மீள்பிரசுரம்: http://www.bbc.co.uk
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி என்றறியப்படும் இரா.தியாகராஜன் ஞாயிறன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77. கடந்த ஓராண்டு காலமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அரசியல் கட்டுரைகளை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். நண்பர்களிடம் மணிக்கணக்கில் நாட்டு நிலை பற்றி விவாதிப்பார். திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். திமுக தலைமைக்கு நெருக்கமானவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலர் மகேந்திரன் போன்றோரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் மயிலை மயானத்திற்கு வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் பெருந்திரளாக இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
சின்னக்குத்தூசி திருமண்ம் செய்துகொள்ளவில்லை. அவரை நக்கீரன் தமிழிதழ் வெளியீட்டாளர் கோபால்தான் பராமரித்து வந்தார். நக்கீரன் அலுவலகத்தில்தான் அவரது உடலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த்து. சின்னக்குத்தூசி திருவாரூரில் பிறந்தார். திராவிட இயக்க கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
தமிழ்த் தேசியக் கட்சி நிறுவனர் ஈ.வி.கி.சம்பத்திற்கு நெருக்கமானவராக இருந்தார். அக் கட்சியின் அதிகார பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்த பிறகு, காங்கிரசின் 'நவசக்தி'யிலும் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார். நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார் அவர். கர்நாடக இசையிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பழகுவதற்கு மிக இனிமையானவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லா தரப்புக்களிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். இறுதிவரை மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தனது அரசியல் தொடர்புகளை சுயலாபத்திற்காக பயன்படுத்தாத அபூர்வ மனிதர் என்பதாலேயே பலரின் நன்மதிப்பை அவர் பெற்றிருந்தார்
நன்றி: http://www.bbc.co.uk/tamil/news/story/2011/05/110522_chinnakuthoosi.shtml