காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின் பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்!
நான் கருதுகிற காலம் அவையல்ல. இது நான்காவது பரிமாணம் எனப்படுவது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்ற மாமேதையின் ஆய்வில் முக்கிய வரைவிலக்கணம் பெற்றது. ஐன்ஸ்டீன் வரையறை செய்த காலமென்ற கருப்பொருளின் அறிதல் பரவசம் செய்வது. அவர் கண்டுபிடித்த பல்வேறு பௌதீக விஷயங்கள் இன்றைய விஞ்ஞானத்தை பாய்ச்சல் நிலைக்குத் தள்ளியபோது மனிதனின் வாழ்வு, அவனது கற்பனைகள் சார்ந்த விஷயங்களை விளக்கிட முனைந்தது அவரது காலம்பற்றிய கருதுகோள்தான். நீளம், அகலம், உயரம் ஆகிய முப்பரிமாணங்களுடன் காலத்தையும் ஒரு பரிமாணமாகக் கொண்டு அதை நான்காவது பரிமாணமாக ஆதாரபூர்வமாய் நிறுவியவர் அவர்.
‘காலமென்பது நோக்குகிறவனின் இருப்பிடமும், அவனது இயக்க வேகமும் சார்ந்தது. மற்றப்படி அதற்கு சுயமான நிலையில்லை’ என்ற வரையறை அவரதுதான். இதிலிருந்து காலமும் வெளியும் சார்ந்த விஞ்ஞானக் கதை மரபு இலக்கியத்தில் உருவானது. காலம்பற்றிய பிரக்ஞை ஒருவருக்கு தன் கடமைகளின் பாரம் அதிகமாகிற ஒரு தருணத்திலோ, தன் கடமைகளை நிறைவேற்ற முடியாது போய்விடலாம் என்ற அச்சநிலை ஏற்படும் வேளையிலோ தோன்றத்தான் செய்கிறது. எனது காலம்பற்றிய உசாவுகை கடமைகளின் பாரம், வாழ்நிலையின் எச்சம் சார்ந்ததல்ல. அது ஆசைகள்பற்றியது. வாசித்தலின் ஆசைகள்பற்றியது. இந்த இடத்தில்தான் எழுத்தாளர் பிரபஞ்சனுடனான சந்திப்பு தொடர்புபடுகிறது.
எனது வாசிப்புகள் பக்கத்து வீட்டு மலரக்கா வாசிக்கும் அம்புலிமாமா, கல்கி, ஆனந்தவிகடன், கல்கண்டு, பேசும்படம் போன்றவையாக இருந்தது இயல்பானது. பின்னால் எனது நண்பன் ஒருவனின் அண்ணா வாசிக்கும் பி.எஸ்.ஆர்., மேதாவி போன்றோரின் துப்பறியும் கதைகளின் வகையினமாக இருந்ததும் இயல்பானதுதான். அந்தவகையில் என் நினைவிலுள்ள முதல் நூல் பெயர் மறந்த ஓர் ஆசிரியரின் ‘வடிவாம்பாளின் உயில்’ என்பதாகும். எனது தந்தை மரணித்த காலப்பகுதியை வைத்துப் பார்க்கையில் எனக்கு அப்போது பத்து வயதிருக்கலாம். நாளுக்கு இரண்டு மூன்று நூல்கள் வாசிக்கும் பழக்கம் இருந்த நிலையில், என் பள்ளிக்கூட பாடங்களின் படித்தலுக்கும் காலம் அப்போது நிறையவே இருக்கச் செய்தது.
அங்கிருந்துதான் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும், அகிலனுக்கும், நா.பார்த்தசாரதிக்கும், சாண்டில்யனுக்கும், அரு.ராமநாதனுக்கும் என் வாசிப்பு நகர்ந்தது. ஏறக்குறைய இரவு இரண்டு மணி வரைக்கும் மண்ணெண்ணை விளக்கைத் தலைமாட்டில் கொளுத்தி வைத்துக்கொண்டு, மடித்து உயரமாக்கிய தலையணையின் உதவியுடன் வாசித்துக்கொண்டு கிடந்திருக்கிறேன். இந்தநேரத்தில் பள்ளிப் பாடங்களை நான் படிக்கவில்லையெனத் தெரிந்திருந்தும், என் வாசிப்புக்கு ஓர் இடையூறும் செய்யாது நான் வாசிப்பை முடித்து விளக்கை நூர்த்து தள்ளிவைத்துவிட்டு நித்திரை போகும்வரை, வாசித்துக்கொண்டு கிடக்கையில் அப்படியே நித்திரையாகி எரிந்துகொண்டிருக்கும் விளக்கைத் தட்டி நான் ஆபத்து எதையும் அடைந்துவிடக்கூடாதேயென்று தானும் விழித்திருந்த என் அம்மாவை நினைத்துக் கொள்கிறேன். அங்கிருந்து எஸ்.பொ.விற்கும், ஜெயகாந்தனுக்கும், பின்னால் நூலகங்களினூடாக புதுமைப்பித்தனுக்கும், கு.ப.ரா.விற்கும், அழகிரிசாமிக்கும் நான் வந்தேன். ஊர்சுற்று, விளையாட்டு, படிப்பு, பின்னர் இவ்வளவு வாசிப்புக்களுக்கும்கூட எனக்கு அப்போது காலம் இருந்ததை நினைக்க இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.
நான் வாசிக்க விரும்பியும் கிடைக்காமலிருந்த நூல்களையும், பார்க்க விரும்பி வாய்ப்பற்று இருந்த உலக, இந்திய சினிமாக்களையும் தமிழகத்தில் ஒரு நிர்ப்பந்த வாழுகை ஏற்பட்டு நான் தங்கியிருந்த சுமார் பதினைந்து ஆண்டுக் காலத்தில் வாசித்தும் பார்த்தும் முடித்தேன். வாசிப்பு என்பது இயல்பாகியிருந்தது. புதிய புதிய நூல்கள் தரும் செய்திகளையும், அவற்றின் உணர்வு எறிகைகளையும், கட்டுமானப் பரவசங்களையும் அனுபவிக்காமல் தூங்கமுடியாதென்ற ஒரு வியாதியாக அது இருந்தது. ஆனால் கனடா வந்த பிறகு, பாதிக்குப் பாதியாக என் வாசிப்பு குறைந்துபோயிற்று. தமிழ்நாட்டிலிருந்து மாதந்தோறும் எடுப்பிக்கும் நூல்கள், கால் பங்குக்கு மேல் இன்னும் வாசிக்காமலே கிடக்கின்றன.
நேரம் போதாமலிருக்கிறது என்று சொல்லி நான் சுலபமாகத் தப்பித்துவிட முடியாது. இதற்கான விடை எனக்குத் தெரிந்தாகவேண்டும். வாசிக்காத நூல்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதை இனிமேலும் அனுமதிப்பது சாத்தியமில்லை.
இந்தப் போதாமையை எழுத்தாளர் பிரபஞ்சனுடனான சந்திப்பின்போது நான் வன்மையாய் உணர்ந்தேன்.
பிரபஞ்சனை தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் நான் நன்கறிவேன். அவரது ‘மானுடம் வெல்லும்’ நாவல் தொடராக வந்த காலத்தில், புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரரின் ஆட்சியை அக்காலப்பகுதியில் துவிபாஷியாக இருந்த ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பை முக்கிய ஆதாரமாகக்கொண்டு புனையப்பெற்ற அந்த நவீனத்தை வாசித்து நான் கொண்ட பரவசம், என்னை அவர்பால் ஈர்த்தது. பின்னர் இலக்கியக் கூட்டங்களில் சந்தித்து உரையாடிய அனுபவம். அவரது சென்னை இல்லம் புத்தகங்களால் நிறைந்தது. அது புத்தகங்கள் வாழும் இல்லம். வேறுபேர் வாழ்வதற்கு இடம் குறைந்தது. இருந்தும் அந்த நூல் தொகை என்னைப் பெரிதாக என்றுமே வியப்பிலாழ்த்தியதில்லை. ஆனால் கனடா ஸ்கார்பரோவில் நிகழ்ந்த சந்திப்பில் நான் அவரிடமில்லாதிருந்த, ஆனாலும் அவர் கொண்டிருந்த வாசிப்பின் பரப்பளவைக் கண்டபோது பிரமிப்படைந்தேன்.
ஜோ. டி குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ பற்றிச் சொன்னார். ஜெயமோகனின் ‘காடு’பற்றி, தாஸ்தாயெவ்ஸ்கிபற்றிச் சொன்னார். இவைகளை அதிர்ஷ்டவசமாக நான் ஏற்கனவே வாசித்திருந்தேன். ஆனால், நாவல்களில், சிறுகதைகளில், கவிதைகளில் புதியதலைமுறையின் படைப்புக்கள்பற்றிச் சொன்னபோது என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதுபோன்ற பிரமிப்பை முன்னர் ஜெயமோகனிடம்தான் நான் அடைந்திருந்தேன். ஊட்டியில் மு.தளையசிங்கம் படைப்புகள்பற்றிய கருத்தரங்குக்கு நானும் வெங்கட் சாமிநாதனும் சென்னையிலிருந்து ஒன்றாகச் சென்றிருந்தோம். அமர்வு தொடங்குவதற்கு முன்னாக நாம் சென்று சேர்ந்த முதல்நாள் இரவில், எங்கள் வசதிகளைக் கேட்கவந்த ஜெயமோகன் சுமார் நான்கு மணிநேரம் பல்வேறு விஷயங்களைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். எல்லாம் சமகால நாவல்கள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள்பற்றியவை. மிகச்சிறந்த எழுத்தாளராக மட்டுமே அவரை அறிந்திருந்த நான், அன்றுதான் அவரை ஓர் இலக்கியத் தகவல் களஞ்சியமாகவும் கண்டேன். கனடா வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சனின்மீதான வியப்பு அதற்குச் சமமாக இருந்தது. ஈழத்தில் இதுபோல் சொல்ல கனக-செந்திநாதன் மட்டுமே இருந்தார். ஆனாலும் அவரை வியந்த அளவுக்கு, அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
என் வாசிப்பின் குறைவுகளைச் சுட்டிக் காட்டிய இதுதான், காலத்தைப் பற்றிய என் விசாரிப்பை வலிதாக்கியது.
காலத்தை நாம் நடத்துகிறோமா அல்லது காலம் நம்மை நடத்திக்கொண்டிருக்கிறதா? வாழ்வின் விசை வெகுவேகம் பெற்றிருக்கும் ஒரு நாட்டில் வந்து உயிர்வாழ்வதற்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்டோமா? அல்லது வாழ்க்கை எங்கேயும்தான் விசைபெற இயங்கும் தளமாகிவிட்டதா பூமி? அப்படியாயின் இங்கே நமக்கான காலத்தை வகிர்ந்தெடுப்பது எவ்வாறு?
விடையைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்
நன்றி: 'கதாகாலம்' - http://www.devakanthan.blogspot.com/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.