'காந்தியப் பண்பும் 'வெண்முகில்' நாவலும் ' என்னும் தலைப்பில் எழுத்தாளர் காண்டேகரின் நாவலான 'வெண்முகில்' பற்றிய திருமதி.பா.சுதாவின் ஆய்வுக்கட்டுரை ( தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளிலொன்று; பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது) காண்டேகர் பற்றிய நினைவலைகளை ஏற்படுத்தி விட்டதெனலாம்.
என் பதின்ம வயதுகளில் வாசிப்பு வெறி பிடித்துத் தேடித்தேடி வாசித்த எழுத்தாளர்களில் காண்டேகருக்கு முக்கியமானதோரிடமுண்டு. மராட்டிய எழுத்தாளரான காண்டேகர் தமிழில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களிலொருவராக அறுபதுகளில், எழுபதுகளில் விளங்கிக் கொண்டிருந்தார். எழுத்தாளர் கா.ஶ்ரீ.ஶ்ரீயின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான காண்டேகரின் நாவல்களைத் தமிழ் வாசகர்கள் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தார்கள். காண்டேகரின் பல படைப்புகள் பல தமிழில் வெளியான பின்னரே மராத்தியில் வெளியாகின என்று எழுத்தாளர் ஜெயமோகன் காண்டேகர் பற்றிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது. அவ்வளவுக்குக் காண்டேகரின் புகழ் தமிழ் இலக்கிய உலகில் பரவியிருந்தது.
காண்டேகரின் மீது அவ்வளவுக்குப் பற்று ஏற்படக் காரணங்களாக மானுடவாழ்க்கையின் சவால்களை மையமாக வைத்து அவர் உருவாக்கிய கதைக்களங்கள் , அவரது படைப்புகளில் ஆங்காங்கே காணப்படும் வாசகர்தம் நெஞ்சங்களையெல்லாம் ஈர்க்கும் பொன்மொழிகள் ஆகியவற்றைக் கூறுவேன். அப்பொன்மொழிகளுக்காகவே வாசகர்கள் தேடித்தேடி அவரது படைப்புகளை வாசித்தார்கள். நானும் அவர்களிலொருவன். உதாரணத்துக்கு அவரது படைப்புகளில் காணப்பட்ட பொன்மொழிகள் சில:
*வாழ்க்கை என்பது போர்க்களம்; இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை; ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
*வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.
*விதி ஒரு போக்கிரிப் பையனை போன்றது; மனிதர்களின் அழகிய எண்ணங்களை அழித்து நாசம் செய்வதில்தான் அதற்கு ஆனந்தம்.
*வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை
* மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது.
காண்டேகரின் எழுத்துகளில் மிகுந்த மதிப்புக் கொண்டவர் அறிஞர் அண்ணா. அவர் காண்டேகரி பற்றிப்பின்வருமாறு கூறியிருப்பார்:
"சமூக அமைப்பு முறையிலே மிகப் புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு காண்டேகரின் கதைகள். வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முதல் காதல், அதுவும் அது நிறைவேறாத போது, காலம் முழுவதும் அந்த முதல் காதல் மனதில் நிறைந்துள்ளது. இதுபற்றிய காண்டேகரின் கருத்து அற்புதமானது. 'பஹிலே பிரேம்' என்ற நாவல் சார்ந்து காண்டேகர் எழுதியது, " நாம் முதல்காதல் என்று கூறும் பொருள் உண்மையான காதலினின்றும் பெரிதும் வேறுபட்டது. சௌந்தர்யமே முதற் காதலின் உயிர். இளம் வயதில் ஆண், பெண் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி பின் எந்தக் காரணத்தாலோ பிரிந்தால், அவர்கள் உயிர்போகும் வரை அந்தக் காதல், அதன் நினைவு உள்ளத்தை விட்டு பிரிந்து அகலாது. பிறகு, இருவரும் வாழ்க்கையில் பிரிந்து வேறு மனிதர்களை மணம் புரிந்து கொண்டு இன்பமாகக் கூட வாழலாம். மன உறுத்தல் இல்லாமல் வாழலாம். ஆனால், முதன்முதலாக உள்ளத்தில் நிலைத்த காதல் அணையாது. அதை வேரறுத்துக் களைய முடியாது என்பதே இந்த நாவலின் நோக்கம்." (நன்றி: தினமணி)
ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான காண்டேகரின் 'மனோரஞ்சிதம்' எனக்கு மிகவும் பிடித்த நாவல்களிலொன்றாக விளங்கியது. சாகித்திய அகாதெமி விருது. ஞானபீட விருது (யயாதி) உட்படப் பல்வேறு விருதுகளைப்பெற்றவை காண்டேகரின் படைப்புகள்.
இவரது முழுப்பெயர்: வி. ச. காண்டேகர் அல்லது வி. எஸ். காண்டேகர் (Vishnu Sakharam Khandekar). காண்டேகரின் நினைவு தினம் செப்டம்பர் 2. இவரைப்பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு : https://ta.wikipedia.org/s/2b8t
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.