இலங்கை என்னும் நாடு அங்கு வாழும் அனைவருக்கும் உரிய தாய்நாடு. ஆனால் நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 2009 வரை அங்கு வாழும் சிறுபான்மையின மக்களுக்கெதிராகக் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள், அரச அடக்குமுறைகள் , பயங்கரவாதத் தடைச்சட்டத் துஷ்பிரயோகம், மற்றும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் பலியாகிய தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காத நிலையில், சிறுபான்மையின மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இலங்கையில் அனைத்து மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாகி , அனைத்து மக்களும் நீதியின் முன் சமம் என்னும் நிலை உருவாகாத நிலையில், இழந்த காணிகள் இன்னும் முழுமையாகக் கிடைக்காத நிலையில், இன்னும் போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள் நடைபெற்று நீதி கிடைக்காத வரையில் இதுவரை நடைபெற்ற வன்முறைகளால பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்விதம் மனமொன்றி நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவார்கள்?
நீதியான தீர்வொன்று எட்டியதும், நடைபெற்ற அனைத்து அநீதிகளுக்கும் உரிய நியாயமான தீர்வுகள் வழங்கப்பட்ட பின்னர், தமிழர்கள் தாமாகவே முன்வந்து நாட்டின சுதந்திர தின விழாக்களில் பங்கு பற்றுவார்கள். அவ்விதம் நடைபெற வேண்டுமானால் , தென்னிலங்கையிலும் சரி, வட, கிழக்கிலும் சரி இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் . அது மிகவும் அவசியம்.
மேலும் இலங்கைக்கொடி மீள உருவாக்கப்பட வேண்டும். ஆயுதத்துடன் கூடிய சிங்கக்கொடி இனவாதத்தையே தூண்டும். ஏனைய இன மக்களை அச்சத்துடனேயே நோக்க வைக்கும்.
நடைபெற்ற அநீதிகளுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு , குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு , யுத்தகாலச் சூழலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் (அவர்கள் எவ்வினத்தவராக இருந்தாலும்) உரிய நீதியும், நட்டஈடுகளும் கிடைக்கவேண்டும். அவ்விதமானதொரு நிலை ஏற்படாத வகையில் , அனைத்து இன அரசியல்வாதிகளும் இனவாத அரசியலைத் தமது ஆதாயங்களுக்காக முன்னெடுத்துக்கொண்டேயிருப்பார்கள். இந்நிலையில் அனைத்து மக்களுக்கிடையிலுள்ள முற்போக்கு சக்திகள் , மனச்சுத்தியுடன் தீர்வுக்கான விடயத்தில் ஒன்றிணைந்து, இயங்க வேண்டியதும் அவசியம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.