
மத்தியப் பிரதேசத்தில் நான் போனது இதுவே முதல் தடவை என்றாலும், இது முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் செறிந்த இடமாகத் தெரிந்தது.
மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ ஆலயங்களைச் சுற்றிப் பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளை இங்கு குறிப்பிடவேண்டும். காதலர் தினம் கொண்டாட மறுக்கப்படுவதும், முத்தக் காட்சிகள் திரைப்படத்தில் வரும் போது முணுமுணுக்கும் இக்கால இந்தியாவில் உள்ள சுதந்திரத்துடன் ஒப்பிடும்போது, 1200 ஆண்டுகள் முன்பாக கற்சிற்பிகளுக்கு இப்படியான நிர்வாண பாலியல் உறுப்புகளை செதுக்க படைப்புச் சுதந்திரம் கொடுத்த சந்தேலா (Chandelas) அரசர்கள் உன்னத புருஷர்களாகத் தெரிந்தார்கள். இந்தியாவில் மட்டுமல்ல; தற்போதைய ஐரோப்பிய நாடுகளிலும் இப்படியான சுதந்திரம் கிடைக்காது.
எனக்குப் ஏற்பட்ட அடுத்த உணர்வு—இந்த கோவில்கள் இஸ்லாமிய அரசர்களிடமிருந்து எப்படித் தப்பின என்பதே. வாசித்தபோது சில கோயில்கள் சிக்கந்தர் லோதி (Sikander Lodi, 1495) மூலம் அழிக்கப்பட்டதாகவும், பின்னர் இது சிறிய கிராமமாகக் இருந்ததால் கவனிக்கப்படாமல் அழிந்து போயிருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த நிலையே இன்று இதைக் காண நமக்கு வாய்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் வெள்ளையர்கள் செய்த ஓரே நன்மை—இப்படியான புராதன இடங்களை கண்டுபிடித்து பாதுகாத்தது. கப்பலில் ஏற்றி கொண்டு செல்ல முடியாதவற்றை அவர்கள் விட்டு சென்றார்கள். தற்போது இந்தியாவின் கலைப் படைப்புகளை நாம் பார்க்கச் சென்றால் எங்கும் பிரித்தானியரின் பெயர் இருக்கும்.
1200 ஆண்டுகள் முன்பாக கல்லில் வடிக்கப்பட்ட மனித உணர்வுகளின் உருவங்களே இவை என்பது தெளிவானது. இக்காலத்திலும் மறைக்கப்பட வேண்டிய விஷயமாகக் கருதப்படுபவை அக்காலத்தில் ஆண்–பெண் இருவரின் மனஉணர்வுகளாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் எவ்வளவு நாகரிகமாகப் பேசினாலும் நடந்தாலும், அடிப்படை உணர்வுகளை பூசி மறைக்க முடியாது; அவற்றை சட்டம் போட்டு தடை செய்யவும் முடியாது. அப்படியானவற்றில் பாலியல் உணர்வுகள் முக்கியமானவை. இக்காலத்திலும் அவற்றை கல்லில் செதுக்குவது நடக்காது.
கஜுராஹோவில் சைவ, வைணவ, ஜைன் — இம்மூன்று மதத்தினருக்குமான கோவில்கள் ஒரு சேர, ஒரு பெரிய நீர்த்தேக்கம் போன்ற அமைப்பின் அருகே உள்ளன.
நாங்கள் காலையில் சென்றபோது அதிகமானவர்கள் இல்லை. சில வெளிநாட்டு பயணிகள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான கடவுளர் சிலைகளின் மத்தியிலே இத்தகைய பாலியல் சிலைகள் உள்ளன. ஆனால் எனக்குப் பிடித்தவை—பெண்கள் தங்களை அலங்கரிப்பது, பானைகள் வடிப்பது, வயலில் வேலை செய்கிற விவசாயிகள் போன்ற அன்றாடக் காட்சிகள். ஒரு காலத்தின் கண்ணாடியென தோன்றின. கற்பனையான மிருகங்களான யாளி போன்றவற்றும் இங்குள்ளன. மாஜிக்கல் ரியலிசம் (magical realism) கதைகளில் மட்டுமல்ல; சிற்பங்களிலேயே முதலில் தோன்றியது என நினைக்கிறேன்.
நாங்கள் பார்த்த கஜுராஹோ ஆலயங்கள் கட்டிடக்கலையில் நாகரா வகையைச் (Nagara architectural style) சார்ந்தவை. அதாவது தென் இந்தியாவில் பார்க்கும் திராவிடக் கலையை விட வேறு. பொதுவாக வடஇந்திய கோயில்களின் முறை இதுவே. வடஇந்திய கோயில்களில் கூட சிறிய வேறுபாடுகள் உண்டு. ஒரிசா அமைப்பும் கஜுராஹோ அமைப்பும் மாறுபட்டவை என்றும் இதை சந்தேலா பள்ளி (Chandela School) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் வாசித்தேன்.
வட இந்திய இந்துக் கோவில்கள் குப்தர்களின் காலத்தில் தோன்றியவை. இந்தியாவில் நாம் பார்க்கும் கலாச்சார வடிவங்களான இலக்கியம், கட்டிடக்கலை ஆகியவை குப்தர்கள் காலத்திலேயே உருவானவை. ஆரம்பகால குப்தர்கள் குகைகளில் செதுக்கியவர்கள் என்பதால், அவர்களிடமிருந்து குகைக்கோவில்கள், கட்டிடக் கோவில்களாக பரிணாமம் பெற்றன.
இந்தப் பகுதியில் உள்ள கோயில்கள் கருங்கல்லால் (granite) அடித்தளம் அமைத்து, மணற்பாறை (sandstone) கொண்டு கட்டப்பட்டவை. மணற்பாறையில் இலகுவாக வேலை செய்ய முடியும். கற்கள் ஒன்றோடு ஒன்று சுண்ணாம்பு சீனி போன்ற பொருட்கள் இல்லாமல் interlocking முறையில், புவியீர்ப்பை பயன்படுத்தி இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் கிடைக்கும் மணற்பாறை மிகவும் சிறந்தது; சிற்பங்களில் உள்ள பெண்களின் தலைப்பின்னல், நகம், நகைகள் போன்ற நுணுக்கமான இடங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
இப்படியான பாலியல் சிலைகளைச் செதுக்குவதற்கான காரணங்களைப் பற்றி பல ஊகங்கள் உள்ளன.
அவற்றில் தொன்மைக் கதையாகச் சொல்லப்படுவது — இந்தக் கோவில்களை கட்டிய மன்னன் சந்திரவர்மனின் தாய் ஹேமாவதி பற்றியது. தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது, அவளது அழகில் கவரப்பட்ட வானத்துச் சந்திரன் அவளை அணுகி உடலுறவு கொள்ள , அதனால் அவள் கருவுற, பின்னர் சந்திரவர்மன் பிறக்கிறார். தாயின் நினைவாக இந்தக் கோவில்களை மன்னன் உருவாக்கினார் என்பது முக்கியமான கதை.
அடுத்ததாக வருவது தாந்திரிகக் கதை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு (மைதுனா) தாந்திரிகப் பயிற்சியுடன் இணைந்தபோது, அவர்களுக்கு ஆன்மீக ஈடேற்றத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆதாரமாக, இங்கிருந்து சிறிது தூரத்தில் யோகினிகளுக்கான ஆலயம் உள்ளது. ஆனால் நான் அந்த இடத்திற்குச் செல்லவில்லை.
மூன்றாவதாக, இப்படியான சிற்பங்களை இல்லறக் கல்வியோடு இணைத்து விளக்கும் கருத்தும் உள்ளது — இது எனக்குப் பொருத்தமான காரணமாகத் தோன்றியது. அக்காலத்தில் புத்த மதத்திலும் ஜைன மதத்திலும் இளைஞர்கள் துறவறம் செல்வதைத் தடுப்பதற்கான முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம். அதாவது, இப்படியான செயல்களாலும் ஆன்மீக ஈடேற்றம் அடைய முடியும் என்பதை, கல்வி வழியாக சொல்ல முடியாத காலத்தில், இந்தச் சிற்பங்களே பாடவிதானமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
எப்படிப் பார்த்தாலும் கண்களால் காணவேண்டிய கஜுராஹோ ஆலயங்களைப் பற்றி எழுதுவது தேவையில்லாத வேலையாகத் தோன்றினாலும், வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய இடமாக இது திகழ்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









