உலகத் தமிழர் பேரவையானது இலங்கை வாழ் இசுலாமியருடன் கைகோர்த்து நிற்கின்றது!
[ஏப்பிரல் 28, 2012] மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20, 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில், சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீவிரவாதப் புத்த மதத்தினர், சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமையும் பள்ளிவாசலை அகற்றி அதனை வேறிடத்திற்கு மாற்றும்படி பிரதம மந்திரி இட்ட கட்டளையும், இலங்கைத் தீவில் அரச உயர் அதிகாரிகள் மதச் சுதந்திரத்தை தொடர்ந்து மீறிவருவதையும் புத்த மதம் தவிர்ந்த மற்றைய மதங்கள்மீதான அவர்களின் சகிப்பின்மையையும் கோடிட்டுக் காட்டுகின்றன. பிரதம மந்திரியின் இம்முடிவானது இசுலாமியரின் அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டதெனப் பிரதம மந்திரியின் அலுவலகம் அறிவித்துள்ள போதிலும, செய்தி ஊடகங்களில் வெளிவந்தது போன்று, இந்த அறிவித்தல் வன்மையாக மறுக்கப்பட்டுள்ளமை மேலும் கவலையளிப்பதாக உள்ளது. இன நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் பெரும்பான்மையினரின் அழுத்தங்களுக்கு அடிபணிதல் என்பது அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசுகளின் சிறப்பியல்பாக இருந்து வருகின்றது.