பிரான்சில் டானியல் ஜெயந்தனின் 'வயல் மாதா'சிறுகதைத்தொகுப்பு கத்தோலிக்க மதத்தை நிந்திக்கிறது என்னும் காரணத்தைக்காட்டி எரிக்கப்பட்டுள்ளது. தம் கருத்துகளுக்கு, மதங்களுக்கு, மொழிகளுக்கு எதிரான நூல்களை எரிப்பதை ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருவதைக் காலத்துக்குக் காலம் கண்டு வருகின்றோம். அண்மையில் கூட போலந்தில் மதகுரு ஒருவரால் ஹாரி போட்டர் நாவல் எரிக்கப்பட்டதைப் பார்த்திருக்கின்றோம்.
ஐம்பதுகளில் அமெரிக்கச் செனட்டர் ஜோசப் மக்கார்தி இடதுசாரிக்கருத்துகளைச்சார்ந்த நூல்களையெல்லாம் வெளிநாடுகளிலுள்ள அமெரிக்க நூலகங்களிலிருந்து அகற்றவேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அவ்விதமான நூலக நூல்கள் எரிக்கப்பட்டன. அண்மைக்காலமாக அமெரிக்காவில் புத்தக எரிப்புகள் அதிகரித்துள்ளதைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக டென்னஸியில் கிறித்தவ மதகுருவரால் நிகழ்த்தப்பட்ட புத்தக எரிப்பைக் கூறலாம்.
- எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் -
இவ்விதமாகப் புத்தக எரிப்பை ஓர் அடையாள எதிர்ப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் பலவற்றில் இன்றும் பல்வேறு மத, மொழி, இன மக்களில் சிலர் மேற்கொண்டு வந்தாலும் இது ஓர் ஆரோக்கியமான எதிர்ப்பு நடவடிக்கை அல்ல. எதிர்ப்பு நடவடிக்கையாக இதனை மேற்கொள்ளூம்போது சட்டரீதியாக இதனைத்தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இவ்விதமான எதிர்ப்பு நடவடிக்கையின்போது எல்லை மீறி நூலை எழுதியவர் மீது வன்முறையினைப் பாவிப்பதோ, எழுதக்கூடாது என்று அச்சுறுத்துவதோ யாராலும் ஏற்றக்கொள்ள முடியாதவை. நாடுகளில் நிலவும் சட்டங்கள் கூட அனுமதிக்க முடியாத குற்றங்கள் அவை. மேலும் புத்தக எரிப்பானது சூழலுக்கு ஆரோக்கியமானதுமல்ல. புத்தக எரிப்பில் வெளிப்படும் நச்சு வாயுக்கள் சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பவை.
அண்மையில் பிரான்சில் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் 'வயல் மாதா' நூலை எரித்தவர்களும் இவ்விதம் எல்லை மீறிச்சென்றுள்ளதாகச் சிலரது பதிவுகள் கூறுகின்றன. இவ்வெல்லை மீறல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மக்களுக்கிடையில் நிலவும் அமைதியைக் குலைப்பவை. எழுத்தாளரின் எழுத்துரிமைச் சுதந்திரத்தில் தலையிடுபவை. இவ்விதமான எல்லை மீறல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும், நானும் கண்டிக்கின்றேன். இது விடயத்தில் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் சட்டத்தின் துணையினை நிச்சயம் நாட வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய எல்லை மீறல்கல் தொடரும் அபாயமுண்டு.
அதே சமயம் நூல் தம் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், தம் மதத்தை அவமதிப்பதாகவும் கருதுபவர்கள் நூலாசிரியருக்கு எதிராகத்தனிப்பட்டரீதியில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது. அவர்களும் சட்டத்தின் துணையை இது விடயத்தில் நாடலாம், நாட வேண்டும்.
டானியல் ஜெயந்தனின் 'வயல் மாதா' தொகுப்பை நான் இன்னும் வாசிக்கவில்லை. அதில் அப்படியென்ன கத்தோலிக்க மதத்தினரை அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்பதும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் எழுத்தாளர் ஒருவரின் நூலுக்கெதிராக வன்முறையினைத் தூண்டும் செயற்பாடுகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்று.