விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த இசைப்பிரியா ஊடகவியலாளர்; கலைஞர். கர்ப்பிணியான அவர் இறுதி யுத்தத்தில் இராணுவத்தின் கரங்களில் அகப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர். இராணுவம் புரிந்த யுத்தக் குற்றங்களுக்கு ஆதாரங்களாக இவரது வாழ்வின் இறுதிக்கட்டங்கள் சம்பந்தமாக வெளியான காணொளிகள் அமைந்துள்ளன. இசைப்பிரியாவை நினைக்கும் தோறும் கூடவே என் நினைவுக்கு வருபவர் 71 ஜேவிபி புரட்சியின்போது கொல்லப்பட்ட போராளியான பிரேமாவதி மனம்பெரி. பிரேமாவதியின் மரணத்துக்கான நீதி அவரது மரணத்தின் பின் கிடைத்தது. ஆனால் இசைப்பிரியாவுக்கான நீதி அவர் மரணித்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் கிடைக்கவில்லை. இதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை Six Degrees Of Separation: Sad Saga Of Premawathie & Isaipriya என்னும் இக்கட்டுரை. இதனை எழுதியவர் சண்முகம் கனகரத்தினம் ( Sanmugam Kanaga-Ratnam). இக்கட்டுரை வெளியான பத்திரிகை 'கொழும்பு டெலிகிறாப் (Colombo Telegraph)'.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்து பத்து வருடங்கள் கழிந்து இன்னும் அவற்றுக்கான நீதி கிடைக்கவில்லை. யுத்தக்குற்றங்களுக்கான சான்றுகளிருந்தும் இன்னும் அவற்றுக்கான நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் முறையான் நல்லிணக்கம் , அமைதி ஏற்படுவதற்கு இலங்கை அரசானது இறுதி யுத்தக்காலத்தில் புரியப்பட்ட யுத்தக்குற்றங்களை ஏற்று , அவற்றுக்குரிய நீதி வழங்குவது அவசியம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளைப்பற்றி நினைவுபடுத்தும் ஒரு குறியீடு இசைப்பிரியா. முள்ளிவாய்க்கால் படுகொலை தினமான மே 18 நாளினை முன்னிட்டு இக்கட்டுரையை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். இணைய இணைப்பு: https://www.colombotelegraph.com/index.php/six-degrees-of-separation-sad-saga-of-premawathie-isaipriya/
இலங்கையின் நிலை!
தற்போது இலங்கையில் ஏற்பட்ட சூழலுக்குக் காரணமும் இதுதான். அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த முஸ்லீம் மக்களுக்கும் , சிங்கள பெளத்தர்களுக்குமிடையிலான முரண்பாடுகளைப் பாவித்து அச்சக்திகள் இலங்கையில் புகுந்துள்ளன. தமிழர்களின் ஆலயங்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம்: ஏற்கனவே நாட்டில் தமிழ்- சிங்கள முரண்பாடுகளுள்ளன. இந்நிலையில் இவ்விதமான தாக்குதல்கள் தமிழ் சிங்கள மத்தியில் அவநம்பிக்கையினை, சந்தேகத்தினையேற்படுத்தி புதிய முரண்பாடுகளை உருவாக்கும். நாட்டின் நிலை சீர்குலையும். அவ்விதமான சீர்குலைவே இலங்கையில் காலூன்ற முனையும் சர்வதேசச் சக்திகளுக்கு அவசியம். முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கும் தம்மைப் பலப்படுத்த அது போன்ற சூழலே அவசியம். நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் இச்சூழல் தம் அரசியல் இலாபங்களுக்கு உதவும். இந்நிலையில் நாட்டு மக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியமானது. அதிகரித்தால் பாதிக்கப்படுவது அவர்கள்தாமே தவிர மேற்படிச் சர்வதேசச் சக்திகள் அல்ல. தற்போது ஏற்பட்டுள்ள சூழலை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம். இலங்கை அரசும் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை ஏற்கனவேயுள்ள முரண்பாடுகளை அதிகரிக்காத வகையில் கையாள வேண்டும். நாட்டின் அனைத்துப் பகுதிகளுமே எதிர்காலத்தில் பாதிக்கப்படாமலிருப்பதற்கு இது மிகவும் முக்கியம்.
ஏபரில் 19 அம்பாந்தோட்டைக்கு அமெரிக்கப்போர்க் கப்பல்களிரண்டு வந்து நங்கூரமிட்டுள்ள நிலையில், ஏப்ரில் 21 அன்று நாட்டில் குண்டு வீச்சுகளேற்பட்டுப் பேரழிவினையேற்படுத்தியுள்ளன. ஆச்சரியப்படத்தக்க தற்செயல் நிகழ்வுகளா இவை?
சிவம் அவர்களை நினைத்தவுடன் நினைவுக்கு வருபவை அவரது கண் சிமிட்டலும், சிரிப்பும் ஒருங்கிணைந்து உரையாடும் தோற்றம்தான். எனக்கு அவரைத் தேடகம் (கனடா) அமைப்பு மூலமே தெரியும். ஆனால் அதற்குப்பின்னரே அவரது கடந்த கால சமூக, அரசியல் வரலாற்றையும் அறிந்துகொண்டேன். எப்பொழுது எது பற்றியும் தர்க்கம் செய்தாலும், செய்கையில் அவருக்கேயுரிய பாணியில் கண் சிமிட்டியபடி, சிரித்தவாறே நட்புணர்வுடனேயே தர்க்கிப்பார். கருத்துகள் முரண்பட்டவையாக இருந்தாலும் அவருடன் தர்க்கிப்பவர்கள் ஆத்திரமோ, ஆவேசமோ அடைவதில்லை.
இருந்தவரையில் சமுதாயப் பிரக்ஞை மிக்கவராகவே விளங்கினார்..முடிவிலும் அவ்விதமே முடிந்து போனார். அன்று தொலைக்காட்சியில் வன்னியில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தக் காட்சிகளில் மக்களின் பேரழிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அவற்றால் மிகவும் மனம் வருந்தி மாரடைப்பினால் மரணித்தாரென்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.
அவரைப்பற்றி எப்பொழுது நினைத்தாலும் எனக்கு அவரது கண் சிமிட்டலும், சிரிப்பும் நினைவுக்கு வருவதுடன் கூடவே அன்றொருநாள் 'டொராண்டோ'பல்கலைக்கழக மண்டபத்தில் கனடாவுக்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் சுந்தர் ராமசாமியுடனான எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் 'ஏழாம் இலக்கிய வளர்ச்சி' நூலில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துகள் பற்றிய வாதப்பிரதிவாதங்களும் நினைவுக்கு வரும். அவ்விவாதத்தில் சிவம் அவர்களும் பங்கு பற்றித் தனது கருத்துகளை எடுத்துரைத்திருந்தார்.
சிவம் அவரது வரலாற்றை அவரைப்பற்றி அறிந்தவர்கள் முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். அது அவரது கடந்த கால சமூக, அரசியற் செயற்பாடுகளை முழுமையாக விபரிப்பவையாக அமைதல் வேண்டும். அவருடன் தொடர்ந்து பயணித்து வந்துள்ளவர்கள் வி.ரி.இளங்கோவனைப் போல் பலரிருப்பார்கள். அவர்கள் அதனைச் செய்வது வரலாற்றுக் கடமை.