மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்!
பயனுள்ள மீள்பிரசுரம்: இனியொரு.காம்
மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் சந்திக்கும் எதிர்பார்ப்போடு கண்டியில் வைத்து நாங்கள் பிரிந்து சென்றோம். பதின்மூன்றாம் திகதி முற்பகலில் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் மிகிந்தலை, மடுப்பள்ளியைத் தரிசித்தபடி மன்னாரை அண்மிக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. அடுத்த நாள் காலை நெற்களஞ்சியப் பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டோம். அன்றிலிருந்துதான் நெற்களஞ்சியப் பிரதேசங்களில் ஐந்துநாட்கள் ஆரம்பமாகிறது.