1. கவிஞர் நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' பற்றி....
இத்தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் வருமாறு:
1. உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்
2. அதிமானிடன்
3. கோயிலின் வெளியே
4. நிலம் என்னும் நல்லாள்
5. தாத்தாமரும் பேரர்களும்
இந்நூலை நுஃமான் கவிஞர் மஹாகவிக்கும், நீலாவணனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.
இன்று கவிதைகள் என்னும் பெயரில் நூற்றுக்கணக்கில் எழுதிக்குவிப்போர் ஒரு கணம் நுஃமான் போன்றோரின் கவிதைகளை வாசித்துப்பார்க்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள் ஒருவருக்கு மரபுக்கவிதையின் அறிவு எவ்விதம் இன்றைய கவிதையினை எழுத உதவியாகவிருக்கும் என்பதை. உதாரணத்துக்கு நூலிலுள்ள நுஃமானின் 'அதிமானிடன்' கவிதையிலிருந்து ஒரு பகுதியைப்பார்ப்போம்:
அதிமானிடன்
எங்கும் இருட்டாய் இருந்தது. அந்தக்
கங்குற் பொழுதில் கறுத்த வானிலே
மின்னல் ஒன்று மின்னி மறைந்தது.
மின்னலின் பின்னால் மிகப் பெரிதாக
இடி இடித்துக் குமுறி இரைந்தது.
இடியின் ஒலியில் இருண்டு கிடந்த
கானகம் அதிர்ந்து கலகலத்தது.
யானைகள் பயந்து பிளிறி இரைந்தன.
தாரகை போலத் தணலாய்ச் சிவந்த
கண்களை உடைய புலிகள் உறுமின.
அடர்ந்த அந்தக் காட்டின் இடை ஓர்,
இருட்டுக் குகையுள் இருந்தான் மனிதன்.
பரட்டைத் தலையன். பிறந்த மேனியாய்க்
கையில் தடியுடன் காவல் இருந்தான்.
இந்தக் கவிதையை வாசிக்கும்போதே மனதுக்கு மொழி இன்பமளிக்கவில்லையா? இதற்குக் காரணம் என்ன? அதற்குக் காரணம் கவிதையில் கவிஞரின் மரபுக்கவிதை பற்றிய அறிவின் தாக்கம் இருப்பதுதான்.
எங்கும், கங்கும் (எதுகை), இருட்டாய், இருந்தது (மோனை), மின்னல், மின்னி, மறைந்தது (மோனை), இவை போல் கவிதையில் சொற்கள் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் இயல்பாக வந்திருப்பதால்தான் கவிதை சிறக்கிறது. மேலும் கவிதையில் ஈரசைச்சீர்களை (ஆசிரியப்பா கவிதை வடிவத்திலுள்ளதைப்போல்) நுஃமான் அதிகமாகப்பாவித்திருக்கின்றார். அதுவும் கவிதையைச் சிறக்க வைக்கின்றது. இவ்விதம் கவிதை சிறப்பாக அமைந்திருப்பதற்கு நுஃமானின் மரபுக்கவிதை பற்றிய பாண்டித்தியம் உதவியிருக்கின்றதென்பதென் எண்ணம்.
சூத்திரங்களுக்குள் சிக்கிக்கிடக்கும் மரபுக்கவிதையின் அடிமை நிலையினைச் சிறிது நீக்கி, அதற்கேயுரிய சிறப்பான பண்புகளுடன் , படைக்கப்பட்ட கவிதைகள் நுஃமானின் கவிதைகள்.
அதற்காகக் கவிதையென்றால் இவ்விதம்தான் மரபுக்கவிதையின் அம்சங்களுடன் கூடி இருக்க வேண்டுமா என்று யாரும் கேட்கலாம். அதற்கான என் பதில்: இல்லை என்பதுதான். மொழியைத் திறமையாகக் கையாள்வதற்குக் கவிஞர் ஒருவருக்கு மரபுக்கவிதை பற்றிய அறிவு உதவும் என்பது நம்பிக்கை. உதாரணத்துக்கு அ.யேசுராசாவின் புகழ்பெற்ற கவிதையான 'நல்லம்மாவின் நெருப்புச் சட்டி'யில் இவ்விதமான மரபுக்கவிதையின் அம்சங்கள் அதிகமாக இல்லை. ஆனால் அக்கவிதை சிறப்பாக வந்திருப்பதற்கு அதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி, விரவிக்கிடக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு ஆகியவை முக்கியமான காரணங்கள்.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை 'நிலம் என்னும் நல்லாள்'.
நூலுக்குக் கவிஞர் முருகையன் நல்லதொரு முன்னுரையினை எழுதியிருக்கின்றார்.
நூலின் முன்னுரையில் நூலிலுள்ள கவிதைகளைப்பற்றிக் கவிஞர் முருகையன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
"'உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்' என்பது முதலாவது கவிதை.காலமும் இடமுமாய் விரிந்து பரந்து கிடக்கும் உலகுக்கும், தனிமனிதன் ஒருவனுக்குமுள்ள தொடர்பு என்ன? இசைவு எப்படிப்பட்டது? இத்தகைய வினாக்களை இக்கவிதை எழுப்புகிறது. கவிதையின் பெரும்பகுதியில், ஐயங்களும், வியப்புகளும், திகைப்புகளுமே காணப்படுகின்றன. ஆனால், கவிதை வளர்ந்து முடிவுறும் தருணத்தில், கவிஞன் வெளிப்படுத்த எண்ணிய கருத்து நன்கு புலப்படுகிறது. தனிமனிதர்கள் தம் மனத்திலே உலகு பற்றிப் பலவாறாக எண்ணிக் கொள்ளலாம்; ஆனால் அந்த எண்ணங்களுக்குப் புறம்பாக, அந்த எண்ணங்களுக்குக் காலாக, யதார்த்தமான புறவுலகு உண்டு என்னும் தெளிவு உதயமாகிறது. இந்த உதயமே அக்கவிதையின் அடிக்கருத்து எனலாம்.
இக்கவிதையைப் படுக்கும் போது Dylan Thomas என்பார் எழுதிய 'Under Milk Wood' என்ற ஒலி நாடகம் என் நினைவுக்கு வருகிறது. குரல்களுக்கென எழுந்த அந்நாடகம், கடற்கரைப் பட்டினமொன்றில் வாழும் மாந்தர் சிலரின் நடத்தையைச் சித்திரமாக்குகிறது. ஒரு நாள் வைகறைப் பொழுதிலே தொடங்கி மறுநாள் வைகறைப் பொழுதில் நாடகம் முடிகிறது. அந்த நாடகத்தில், இடப்பரப்பு ஒரு குறிப்பிட்ட பட்டினத்தின் எல்லைக்குள் மட்டுப்பட்டு நிற்கிறது. காலப்பரப்போ ஒரு முழுநாள் என்னும் எல்லைக்குள் மட்டுப்பட்டு நிற்கிறது. ஆனால், நுஃமானின் கவிதையில் மேற்படி மட்டுப்பாடுகள் இல்லை. அந்த நாடகத்திலே தோமஸின் நோக்கம் மனித உறவுகளையும் நடத்தைகளையும் படம்பிடிப்பதே ஆகும்.
இந்தக் கவிதையிலே, நுஃமானின் நோக்கம், உலகுக்கும் மனிதனுக்குமுள்ள உறவுகளை விசாரணை செய்வதே ஆகும். அந்த நாடகமும் இந்தக் கவிதையும் பல வித்தியாசங்களை உடையன. ஆனால் வியக்கத்தக்க ஒற்றுமைகள் சிலவற்றையும் நான் காண்கிறேன். 'அதிமானுடன்' என்னும் கவிதை, நுஃமானின் படக்காட்சி உத்திக்கு நல்ல உதாரணம். வரலாற்றின் ஓட்டத்திலே பற்பல நூற்றாண்டுகளின் படுவேகமான சுழற்சியை மிகவும் இலாவகமாகக் கையாளுகிறார் கவிஞர். மனித குலத்தின் இரு பாதிகளிடையும் உள்ள உள்முரண், வரலாற்றை நடத்திச் செல்லும் உந்தலாய் அமைவதை இக்கவிதையில் உணர்த்துகிறார் நுஃமான்.
'கோயிலின் வெளியே' நாடகப் பாங்கான அமைப்பு. நான் எழுதிய 'கோபுர வாசல்' என்னும் நாடகத்தின் இறுதிப் பகுதியிற்கூட, நுஃமான் கவிதையின் செல்வாக்குச் சிறிதளவு படிந்திருப்பதை நான் இப்போது உணர்கிறேன்.அடுத்து 'நிலம் என்னும் நல்லாள்' என்னும் கவிதை வருகிறது. இது கிழக்கிலங்கைக் கமச்செய்கையின் யதார்த்தச் சித்திரமாகும். நம்மவர்களின் சிறுகதைகளும், நாவல்களும் கூட, இக்காட்சிகளை இத்துணை நடப்பியல் நயம் பொருந்த விபரித்துள்ளன எனல் கூடாது. கே. ஜயதிலக என்னும் சிங்கள நாவலாசிரியர் தமது 'சரித துணக்' என்னும் நாவலில், சிங்களக் கிராமத்துக் கமச் செய்கை பற்றியும், சேனைப் பயிர்ச் செய்கை பற்றியும் இயற்றிக் காட்டியுள்ள சொல்லொவியங்கள், நுஃமானின் கவிதைகளைப் படிக்கையில் என் நினைவுக்கு வந்தன. 'தாத்தாம்ரும் பேரர்களும்' என்பது முஸ்லிம் சமுதாய சரித்திர நோக்கு உடையது. ஏற்கனவே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ள இக்கவிதை இனியும் மக்களின் சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலே சொல்லப்பட்டவை வெறும் அறிமுகக் குறிப்புகளே. நுஃமானின் கவிதைகள் விரிவான ஆய்வுக்கு உட்பட வேண்டியவை எனினும் இந்த முன்னுரையில் இக்குறிப்புகளே போதும் என எண்ணுகிறேன்."
இந்நூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு:
http://www.noolaham.org/…/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF
முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...
முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் ஈழத்துக் கவிதையுலகில் முக்கியமானதொரு நாடகம். 'நாடகம் நான்கு' என்னும் நூலில் இடம் பெற்றுள்ள நாடகங்களிலொன்று. இதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி.
இந்நாடகத்தின் முதல் மேடையேற்றம் 01-04-1969 அன்று கொழும்பு ஹவ்லொக் நகர் லும்பினி அரங்கில் , மெளனகுருவின் இயக்கத்தில் மேடையேறியது.
இந்நாடகத்தின் முக்கியமான கரு: மானுட வரலாற்றில், ஆதிச்சமுதாய அமைப்பில் பொதுவுடமை சமுதாய அமைப்பு முறை நிலவியது. ஆனால் காலப்போக்கில் அவ்விதம் நிலவிய அமைப்பு வர்க்கம், சாதி, இனபேதம் மற்றும் நிறபேதம் போன்ற பிரிவுகளாகப் பிளவுண்டுவிடுகின்றது. இவ்விதம் பிளவுண்டு கிடக்கும் மானுட சமுதாயத்தை மீண்டும் அந்தப்பொதுவுடமை சமுதாய அமைப்பு நோக்கி, உழைக்கும் மானுடர் வழி நடத்திச்செல்வர் என்பதை மையமாக வைத்துப்பின்னப்பட்ட நாடகமே 'சங்காரம்'.
இந்நாடகத்தின் முக்கியமான இன்னுமொரு அம்சமொன்று நாடகத்தின் முக்கிய பாத்திரங்களான சமுதாயம், சாதி அரக்கன், வர்க்க அரக்கன், இனபேத அரக்கன், நிறபேத அரக்கன் ஆகியவற்றைச் சமுதாயப்பிளவுகளைச் சுட்டிக்காட்டும் குறியீடுகளாகப் படைத்திருக்கின்றார் மெளனகுரு.
இந்த நாடகத்தின் முக்கிய குறைபாடாக நான் கருதுவது பாத்திரங்களில் பெரும்பாலானவை ஆண்களாகப் படைக்கப்பட்டிருப்பதுதான். வர்க்க அரக்கன், சாதி அரக்கன், இனபேத அரக்கன், நிறபேத அரக்கன், உழவன், மூட்டை சுமப்பவன், பணக்காரன் இவ்விதம் ஆண்பாலில் பாத்திரங்கள் வருவது அக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் ஏற்கத்தக்கது. ஆனால் பெண்ணியக்கருத்துகள் விரிவடைந்துள்ள இக்காலகட்டத்தில் பொருந்தாதென்பதென் கருத்து. இப்பிரச்சினையை மிகவும் இலகுவாகத்தீர்க்கலாம். வர்க்க அரக்கர், சாதி அரக்கர், இனபேத அரக்கர், நிறபேத அரக்கர், உழவர், மூட்டை சுமப்பவர், பணக்காரர், தலைவர் என இருபாலாருக்கும் பொதுவான பெயரில் பாத்திரங்களை அழைப்பதன் மூலம் இக்குறைபாட்டினை மிகவும் இலகுவாகத்தீர்க்கலாம். எனவே இனிவரும் மேடையேற்றங்களில், பதிப்புகளில் இவ்விதமான மாற்றத்தைச்செய்வதன் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்படுமென்று எதிர்பார்ப்போம். இல்லாவிட்டால் மெளனகுருவின் ஆணாதிக்கச்சிந்தனையின் வெளிப்பாடிது என்று விமர்சனங்கள் எழக்கூடும்.
இலங்கைத்தமிழ்க் கவிதையுலகில் வெளியான முக்கியமான கவிதை நாடகங்களிலொன்று மெளனகுருவின் 'சங்காரம்' என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துகளிருக்காது.