இன்னுமோர் ஆண்டு! புத்தாண்டு!
புத்தாண்டே! உனக்கு வயது எப்பொழுதுமே
ஒன்றுதான்.
வயது ஒன்றானதும் மீண்டும்
வந்து பிறக்கின்றாய். ஆனால்
அந்தவோராண்டினுள்தான் நீ
எத்தனை எத்தனை மாற்றங்களை இப்புவியில்
ஏற்றி விடுகின்றாய். உருவாக்கி விடுகின்றாய்.
இன்பமும் , துன்பமும்
இருப்பின் இயற்கையென்பதை
எடுத்துக்காட்டி நிற்கின்றாய்.
உணர்ந்து பின் மீண்டும்
உறுதியுடன் இருப்பினை எதிர்நோக்கத்தானோ
நீ
மீண்டுமொரு பிறப்பினை
மறு வருடத்திலேயே எடுக்கின்றாய்?
இன்று புதியாய்ப்பிறந்தோமென்று நீ
இங்கு வந்து மீண்டும் பிறப்பதற்கு
எடுக்கும் காலமோ ஒராண்டு!
உன் வழியில் நாமும் மீண்டுமிங்கு
உதிப்போம்; உரமுடன்
உலகத்தை உள்வாங்கி எதிர்கொள்வோம்.
உலகைச் சீரழிக்க மாட்டோம்.
உலகைச் சீரமைப்போம் என்றோர்
உறுதி எடுப்போம். அதையும்
உணர்வுபூர்வமாகவே எடுப்போம். இவ்வுலக
உயிரனைத்துமெம் உறவுகளென்றெண்ணி
உண்மை உணர்ந்து இம்மண்ணை
இன்பப்பூக்காடாக்குவோம். இதற்காக
இணைந்து எழுவோம்; உயர்வோம்.
புத்தாண்டே! நீ வாழ்க! வருக! இப்
புவிதனை நீ
புத்துணர்ச்சியால்,.
பேரின்பத்தால்
பொங்க வைப்பாய்.
மகிழ்ச்சிக்கடலால்
மூழ்கடிப்பாய்.
இப்புத்தாண்டில் என் அபிமான மகாகவி பாரதியாரின் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளிலொன்றான 'சுயசரிதை' கவிதையைப் பகிர்ந்துகொள்கின்றேன். இந்நீண்ட கவிதையில் பாரதியார் தன் வாழ்வை மீளாய்வுக்குட்படுத்துகின்றார். கடந்தவற்றிலிருந்து பெற்ற அனுபவத்தால் இருப்பை இறுதியில் எதிர்நோக்குகின்றார்.
தன் பால்ய காலத்துப் பருவத்தை, முதற் காதலை, தான் கற்ற கல்வியையெல்லாம் நினைவு கூர்கின்றார். பதிவு செய்கின்றார். தன் தந்தையாரின் மறைவின்போது
"தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சலென் பாரிலர்;
சிந்தை யில்தெளி வில்லை; உடலினில்
திறனு மில்லை;உரனுளத் தில்லையால்;
மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின் றதாம்
மடமைக் கல்வியில் மண்ணும்பயனிலை.
எந்த மாக்கமும் தோற்றில தென்செய்கேன்?
ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே?"
என்று மனம் வருந்துகின்றார். இவ்விதம் மனம் வருந்துபவர்
"உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்;இதற்குநான்
பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்?
பண்டு போனதை எண்ணி யென்னாவது?
சிலதி னங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்தெவன் செத்திடு வானடா!"
என்று சிந்தனையில் தெளிவு பெறுகின்றார், இவ்விதமான தெளிவடையும் மகாகவி
"அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,"
என்று துள்ளியெழுகின்றார். இருப்பினைத்துணிவுடன், தெளிவுடன் எதிர்நோக்குகின்றார். பாரதி காட்டும் இவ்வழிதனில் நாமும் கடந்த காலத்தை எண்ணி மனம் வருந்தாமல், அதிலிருந்து பெற்ற பாடங்களுடன் எதிர்காலத்தை, இப்புத்தாண்டைத் தெளிவுடன், புரிதலுடன் எதிர்கொள்வோம்.
பாரதியாரின் 'சுயசரிதை' கவிதைக்கான இணைய இணைப்பு கீழே:
சுய சரிதை - மகாகவி பாரதியார் -
http://www.lakshmansruthi.com/…/bharathi…/bharathi-III36.asp