பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் (Integrating) அவசியம்
'ஊடறு' தளத்திலிருந்து மீள்பிரசுரம்!அறிமுகம் இன்று பல நாடுகளில் முறைசார்ந்த கல்வியில் பால்நிலை பற்றிய பாடத்திட்டத்தினைப் புகுத்த வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு உண்டாகியிருக்கின்றது. சிலவற்றில் வெவ்வேறு உருவங்களில் கல்வியில் பால்நிலை பற்றிய விளக்கம் புகுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. இலங்கையிலும் இந்த எண்ணக்கரு இப்பொழுது தேசியக் கல்வி நிறுவகத்தில் உருக்கொண்டு வருகின்றது. எந்தக் கல்விக் கொள்கை செயற்படுத்தப்பட்டாலும், எப்படியான சிறந்த புதிய பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கடைசியில் பாடசாலை வகுப்புக்களில் இவற்றையெல்லாம் செயலில் வடிவமைப்பவர்கள் ஆசிரியர்களேயாகும். ஆசிரியர்களுக்குப் பூரண விளக்கம் இல்லாது எந்தக் கல்விக்கொள்கையையும் நாம் நடைமுறைப்படுத்த இயலாது. இதற்காகத்தான், பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் தேவையையும், அதன் தாற்பரியங்களையும் எடுத்துக்கூற இந்தக் கட்டுரை விளைகிறது. பால்நிலை என்றால் என்ன என்பதிலிருந்து, அது எவ்வாறுஉருவாக்கப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, அதனை எவ்வாறு பாடசாலைக் கல்வியில் நாம் புகுத்தலாம் என்னும் பல விடயங்களை இது கையாளுகின்றது.