நான் எனது பத்து வயதிலிருந்து வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் எழுதிக்கொண்டு வருகின்றேன். ஆங்கிலத்தில் V.N.Giritharan என்று எழுதிக்கொண்டு வருகின்றேன். என் நூல்கள் தமிழகத்திலும் 1996இல் வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள மணிமேகலை பதிப்பகம் வி.என்.கிரிதரன் என்னும் பெயரில் இன்னுமோர் எழுத்தாளரின் நூலை வெளியிட்டுள்ளது. இத்தனைக்கும் மணிமேகலை பிரசுர உரிமையாளர் ரவி தமிழ்வாணனுக்கு என் பெயர் தெரியாதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பல வருடங்களுக்கு முன்னர் அவர் பதிவுகளுக்கு அவரது புத்தக வெளியீடுகள் சம்பந்தமாகக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். ஆனால் அவர் V.N கிரிதரன் என்னும் பெயரில் எதற்காக இன்னுமொருவரின் நூலை வெளியிட்டார்? அவ்விதம் V.N.கிரிதரன் என்று எழுதியவர் எதற்காக அப்பெயரில் எழுதினார்? அதிலுள்ள வி என்பது அவரது தந்தையையோஅல்லது அவரது பிறந்த ஊரையோ குறிக்கின்றதா? இவ்விதமாக ஏற்கனவே எழுத்தாளர் ஒருவர் அப்பெயரில் எழுதிக்கொண்டிருந்தால் நூலொன்றினை வெளியிடுபவர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக அப்பெயரில் வேறோர் எழுத்தாளரின் நூலினை வெளியிடுவதைத்தவிர்க்க வேண்டும். ஆனால் ரவி தமிழ்வாணம் தவிர்க்கவில்லை.
நான் குறிப்பிடும் புத்தகத்தின் பெயர்: முத்தமிழில் நல்முத்துக்கள் ; எழுதியவர்கள்: V.N.கிரிதரன் & S.N.கிருஷ்ணமூர்த்தி ; வெளியிட்டவர்கள்: மணிமேகலை பதிப்பகத்தினர்.
ண்மையில் நான் வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் தேடியபோது வந்த பதிலொன்றில் தினமலரில் வி.என்.கிரிதரன் பெயரில் இரண்டு நூல்கள் அவர்களது 'புத்தகங்கள்' பகுதியில் காணப்பட்டது. நான் வ.ந.கிரிதரன் என்றே என் படைப்புகளை எழுதுவது வழக்கம். தினமலர் நிறுவனத்தினர் வி.என்.கிரிதரன் என்னும் பெயரின் கீழ் இட்டிருந்தனர். அதுபோல் மணிமேகலை பிரசுரம் V.N.கிரிதரன் * S.N..கிருஷ்ணமூர்த்தி என்பதையும் வி.என்.கிரிதரன் என்பவரே எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தனர். நான் வ.ந.கிரிதரன் என்று தேடியபோது வி.என்.கிரிதரன் என்னும் பெயரில் எனது அமெரிக்கா நூலும், வி.என்.கிரிதரன் பெயரில் மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட 'முத்தமிழில் நல்முத்துக்கள்' நூலும் இடம் பெற்றிருந்தது.
எதற்காக மணிமேகலை பிரசுரத்தினர் இவ்விதம் என் எழுத்துலப் பெயரில் அவ்வெழுத்தாளரின் நூலையும் வெளியிட வேண்டும். (உண்மையில் அவ்வெழுத்தாளர் எங்காவது நான் எழுதுவது போல் வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் எழுதுபவரா? ஏற்கனவே எழுதியிருக்கின்றாரா? அப்படியில்லையென்றால் மணிமேகலை பிரசுரத்தினர் என் பெயரைப்பாவித்து அவ்வெழுத்தாளரின் நூலையும் வெளியிட்டதற்கு வியாபாரரீதியிலான உட்காரணங்கள் இருக்கக்கூடும். அவ்வுட்காரணங்கள் எவையாக இருக்கக் கூடும்?
1. தமிழகத்து நூல் நிலையங்களில் ஏற்கனவே என் நூல்கள் சிலவுள்ளன. சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் நூல் நிலையங்கள் பலவற்றில் என் நூல்கள் உள்ளன. ஏற்கனவே அப்பெயரில் நூலகங்களில் என் பெயரில் நூல்களுள்ளதால், சில வேளைகளில் மணிமேகலை பிரசுரத்தாருக்கு நூலகங்களுக்கு என் பெயரிலுள்ள நூலினை விற்பது இலகுவாகவிருக்கக் கூடும்.
2. இலங்கைத்தமிழர்கள் மத்தியில் ஓரளவுக்கு என் பெயர் தெரிந்திருக்கச் சாத்தியங்களுள்ளன. எனவே என் பெயரில் வரும் நூல்களை அவர்கள் என் நூல்களென்று எண்ணி வாங்குவதற்கும் சந்தர்ப்பங்களுள்ளன. அதற்காகவும் மணிமேகலை பிரசுரத்தினர் என் பெயரில் வெளியிட விரும்பியிருக்கலாம்.
என்னைப்பொறுத்தவரையில் இது போன்ற தேவையற்ற பெயர்க்குழப்பங்கள் ஏற்படுவதைத்தவிர்ப்பதற்காகத்தான் திரையுலகில் நடிகர்களுக்குப் புதிய பெயர்கள் வைக்கின்றார்கள். இலக்கிய உலகிலும் அவ்விதமே குழப்பங்கள் ஏற்படாமலிருப்பதற்காக பெயர்களை ஒரே மாதிரி வைப்பதைத் தவிர்க்கின்றார்கள். ஒரு முறை கே.எஸ்.மகாதேவன் என்று நினைக்கின்றேன் ஒருவரின் தொடர்கதை வெளியானபோது அப்பெயரில் ஏற்கனவே எழுத்தாளர் ஒருவர் இருப்பதை அறிந்த விகடன் நிறுவனத்தினர் புதிய எழுத்தாளரின் பெயரைக் கே.எஸ்.பார்வதி என்று மாற்றி அத்தொடர்கதையினை வெளியிட்டார்கள். அந்தப்பெருந்தன்மை ஊடகங்களுக்கும், பதிப்பகங்களுக்கும் இருக்க வேண்டும். ஆனால் அது மணிமேகலை பதிப்பகத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லையே.
கூகுள் தேடலில் வ.ந.கிரிதரனுக்குக் கிடைத்த தினமலர் இணைய இணைப்பு இதுதான்: https://books.dinamalar.com/books_main.asp?ty=1&apid=579
இன்னுமொரு கூகுள் தேடலில் வ.ந.கிரிதரனின் புத்தகமாக V.N.கிரிதரன் எழுதிய நூலாகப் பதில் வந்தது. இது எப்படி இருக்கு?
இவற்றைப்பார்ப்பவர்கள் இதிலுள்ள நூல்கள் இரண்டையும் நானே எழுதியிருப்பதாக நினைப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் ஏற்கனவே தினமலர் நிறுவனத்தினர் குழம்பி விட்டார்கள். அவர்கள் இரு கிரிதரன்களும் ஒருவர் என்று எண்ணியதால்தான் அவ்விதம் இரு நூல்களையும் எழுதியவர் வி.என்.கிரிதரன் என்று பதிவு செய்திருந்தார்கள். அது போல் கூகுள் நிறுவனத்தினரும் குழம்பி விட்டார்கள். அதனால்தான் அந்நூலை எழுதியவர் வ.ந.கிரிதரன் என்று (V.N.கிரிதரன் என்றிருக்க வேண்டும்) நினைத்து அவ்விதமே பதிவு செய்திருந்தார்கள். இவ்வளவுக்கும் காரணம் : மணிமேகலை பதிப்பகத்தின் பொறுப்பற்ற தன்மை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.