- அண்மையில் முகநூலில் எழுதிய பதிவும் அதற்கான எதிர்வினைகள் சிலவும் இங்கு ஒரு பதிவுக்காக. - பதிவுகள் -
அண்மையில் எழுத்தாளர் கடல்புத்திரனுடன் அவரது ஆரம்ப கால இயக்க அனுபவங்களைப்பற்றிய உரையாடலொன்றின் போது அவர் கூறிய ஒரு விடயம் ஆச்சரியத்தைத் தந்தது. இவர் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படவரைஞர் கற்கை நெறி கற்று விட்டு 'பில்டிங் சுப்பர்வைச'ராக யாழ்ப்பாணத்தில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனமொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இவருடன் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் அதே கற்கை நெறி கற்ற இன்னுமொருவரும் இவருடன் அதே நிறுவனத்தில் அதே வேலை பார்க்கத்தொடங்கினார். பின்னர் அந்நிறுவனத்தில் வேலை முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து இருவரும் இயக்கங்களில் இணைந்து போராட முடிவெடுக்கின்றார்கள். இவரது நண்பர் புலிகளுடன் இணைய முடிவெடுக்கின்றார். இவருக்கு எந்த இயக்கத்தில் இணைவது என்பதில் குழப்பம். போதிய விளக்கமில்லை. இன்னும் விளக்கம் வேண்டுமென்று நினைக்கின்றார். இச்சமயத்தில் இவரது நண்பர் தனது மச்சானொருவன் 'புளட்'ட்டில் இருந்ததாகவும்,, ஆனால் அவன் மேற்கு நாடொன்றுக்குச் சென்று விட்டதாகவும், வேண்டுமானால் அவன் வைத்திருந்த அரசியல் பிரசுரங்கள் எல்லாம் தன்னிடமிருப்பதாகவும், அவற்றைக் கொண்டு வந்து தருவதாகவும் கூறுகின்றார். இவரும் அதற்குச் சம்மதிக்கவே இவரது நண்பர் அப்பிரசுரங்கள், நூல்களையெல்லாம் கொண்டுவந்து இவரிடம் கொடுக்கின்றார். அவற்றை வாசித்து விட்டு இவர் முடிவெடுக்கின்றார் 'புளட்'டில் இணைவதாக. அதே சமயம் இவரது நண்பரோ புலிகளுடன் இணைந்து விட்டார். பின்னர் அவர் போராட்டத்தில் மரணித்தும் விட்டார்.
இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. புலிகளுடன் இணைந்து போராடச் சென்ற ஒருவர் தன் நண்பருக்கு புளட்டிலிருந்த மச்சானின் அரசியல் பிரசுரங்கள், நூல்களைப் படிக்கக் கொடுக்கின்றார். தன்னுடன் வா என்று அவர் அழைக்கவில்லை. இவ்விதம்தான் 83 இனக்கலவரத்தையடுத்து ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப்போராடப் புறப்பட்டார்கள். அதற்குக் காரணம் அன்றைய ஜே.ஆரின் அரசின் அடக்குமுறைகள். அவ்விதம் புறப்பட்டவர்களுக்கிடையில்; இயக்கரீதியான முரண்பாடுகள் எவையுமிருக்கவில்லை. இயக்கமெதுவானாலும் போராடச் சென்றால் சரி என்ற எண்ணமே இருந்தது. ஆனால் பின்னர் இவ்விதம் போராடப்புறப்பட்டவர்கள் ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் நிலை ஏற்பட்டது துரதிருஷ்ட்டமானது.
இவர் 'புளட்' இயக்கத்தில் சேருவதற்கு முடிவெடுத்து முதலில் சங்கானை ஏ.ஜி.எ (AGA) பிரிவுப் பொறுப்பாளரிடம் செல்கின்றார். அவர்கள் வட்டுக்கோட்டைஜிஎஸ் (GS) பொறுப்பாளருடன் கதைக்கும்படி அனுப்பி விடுகின்றார்கள். அவரோ பதிலுக்கு அராலி ஜிஎஸ் பொறுப்பாளருடன் கதைக்கும்படி அனுப்பி விடுகின்றார்கள். இவ்விதமே அவர் இறுதியாகக் கழகத்தில் இணைந்துகொள்கின்றார். இவ்விதம் இணைந்தவர்களுக்குச் சங்கானையில் இந்தியாவில் பயிற்சி பெற்று வந்தவர்களால் ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகின்றது. இவ்விதம் இணைந்து கொண்ட கடல்புத்திரன் பின்னர் அராலி ஜிஎஸ்ஸின் பொறுப்பாளராகவுமிருந்திருக்கின்றார். புளட் அமைப்பானது எவ்விதம் அரசானது அரச அதிபர் (GA) ,உப அரச அதிபர் (AGA) & கிராம சேவகர் (GS) என்று பிரிக்கப்பட்டுள்ளதோ அதே போன்றதொரு கட்டமைப்புடனேயே விளங்கியது. அக்காலத்தில் சங்கானை (சுழிபுரம்) ஏஜிஆ ஆக இருந்தவர் 'கமலி' என்பவர். மீரான் வாத்தி முதலில் இருந்தவர். இராணுவச் சுற்றி வளைப்பொன்றில் கைது செய்யப்பட்டு தென்னிலங்கைச் சிறையொன்றில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் இந்தியப்படையினரின் வருகையின்போதே விடுவிக்கப்படுகின்றார். மீரான் வாத்தியின் நெருங்கிய உறவினர்கள் சிலர் வடக்கு அராலியில் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் கடல்புத்திரனுடன் அராலி இந்துக்கல்லூரில் படித்த நண்பர்களிலொருவர் என்றும் கூறினார். விடுதலைப்புலி உறுப்பினர் அறுவர் சுழிபுரத்தில் கொலையுண்ட சம்பவத்தையடுத்து அப்போது அப்பகுதி ஏஜிஏ பொறுப்பிலிருந்த 'கமலி' (இயக்கப்பெயர்) புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றார். இச்சூழலில் தற்காலிகமாகச் சிறிது காலம் இவர் அப்பொறுப்பில் இருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைப்போராட்டத்தில் ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்புகள் பற்றிப் பொதுவாக அறிந்திருக்கின்றோம். ஆனால் அவை எவ்விதம் செயற்பட்டன. எவ்விதம் கட்டமைக்கப்பட்டிருந்தன என்பது பற்றியெல்லாம் போதிய தகவல்களில்லை. இந்நிலையில் அவை எவ்விதம் கட்டமைக்கப்பட்டிருந்தன, இயங்கின (உதாரணத்துக்கு புளட்டின் ஜிஏ -> ஏஜிஆ -> ஜிஎஸ் போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய கட்டமைப்பு) என்பது பற்றிய வரலாறானது எழுதப்பட வேண்டும். ஏனெனில் ஒரு காலத்திலவை எவவிதம் இயங்கின என்பதை அறிந்து கொள்வதற்கான ஆவணங்களாக அவை இருக்கும்.
இன்று தம் அனுபவங்களைப் பதிவு செய்யும் முன்னாட் போராளிகள் இதனைக் கவனத்தில் கொண்டு தம் அனுபவங்களைப் பதிவு செய்வார்களானால் அவை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஆவணங்களாக விளங்குமென்பது மட்டும் நிச்சயம்.
மேற்படி உரையாலின்போது கடல்புத்திரனிடம் கூறினேன் அவரது போராட்ட கால அனுபவங்களைப் பதிவு செய்யும்படி .தான் அவ்வப்போது புனைகதைகளில் பதிவு செய்வதாகக் கூறினார். புனைவுகளைப்போல் அபுனைவுகளாகவும் அவற்றைப் பதிவு செய்வது அவசியமென்றேன். குறிப்பாகப் பதிவு செய்கையில் போராடத்தூண்டிய சூழல், சிந்தனைகள், இயக்கப்பயிற்சிச் செயற்பாடுகள், இயக்க நடவடிக்கைகள் , அன்றாடச் செயற்பாடுகள், சமூக, அரசியற் பிரச்சினைகளை இயக்கங்கள் கையாண்ட வழிகள் போன்றவற்றை அறிவதற்கு அவை மிகவும் அவசியமென்றேன். செய்ய முயற்சி செய்வதாகக் கூறினார். செய்வார் என்று எதிர்பார்ப்போம்.
முகநூல் எதிர்வினைகள் சில:
Vadakovay Varatha Rajan: உங்களின் வேண்டுகோள் சரியானதே . GR ,AGA , GS கதை எல்லாம் இப்போதே அறிந்தேன் .
நிற்க கடல் புத்திரனை நான் முன்பு அறிந்திருக்கவில்லை என்பது துரதிஸ்டமானதே . உங்கள் மூலமே அறிந்து கொண்டேன் . உம் பணி வாழ்க
Sugan Paris: வடமாகாண அமைப்பாளர் Nanda Kandasamy (ஜீவன் ) பொறுப்பாளர் Sam Mer (நேசன் ) இந்த தோழர்கள் தான் பொறுப்பிலிருந்து அமைப்புகளைக் கட்டியது.
Tam Sivathasan: அவசியமான ஒன்று.
Raveendran Nadesan: அவசியம் எழுதப்பட வேண்டும்!
Sugan Paris: இவர்கள் இருவருக்கும் முன்னோடி பாலா அல்லது மோகன் என்று அழைக்கப்படும் தோழர் .மிகக் கடுமையாக அமைப்பாக்கம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு வேலைகள் செய்து பின்னர் கொழும்பில் தலைமறைவாக வாழ்ந்து சிங்கள தோழி ஒருவரை திருமணம் செய்து கொழும்பில் இருக்கிறார்.
Sugan Paris: (சுகந்தன்) Sriharan Sivasingarajah அமைப்பாக்க வேலைகள் மற்றும் அனைத்து அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர். Teso டெசோ பொறுப்பாளர். தளத்திலிருந்து பின் தள மா நாட்டிற்கு சென்ற பிரதிநிதி. பின்னர் நோர்வே த்ரோம்சோ பல்கலையில் பேராசிரியராக இருந்தார்
போர்க்கால இலக்கியம்: டீசல் ட்ரம்கள் கொண்டு உருவாக்கப்பட்ட மிதவை! ஆவணப்படுத்தும் 'வெகுண்ட உள்ளங்கள்'
கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' என்னும் நாவல் பற்றி முன்னர் ஒரு விமர்சனம் "கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு!" என்னும் தலைப்பில் எழுத்தியிருந்தேன்.அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன். இந்நாவலின் கதைக்களம் நடைபெறும் காலகட்டம் 1983 -1986. ஜே.ஆர். அரசின் படையினரின் அடக்குமுறைகள் காரணமாக, தீவுப்பகுதிக்கு வழமையாகச் செல்லும் பாதைகள் ஆபத்துகள் நிறைந்ததாக மாறியிருந்த அரசியற் சூழலில் அராலித்துறை முக்கியத்துவம் பெறுகின்றது. பயணிகளை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்த படகோட்டிகளிடமிருந்து கட்டுப்பாடு இயக்கங்களின் கைகளுக்கு மாறுகின்றது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஆகியவையின் கைகளின் ஆதிக்கத்துக்குள்ளாகின்றது. இயக்கங்களின் வருகையால் இயக்கங்களுக்கும் , ஊரவர்களுக்குமிடையில் ஏற்படும் முரண்பாடுகள், இயக்கங்களுக்குக்கிடையிலான முரண்பாடுகளையெல்லாம் நாவல் ஆவணப்படுத்துவதால் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்நாவல் ஆவணப்படுத்தும் முக்கியமான விடயங்களிலொன்று: தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தினர் டீசல் ட்றம்களைக்கொண்டு தயாரித்த மிதவை பற்றியது. அது பற்றி நாவல் பின்வருமாறு விபரிக்கின்றது:
"..வெல்டிங் பெடியன் சுந்தரத்தின் ஐடியாவுக்கு அந்த ஏ.ஜி.ஏ. அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்துச் செயற்படுத்தியது.... காம்பிற்கு பின்னாலுள்ள வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப்பகுதியை மூடி வெல்ட் பண்ணினார்கள். காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள். மூன்று நான்கு நாட்கள் முழுமூச்சாக செயல்பட்ட அவர்கள் வெற்றியடைந்திருந்தனர். அது முதல்தரமான மிதவையாக காரைநகர் கடற்பகுதியிலுள்ள பெரிக்கு இணையாக செயற்படுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ட்ரக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக்கொண்டு போய் கடலில் இறக்கப்பட்டபோது பெடியன்கள் கரகோசம் செய்தார்கள். கையோடு கொண்டுவந்த பலகைகளை மரவேலை தெரிந்த ஒரு பெடியன் கம்பிச் சட்டத்தின்மேல் வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக்கொடுத்தபடி பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை இரண்டு மணித்தியாலத்தில் முடிந்தது..." (வேலிகள்; பக்கம் 90)
இவ்விதமாகத் தயாரிக்கப்பட்ட மிதவை சாதனை படைத்ததாக நாவலில் விபரிக்கப்பட்டிருகின்றது.
"அந்த மிதவை படைத்த சரித்திரம் பெரியது. சுயமூளையைப் பாவித்து தயாரிக்கப்பட்ட ஆமட் கார், ஹெலிகாப்டர், கிரனேட் , மோட்டார்கள், ஷெல்கள் .. இந்த வரிசையில் இதுவும் ஒன்று. தமிழ் மக்கள் பெருமைப்படக் கூடிய விடயம்தான். .." (வேலிகள்; பக்கம் 90)
"அதிலே மினிபஸ், கார். ட்ராக்டர் போன்ற வாகனங்கள் இலகுவாக இடம் மாற்றப்பட்டன. கருவாட்டுச் சிப்பங்கள் வர்த்தக நோக்கில் தீவுப்பக்கமிருந்து கொண்டு வரப்பட்டன.." (வேலிகள்; பக்கம் 90)
இந்த மிதவை பற்றி வேறெந்த நாவல்களிலும் கூறப்பட்டதாகத்தெரியவில்லை.
வழக்கமாக இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல்களில் அரச படைகளின் அடக்குமுறைகள், இயக்க மோதல்கள் என்பவை பற்றியே விபரிக்கப்பட்டிருக்கும். அதற்கு மாறாக இந்நாவலில் ஒரு கடலோரக் கிராமத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் எவ்விதம் அக்காலகட்டத்தில் நிலவிய அரசியற் சூழலினால் மாற்றங்களுக்குள்ளாகியது என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என்றால் யாழ் கோட்டையில் அரணமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில ஈடுபட்ட விபரங்கள் அவ்வப்போது பதிவுகளில் விபரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இவ்விதமொரு மிதவை மூலம் அவர்கள் ஏற்படுத்திய கடற்போக்குவரத்துச் சேவை பற்றி இந்நாவலே முதன் முதலாக ஆவணப்படுத்தி அறியத்தந்துள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.