பயனுள்ள மீள்பிரசுரம்: வடக்கு பௌத்தம் யாருடையது?
வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது? எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக இருந்தாலும், அது பௌத்தத் தன்மை கொண்டதாக இருந்தால் அடித்து நொருக்கப்பட வேண்டியது என்கிற மன நிலையை தமிழர்க்கும், மிகவும் அரிதான பண்பாட்டுத் தடயமாக இருந்தாலும், கிடைக்கின்ற இந்த மத எச்சங்கள் சிதைக்கப்படவேண்டிய ஆதிக்கக் குறியீடுகள் என்கிற மனநிலையை சிங்களவர்களுக்கும் இலங்கையின் அரசியல் கற்பித்து வைத்துள்ளது. ஒரு பெருந் தத்துவம் மதமாகி, தீவிர அரசியல் மயப்பட்டதன் விளைவே இது. ஆனால், உண்மையில் இலங்கையில் அரசியல் முரணை எதிர்நோக்குகின்ற இரு இனங்களும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இலங்கையில் மதங்களுக்கு மோசமான அரசியல் அடையாளங்கள் இருப்பதன் பின்னணியை விளங்கிக் கொண்டு, அதனை அறிவுசார் தளத்தில் அணுகவேண்டும். வடபாகத்தில் கிடைக்கின்ற பௌத்த எச்சங்களையும் சிங்களவர்களும், தமிழர்களும் ஆக்கிரமிப்பின் தடயமாக, நிலம் கவர்தலுக்கான ஆதாரமாகக் கொள்ளாமல் சரியான வரலாற்று – பண்பாட்டு புரிதலின் அடிப்படையில் அதை நோக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாகச் செய்யவேண்டியது, எந்தப் பண்பாடு சார்ந்த தொல்பொருட்களை கண்டுபிடித்தாலும் உடனேயே இது இத்தனையாம் நூற்றாண்டுக்குரியது, இந்த மன்னருக்குரியது, இந்த சமயத்துக்குரியது, இந்த மொழிக்குரியது என்கிற முடிவுக்கு வராமலிருக்க வேண்டும். ஒழுங்கான அகழ்வாய்வுகள் துறைசார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படாது முடிவுகளாக செய்திகள் அறிவிக்கப்படுகின்றமை மேலும் இன முரண்பாட்டுக்கூர்மையை அதிகப்படுத்தும்.