என் வாழ்க்கையைச் சிறிது சிந்தித்துப்பார்த்தால் என் வாழ்வின் பெரும்பகுதி மாநகரங்களில்தாம் கழிந்திருக்கின்றது. கொழும்பு, நியூயார்க், 'டொராண்டோ' இவற்றுடன் வடக்கின் யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம் மாநகரில்லாவிட்டாலும், வடக்கின் முக்கிய நகர். என் நியூயார்க் மாநகர வாழ்க்கையை என் நாவலான 'குடிவரவாளன்' நாவலில் முழுமையாகப்பதிவு செய்துள்ளேன். 'அமெரிக்கா' சிறு நாவலும் நியூயோர்க் நகரின் இன்னுமோர் இருண்ட பக்கத்தைக் காட்டி நிற்கிறது. 'டொரோண்டோ' நகர வாழ்க்கையை நாவல்களில் பெரிதாகப்பதிவு செய்யவில்லையென்றாலும், சிறுகதைகள் பலவற்றில் பதிவு செய்துள்ளேன். 'டொரோண்டோ' மாநகரின் மனிதர்கள் பலவற்றை, பகுதிகள் பலவற்றை அச்சிறுகதைகளில் நீங்கள் காணலாம்.
எப்பொழுதுமே பெருநகரத்து மானுடர்தம் வாழ்க்கையை, அவர்கள்மேல் அம்மாநகர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை. அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் விதங்களை மையமாகக்கொண்ட புனைகதைகளை வாசிப்பதில் எனக்குப்பெருவிருப்பு. ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் 'குற்றமும், தண்டனையும்' அத்தகையதொரு நாவல். ருஷ்ய மாநகரமான புனித பீட்டர்ஸ்பேர்க் மாந்தர்களை, அம்மாந்தர்களின் மேல் அம்மாநகர் ஏற்படுத்தும் தாக்கங்களை விபரிக்கும் நாவலது.
இவ்விதமாக என்னைக் கவர்ந்த இன்னுமொரு மாநகர் சென்னை. ஆரம்பத்தில் வெகுசன இதழ்களினூடு வெளியான புனைகதைகளில் ஊறிக்கிடந்தவேளை அவற்றினூடு என்னை ஆட்கொண்ட நகர் அது. முதலில் அம்மாநகரின் என்னை ஆட்கொண்ட பகுதியாக சென்னை மெரினாக் கடற்கரையையே குறிப்பிடுவேன். அதற்குக் காரணம் எழுத்தாளர் மணியன். அதற்கு முக்கிய காரணம் அவரது அதிகமான நாவல்களில் சென்னை மெரினாக் கடற்கரையிருக்கும். சென்னையின் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய பொழுதுபோக்கு இடமே அதுதான். மணியனின் 'காதலித்தால் போதுமா' வில் மெரீனாவில் சுண்டல் போன்ற உணவு வகைகளை விற்று வாழ்வைத்தக்க வைத்துக்கொள்ளும் மானுடர்களைப்பற்றி விபரிக்கப்பட்டிருக்கும். 'உண்மை சொல்ல வேண்டும்' நாவலில் காதலர்கள் சந்திக்குமிடமாக விபரிக்கப்பட்டிருக்கும், 'காதலித்தால் போதுமா' நாவலையும் இவ்வகைக்குள்ளும் அடக்கலாம்.
அடுத்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' முக்கியமான நாவல். சென்னைத்தமிழ்ப் பேசும் நச்சி பாத்திரம் சென்னை மாநகரின் பேச்சு மொழியை எனக்கு அறிமுகப்படுத்தியது. அத்துடன் மாநகரின் இன்னுமொரு பக்கத்தையும் வெளிப்படுத்தியது. இவ்வகையில் பி.வி.ஆர் எழுதிய 'சென்ரல்' நாவலையும் சேர்க்கலாம். 'சென்ரல்' புகையிரத நிலையத்தை மையமாகக்கொண்ட கதையினூடு அப்புகையிரத்த நிலையத்தை மட்டுமல்ல சென்னை மாந்தர்களையும் அறிந்துகொண்டோம்.
சென்னையின் மாந்தர்களை , வீதிகளை நினைவு படுத்தும் புனைகதைகள் பலவற்றை எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியுள்ளார். சென்னையின் அடித்தட்டு மக்களை வைத்து அவர் எழுதிய புனைகதைகள் முக்கியமான கதைகள்.
இவர்களுடன் மேலும் பலர் சென்னை மாநகரின் மாந்தர்களை, பிரதேசங்களை மையமாக வைத்துப் புனைகதைகளை எழுதியுள்ளார்கள். தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' தொடக்கம் அண்மையில் வெளிவந்த 'ராஜிவ்காந்தி நெடுஞ்சாலை' நாவல் வரை எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் சென்னை மாநகரின் பல்வேறு பக்கங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன.
இவைதவிர வெகுசன இதழ்களில் வெளியான நூற்றுக்கணக்கான புனைவுகளில் சென்னை நகர் விபரிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
கலை, இலக்கிய, அரசியல் ஆளுமைகள் பலரைச் சென்னை உள்வாங்கி வளர்த்திருக்கின்றது. மக்கள் திலகம் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி தொடக்கம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அமரர் பிரபஞ்சன் வரை பலரின் வாழ்க்கை அனுபவங்கள் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளை, அவர்களை மையமாகக்கொண்டு உருவான நில அடையாளங்களைப் (Landmarks) புலப்படுத்துகின்றன. ராமாவரம் தோட்டம், போயஸ் கார்டன், கோபாலபுரம், மெரீனாக் கடற்கரைச் சமாதிகள் , 'எக்மோர் ஸ்டேசன்'.. இவையெல்லாம் சென்னை மாநகரின் முக்கியமான நில அடையாளங்கள்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின், அமரர் பிரபஞ்சனின் சென்னை மாநகர அனுபவக்கட்டுரைகளை விரும்பி வாசித்திருக்கின்றேன். வாசித்து வருகின்றேன். சென்னையில் பொருளியல்ரீதியாக அடைந்த சவால்களை எஸ்.ராவும் , பிரபஞ்சனும் நிறையவே பதிவு செய்திருக்கின்றார்கள். தற்போது எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தனது சென்னை அனுபவங்களை யு டியூப் சானலில் 'சென்னையும் நானும்' என்னும் தலைப்பில் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகின்றார். அவற்றின் முதலாவது பகுதி இது. இதற்கான இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?time_continue=60&v=GFB_TvClSCQ&feature=emb_logo
2. எஸ்.ரா.வின் பார்வையில் இவான் துர்க்னேவ்!
எஸ்.ராமகிருஷ்ணன் தான் அறிந்த கலை, இலக்கிய & அரசியல் ஆளுமைகளைபற்றி, அவர்களது படைப்புகளைப்பற்றி நிறையவே எழுதியுள்ளார். அவரது நூல்கள் பல இவற்றை மையமாகக்கொண்டு வெளியாகியுள்ளன. தற்போது எழுதியதையெல்லாம் 'யு டியூப்' காணொளிகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றார். தான் ஏற்கனவே எழுதியவற்றை அண்மைக்காலமாகவே மேற்படி காணொளிகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றார்.
அவரது பார்வையில் இவ்விதம் வெளிப்படுத்தும் காணொளிகளிலொன்று இக்காணொளி. 'தந்தையர்களும், தனயர்களும்' என்னும் நாவலை எழுதிய புகழ்பெற்ற ருஷ்ய நாவலாசிரியர் இவான் துர்க்னேவ் பற்றிய காணொளி. துர்க்னேவின் படைப்புகளைப்பற்றி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியெல்லாம் உரை சுற்றிச் செல்கின்றது. ராமகிருஷ்ணனின் இவ்விதமான உரைகள் பலவற்றை 'யு டியூப்'பில் காணலாம். பாருங்கள். கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=S4X8Y4YzS-8
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.