எனது கவிதைகளில் 39 கவிதைகளின் தொகுப்பிது. எதிர்காலத்தில் என் கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும். இத்தொகுப்பினை எனது வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்க'த்தில் நீங்கள் முழுமையாக வாசிக்கலாம். அதற்கான முகவரி: வ.ந.கிரிதரன் கவிதைகள் 37: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!
1. ஆசை!
அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.
கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.
நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.
பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.
இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.
2. இயற்கையே போற்றி!
எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து எங்கனுமே,
சூன்யத்துப் பெருவெளிகளும் சுடர்களும், கோள்களும்,
ஆழ்கடலும், பாழ் நிலமும், பொங்கெழி லருவிகளும்,
பூவிரி சோலைகளும இன்னும்
எண்ணற்ற , எண்ணற்ற கோடி கோடி யுயிர்களுமாய்
வியாபித்துக் கிடக்கும் பரந்து கிடக்கும்
இயற்கைத் தாயே! உனைப் போற்றுகின்றேன்.
நானுனைப் போற்றுகின்றேன்.
பொருளும் சக்தியுமாய்
சக்தியே பொருளுமாய்
E=M(C*C)
இருப்பதுவே யில்லாததாய்
இல்லாததே யிருப்பதுவாய்
உண்மையே பொய்மையுமாய்
பொய்மையே உண்மையுமாய்
நித்தியமே அநித்தியமுமாய்
அநித்தியமே நித்தியமுமாய்
புதிர்களிற்குள் புதிராகக்
காட்சிதரும் இயற்கைத்தாயே! உனைப்
போற்றுகின்றேன்! நானுனைப் போற்றுகின்றேன்.
3. தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை.
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில் நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப் பறவையெனவே.
இசை பாடிடுமெழிற் புள்ளெனவே.
கட்டுக்களற்ற உலகில் கவலைக் காட்டேரிகள் தானேது?
சட்டங்களற்ற வுலகில் சோகங்கள் தானேது?
ஒளித்தோழர்கள் வெட்கி ஒளிந்தனரென் பறத்தலின் பின்னே.
பிரபஞ்சத்து வீதிகளில் பறந்து மீள்கையில் படர்வது
பெருமிதமே.
நோக்கங்கள் விளங்கி விட்ட வாழ்வில்
தாக்கங்கள் தானேது? அன்றி
ஏக்கங்கள் தானேது?
தனிமைகளின் சாம்ராச்சியங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே.
இசை பாடிடுமெழிற் புள்ளெனவே.
முழுமையாக வாசிக்க: https://vngiritharan230.blogspot.com/2019/05/36.html?fbclid=IwAR0ukT544fxxwhImEqI29HpfIro5vh6BGogBRONEBwOUR3aFP1mt08azTEc#more