரின்பப் பெருநாள் வாழ்த்து! - செ. சுதர்சன் -

01)
தலைப்பிறை கண்டார் அன்பர்;
தரணியே அன்பால் பொங்கும்
அலையருள் வீசல் கண்டேன்!
ஆதவன் 'அல்லாஹ்' என்றே
கலைக்குரல் எழுப்பி வானில்
கைகளைக் கூப்பல் கண்டேன்!
விலைமதிப் பில்லா நல்ல
வீரிய விரதம் வாழ்க!
02)
பள்ளியின் வாங்கு வானில்
பாடிய செய்தி கேட்டேன்!
அள்ளியே இன்ப வாழ்த்தை
ஆருயிர்த் தோழருக்கு,
கள்ளதில் வண்டு பாடும்
கவியதில் பந்தி வைத்தேன்!
தள்ளியே தாழ்வு போகத்
தளிர்த்தன உலகு எல்லாம்!
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் - மீண்டும் எழுந்து வருக! - வ.ந.கி -

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்மையில் உடல் நிலை காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு,சத்திர சிகிச்சையின் பின்னர் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார். இதனை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கவிஞர் மிக விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த மனோதிடமும், நம்பிக்கையும் உள்ள ஆளுமை அவர்.
அவர் பூரண நலத்துடன் மீளட்டும். இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடட்டும்.
கார்ல் மார்க்ஸ்: வாழ்க நீ எம்மான்!
'
வாழ்க நீ எம்மான்! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற'வர்க்கு
துருவத்துச் சுடரென நின்றாய்.
சுடர்ந்தாய். வாழ்க! வாழ்க!
-
மே 14 கார்ல் மார்க்ஸ் அமரரான தினம். -
பயனுள்ள இணைப்பு - https://www.history.com/topics/european-history/karl-marx
அஞ்சலி: முன்னாள் கனடாப் பிரதமர் பிரயன் மல்ரோனி (Brian Mulrony) மறைவு!

குடிவரவாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற கனடியப் பழமைவாதக் கட்சியின் தலைவராக அமரர் பிரயன் மல்ரோனியைக் (Brian Mulroney) கூறலாம். இவரது ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிவரவாளர்களுக்கான 'நிர்வாக மறுபரிசீலனை' த் திட்டத்தின் (Administrative Review - ADR) மூலம் கனடாவில் தங்கியிருந்த அகதிக்கோரிக்கைக்காரர்கள், சட்டவிரோதக் குடிவரவாளர்கள் ஆயிரக்கணக்கில் பயனடைந்தார்கள். நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றார்கள்.
இவரது ஆட்சிக்காலத்தில் முதன் முறையாகக் கப்பலில் நியூ ஃபவுணலாந்துக் கரையில் வந்திறங்கிய இலங்கைத் தமிழ் அகதிகள் காப்பாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள். எதிர்ப்புகளை மீறி அவர் அப்போது கூறிய வார்த்தைகள் முக்கியம். அவர் கூறினார் "we are not in the business of turning away refugees." அக்கூற்றே அன்று வந்திறங்கிய தமிழ் அகதிகள் பிரச்சனையைத் தீர்க்கப் போதுமானதாகவிருந்தது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









