எழுத்தாளர் தமயந்தி சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல புகைப்படப்பிடிப்பாளரும் கூட. இதுவரை கால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் உருவாகிய மிகச்சிறந்த புகைப்படக்காரராக இவரையே நான் கருதுவேன். சிறந்த எழுத்தாளர் ஒருவர் எவ்விதம் மானுட வாழ்வை அணுகிப்படைப்புகளை அணுகுகின்றாரோ, அவ்விதமே காட்சிகளையும் அணுகும் சிறந்த புகைப்படப்பிடிப்பாளர் தமயந்தி. உயிர்த்துடிப்புடன் விளங்கும் புகைப்படங்களை மட்டுமல்ல சூழற் சீரழிவுகளையும் பார்ப்பவர்தம் உள்ளங்களைத் தைக்கும் வகையி்ல் புகைப்படங்களாக்குவதில் வல்லவர்.
'காக்கைதீவுக் கொக்கு' என்னும் தலைப்பில் அவர் பதிவு செய்திருந்த இப்புகைப்படம் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது. இது பற்றி என் எதிர்வினையினைப்பின்வருமாறு பதிவு செய்திருந்தேன்:
"நண்பரே, கல்லுண்டாய் வெளி , நவாலி மண் கும்பி, காக்கைதீவுக் கடற்கரை, அராலிப் பாலம் போன்றவற்றையும் உள்ளடக்கிய புகைப்படங்கள் இருந்தாலும் பகிர்ந்துகொள்ளவும். ஒரு காலத்தில் காலையும், மாலையும் அப்பிரதேசத்து அழகைப்பருகி மெய்ம்மறதிருந்தவன். இப்புகைப்படம் அந்நினைவுகளை மீண்டும் படம் விரிக்க வைக்கின்றன."
அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:
"நண்பா, நீங்கள் கேட்கும் இடங்களெல்லாம் முன்புபோல அல்ல. பிளாஸ்டிக் மற்றும் நச்சுக் கழிவுகளின் குப்பைத் திடல்களாக உள்ளன.
அராலி வயல்வெளிகளெல்லாம் விதைக்கப்படாத நிலங்களாக மட்டுமல்ல, பொலித்தீன் குப்பைகளால் நிறைந்து போயுள்ளன."
சுற்றுச் சூழற் சீரழிவு என்பது மிகவும் ஆபத்தானதொன்று. சமூக, அரசியற் தலைவர்கள் இவ்விடயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்துவதுடன் , மேலும் சூழல் சீரழியாதவாறு பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிக அளவில் எடுக்க வேண்டிய தருணமிது. இது சமபந்தமான தமயந்தியின் புகைப்படங்கள், காணொளிகள் மக்கள் மத்தியில் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இவரது இப்புகைப்படங்கள், காணொளிகள் கலைத்துவம் மிக்கவை மட்டுமல்ல சமூதாயப்பிரக்ஞையும் மிக்கவை.
'காக்கைதீவுக் கொக்கு'
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.