
இலஙகை அழகான எழில் மிகு தீவு! பெளத்த, இந்து, முஸ்லிம், மலே எனப் பல்லின மக்களும் வாழும் இந்து சமுத்திரத்தின் சொர்க்கம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவு. கடல் வளம், நில வளம், இயற்கை வளம் மிக்கதொரு நாடு.
இந்த நாட்டுக்கு இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம். முள்ளிவாய்க்கால் வேண்டாம். இதுவரை நடந்த துயரங்களால் துவண்டு போயிருக்கிறது நாடு.இவற்றிலிருந்து மீண்டு வருவது எதிர்கால வளத்துக்கு மிகவும் அவசியம்.
இதுவரை இனவாதத்தால் மூழ்கடித்த அரசியல்வாதிகள் மூலையில் கிடக்கும் சூழல். இன்றுள்ள அரசு, கடந்த கால அரசுகள் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த இனரீதியிலான அழிவுகளுக்கு, படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கலாம்.
இதுவரை கால இனவாத அரசுகள் கடைப்பிடித்த கொள்கைகளை இனியும் கடைப்பிடிக்க மாட்டோம் எனப்பகிரங்கமாக உறுதி எடுப்பது அவசியம். காணி ஆக்கிரமிப்பு, அடக்குமுறைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று இன்றுள்ள அரசு உறுதி எடுக்கலாம். செம்மணிப் புதைகுழிகளுக்குள் புதைந்தவர்கள், முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள், இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்ட இனவாத அடக்குமுறைகள், படுகொலைகள், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி வழங்குவோம் உறுதி அளிக்கலாம் . இவற்றின் மூலம் நாட்டை நல்லதோர் எதிர்காலம் நோக்கித் திருப்பலாம்.
அரசன் எவ்வழி! குடிகள் அவ்வழி! நாட்டை ஆளும் அரசின் கைக்களிலேயே இந்நாட்டைச் சரியான பாதைக்குத் திசை திருப்புவது தங்கியுள்ளது.
அதற்கு முதற்படியாக கறுப்பு ஜூலையை நினைவுபடுத்தும் ,குறியீடாக நிற்கும் இந்த மனிதனுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இந்த மனிதன் தமிழ்ன் என்பது தெரிகிறது. புகைப்படம் இந்த மனிதனையும், இவனை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களையும் வெளிக்காட்டுகின்றது. காலம் தாழ்த்தியென்றாலும் இம்மனிதனுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவன் யார் என்பது தெரியாது/ இவன் உறவினர்கள், குடும்பத்தினர் எவர் என்பதும் தெரியாது. தெரிந்ததெல்லாம் தமிழர் என்னும் காரணத்தினால் , இனவாதக் காடையினரால் கொல்லப்பட்டவர் இவர் என்பது மட்டுமே.
இந்த மனிதனை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை அடையாளங்க் காண்பதுடன், அவர்களை வெளிப்படுத்துவதுடன், இன்னும் அவர்கள் உயிருடனிருந்தால் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இம்மனிதனுக்கு நீதி கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுப்பதும் , இவனது குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் நீதி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதனை இன்று நாட்டை ஆளும் அரசு செய்யுமா? செய்தால் இந்நாடு சரியான திசைக்குத் திரும்புவதற்குரிய முதற்படியாக அது அமையும்.
மீண்டுமொரு தடவை கறுப்பு ஜூலை வேண்டாம். ஆண்டுகள் பல கடந்தும் கிடைக்காத நீதி , நடக்கும் ஆண்டிலாவது கிடைக்கட்டும்.
கறுப்பு ஜூலை பற்றிய , அவசியம் பார்க்க வேண்டிய இணைப்பு - https://www.facebook.com/share/p/1D3Ak6Go5C/



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









