இன்று தமிழகத்தில் நடைபெறுகின்ற தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் 'தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்' என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்துக்கான எனது வாழ்த்துச் செய்தியினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்குப் பதிவுகள் இணைய இதழும் இணைந்து தன் பங்களிப்பை நல்க வேண்டி முனைவர் வே.மணிகண்டன் அவர்கள் தொடர்புகொண்டபோது மகிழ்வுடன் இணங்கினேன். முனைவர் வே.மணிகண்டன் வழி நடத்திலில் ஏற்கனவே இளமுனைவர் பட்ட ஆய்வுக்கு எனது படைப்புகள் மற்றும் பதிவுகள் இணைய இதழ் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இணைய இதழ்களின் ஆரோக்கியமான பங்களிப்பை நன்கு பயன்படுத்தும் முனைவர் வே.மணிகண்டனின் முயற்சியால் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் ஒன்றாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதே சமயம் 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் செயற்பட்டு வரும் 'பதிவுகள்' இணைய இதழின் இதுவரை காலப்பங்களிப்பையிட்டு எனக்கு மனத்திருப்தி நிறையவே உண்டு.
இணையத்தில் தமிழின் பாவனையை எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் அதிகரிப்பதையும், என் படைப்புகளை வாசகர்கள், எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்வதையே முக்கிய நோக்கங்கங்களாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட 'பதிவுகள்' இணைய இதழை வாசகர்கள், எழுத்தாளர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு முக்கியமான இணைய இதழ்களிலொன்றாக மாற்றி விட்டது. அத்துடன் தமிழகப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரின் பங்களிப்பு 'பதிவுகள்' இணைய இதழினை இன்று முக்கியமான பன்னாட்டு இணைய ஆய்விதழாகவும் மாற்றியுள்ளது.
தமிழிலக்கிய ஆய்வுகளுக்குப் 'பதிவுகள்' இணைய இதழ் களமமைத்துக் கொடுத்து வருவதையிட்டு நான் உண்மையில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். அதே சமயம் 'பதிவுக'ளின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (கனடா), பேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு), பேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்) மற்றும் எழுத்தாளர் லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா) ஆகியோர் பதிவுகளுக்கு ஆலோசகர்களாகவிருந்து ஆற்றும் பங்களிப்பும் விதந்தோதப்பட வேண்டியது. ஆரம்பத்தில் ஆலோசகர்களிலொருவராக விளங்கியவரும், பதிவுகள் இணைய இதழில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவருமான அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) அவர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன்.
இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழின் ஆய்வுப் பிரிவில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்படும். 'பதிவுகள்' இணைய இதழ் தொடர்ந்தும் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்குக் களமாக விளங்குவதுடன் , ஆதரவையும் வழங்கி வரும்.
இத்தேசிய கருத்தரங்கு பூரண வெற்றியடைய என் மனப்பூர்வமான வாழ்த்துகள். இதனை ஒழுங்குபடுத்திய அனைவருக்கும் குறிப்பாக முனைவர் வே.மணிகண்டன், முனைவர் மு.மங்கையர்க்கரசி (தமிழ்த்துறைத்தலைவர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி) ஆகியோருக்கும் , ஆய்வரங்க புரவலர்கள், நிறுவனர்கள், வழிகாட்டுநர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.