காலத்துக்காலம் தென்னிலங்கையிலிருந்து இனவாதத்தைக் கக்கும் அமைச்சர்கள் தம் சுய அரசியல் இலாபங்களுக்காக உருவாகிக்கொண்டு வருவதை வரலாற்றினூடு பார்த்து வருகின்றோம். முன்னாள் கடற்படை அதிகாரியும், அமைச்சருமான சரத் வீரசேகரா இன்றுள்ள சிறில் மத்தியூவாகத் தன்னைத் தென்னிலங்கை அரசியலில் கட்டமைத்து வருன்றார்.
அண்மையில் தனது இந்திய விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் தரை வழி இணைப்பை உருவாக்குவது பற்றிய தனது ஆலோசனையை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன். இது பற்றிக்குறிப்பிட்ட சரத் வீரசேகர முட்டாள்தனமாக அது இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இலங்கையைப்பொறுத்தவரையில் இந்தியா ஏற்கனவே வலுவாகக் காலூன்றி விட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல, சீனாவும்தான். அது அவரது கண்களுக்குத் தெரியவில்லை. இந்தியா உறுதியாக தன் பாதுகாப்புக்கு இலங்கைக்கான தரைவழி இணைப்பு அவசியமென்றி முடிவு செய்தால், இலங்கை விரும்பாவிட்டாலும் இலங்கைக்கான தரை வழி இணைப்பை உருவாக்கியே தீரும். ஒரு கணம் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவான வரலாற்றை நினைத்துப் பாருங்கள். முதலில் படகுகுகளில் உணவுப்பொதிகளை அனுப்பினார்கள். படகுகளை இலங்கைக் கடற்படையினர் திருப்பி அனுப்பினர். அதனை வெற்றிச் செயலாகத் தென்னிலங்கைப் பத்திரிகைகள் கொண்டாடின. அடுத்தநாளே விமானத்தில் வந்து உணவுப்பொதிகளை வீசியது இந்திய விமானப்படை. வாலைச்சுருட்டிக்கொண்டு கிடந்தது சரத் வீரசேகரா பணியாற்றிய இலங்கை விமானப்படை. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் காலடியில் சரணடைந்தார் 'தம்'மிஷ்டர் ஜே.ஆர். இது வரலாறு. சரத் வீரசேகரா கூக்குரலிடுவதற்கு முன்னர் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
இன்று மீண்டும் சரத் வீரசேகரா சிங்கள தேசியக்கூக்குரல் இடுகின்றார். சிங்களத் தேசியமோ, தமிழ்த்தேசியமோ நட்புரீதியில் அமைந்திருக்க வேண்டும். பகைமை மிக்கதாக வளர்க்கப்படுமானால் இலங்கையின் அமைதி சீர்குலைந்து விடும். அதுதான் முன்பு நடந்தது.
தெற்கு , வடக்கும், கிழக்கு, மேற்கு, மத்தி என நாட்டின் எந்தப்பகுதியென்றாலும் மக்கள் இனவாதத்தேசியம் உருப்பெறுவதை அனுமதிக்கக் கூடாது. இனவாதமற்ற தேசியம் அவசியமானது. இனங்கள் தம்மைப்பற்றி அறந்து கொள்ள , உணர்ந்து கொள்ள அது அவசியமானது. ஆனால் அது இனவாதத்தேசியமாக ஒருபோதும் மாறி விடக்கூடாது.