[வலைப்பதிவுகளிலிருந்து அவ்வப்போது ஆக்கங்கள் ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றன. அந்த வகையில் எழுத்தாளர் தேவகாந்தனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்] இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் பின்பாதியினது போக்கினை நிர்ணயித்த முக்கியமான நாவலாகக் கருதப்படும் சிமோன் டி போவுவாவின் ‘அடுத்தவர் குருதி’ (The Blood of others) என்ற தத்துவார்த்த நாவலை அண்மையில்தான் வாசித்தேன். சிமோன் டி போவுவாவின் The Second Sex என்ற இரண்டு தொகுப்பு பெண்ணியச் சிந்தனைபற்றிய முக்கியமான நூலோடு சில காலத்துக்கு முன்னரே தொடர்பு ஏற்பட்டிருந்தபோதும், அவரது படைப்பிலக்கிய நூல்கள்பற்றித் தெரிந்திருந்த நிலையில்கூட, அவரது நாவல்களுள் பிரவேசிப்பதற்கான பெரிய ஆர்வமேதும் என்னிடம் எழுந்திடவில்லை.
‘அடுத்தவர் குருதி’யின் வாசிப்பு தற்செயலானதுதான். வழக்கம்போல் டவுண்ரவுணில் எனக்குத் தெரிந்த ஒரு பழைய நூல் விற்பனைக் கடைக்குள் நேரத்தை மறந்திருந்த வேளையில் என் பார்வையில் அகப்பட்டது சிமோன் டி போவுவாவின் அந்த நூல். வாசிப்பை மெதுவாகவே செலுத்த முடிந்திருந்தது. அத்தனைக்கு நாவலின் வசீகரத்தையும் மீறி அதன் நடையும், அது தாங்கி வந்திருந்த சிந்தனைப் போக்குகளும் அடர்த்தியானவையாக இருந்தன.
மடித்துவைத்து வாசிக்கையில் முதலில் அட்டைகளும், பின்னர் பின்பக்கங்களும் கழரத் தொடங்கிவிட்டன. சிலபோது புத்தகப் பூச்சிகளின் மெல்லிய ஊர்வையும் முகத்தில் உணர நேர்ந்தது. இத்தனையையும் தாண்டியே அந்நாவலின் பயணிப்பு மிகமிக இனிமையானதாக இருந்ததென்பது முக்கியமான விஷயம். ஒரு நாவல் வாசிப்பில் நானடைந்த முக்கியமான அனுபவத்தின் கதையே இது.
எந்த ஒரு படைப்பினதும் வாசிப்பு அனுபவங்கள் தம்மை எழுத்தாக்க, பகிர்ந்துகொள்ள தம் வாசகனை பெரும்பாலும் நிர்ப்பந்திப்பதில்லை. மிக்க பாதிப்பினை ஏற்படுத்திய படைப்புகளும்கூடத்தான். ஆனால் சில படைப்புக்கள் தாம் சார்ந்த கருத்துநிலைகளாலும், உணர்வுநிலைகளாலும், கட்டுமானத்தாலும் வாசக அனுபவங்களோடு ஒன்றிணையும்போது அவைபற்றி எழுதாமல் இருந்துவிடவும் முடிவதில்லை. அத்தகைய நாவல்தான் இது. நடந்து முடிந்த ஈழப் போரின் அவலம், அதில் சிந்தப்பட்ட குருதி அனைத்துமே எந்த ஒரு படைப்பின் மூலகர்த்தாவையும் உலுப்பிப் போடக்கூடியன. என்னால் ஏனோ இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகக் கதைக்களம் விரித்து, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது முடிவடையும் இந்த நாவலை அந்த அவலங்களோடும், குருதியாற்றோடும் ஒப்புமை காண முடிந்திருந்தது.
மனித இனத்தின் மிகப்பெரும் வரம் இறப்பு. இறப்புதான் வாழ்வையே அர்த்தமாக்குகின்றது. ஆனால் போர்கள் மனிதனைக் கொலைப்படுத்துகின்றன. கொலைகள் மனித இனத்தின் சாபமெனில், போர்கள் மனிதன்மேல் சாபத்தைக் கொட்டுகின்றன.
உலகத்தின் முதல் கொலை நடந்ததை விவிலிய நூல் பதிவுசெய்து வைத்திருக்கிறது. சகோதரப் பொறாமை விழைத்த பெண் பொன் ஆசைகளால் காயீன் கொலைப்படுகிறான் தன் சகோதரனால். அன்றிலிருந்து இன்றுவரை கொலைப்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
போர்கள் ஆயிரங்களாக கொலைப்பாடுகளை நிகழ்த்துகையில் மனங்கள் அசைகின்றன. அதிர்கின்றன. எதிர்வினையாற்ற உந்துகின்றன. சாதாரண மனிதனின் சாதாரண எதிர்வினை எதுவாக இருக்கிறது? அதை விபரிக்கிறது ‘அடுத்தவர் குருதி’.
240 பக்க இந்த நாவலின் மையம் இதுவெனில், இதிலிருந்து கிளைத்தெழும் சுழிகள் பல. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலிலக்கியம் ஜேன் ஒஸ்ரென், லூயி கரோல், சார்ள்ஸ் டிக்கின்ஸ், மேரி செல்லியென விக்டோரியன் காலத்தை உள்வாங்கிப் பயணம் செய்துகொண்டிருக்கையில், நாவலிலக்கியத்தில் பிரான்ஸ் எடுத்த பாய்ச்சலின் அளவீடாக வருவதுதான் சிமோன் டி போவுவாவின் ‘அடுத்தவர் குருதி’. அது ஒரு புதிய தளத்தினை அடையாளம் காட்டியது மொழி நடை சார்ந்தும், அர்த்தம் சார்ந்தும். சார்த்தரின் தத்துவார்த்த வெளிப்பாடுகளின் முனைகளைக்கூட இந்த நாவலில் ஒருவர் தரிசிக்க முடியும்.
சிமோன் டி போவுவா பாரிஸில் தங்கியிருந்தபோது, புளோர் காபி கடை ஒன்றிலிருந்துகொண்டு 1941-43 காலப் பகுதியில் இது எழுப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1945இல் இது வெளிவந்தது. இதன் ஆங்கிலப் பதிப்பு இவொன் மொய்செ, றோஜேர்ஸ் சென்ஹவுஸ் ஆகியோரின் மொழியாக்கத்தில் 1948இல் வெளிவந்தது.
இதற்கு முன்னரே சிமோன் சில நாவல்களை, குறிப்பாக பிரான்சின் மிக்க கவுரவமான இலக்கியப் பரிசான கொன்கோர் விருதினைப் பெற்ற ‘தி மாண்டரின்’ போன்றவற்றையும், நாடகங்கள் சிலவற்றையும், வேறு படைப்பாக்கங்களையும் செய்திருந்தாலும், சிமோனே ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளின் பின் தன் அதிருப்தியான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்த இந்த நாவல், இதில் நானடைந்த அனுபவங்கள் காரணமாய் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
ஒரு யுத்த காலத்தில் தனிமனிதன் ஒருவனின் சார்பு எதுவாக இருக்க முடியும் என்பதை மையக் கருத்தாய் விபரித்தது நாவல். ஆனால், அதன் குரல் முழுக்க முழுக்க கதையுள் அழுந்தியிருந்தது. கருத்தின் புடைப்புக்களாக எதையுமே நாவலில் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.
வார்க்கப்பட்டிருந்த பாத்திரங்கள் எதார்த்தமானவை. பிரதியில் கொண்டுவரப்பட்ட காலமும் சமச்சீர் குலைந்த ஒரு பெருயுத்தத்துக்கு முன்னான சமூகத்தை அச்சொட்டாய்ப் பிரதிபலிப்பதாய் இருந்தது. யுத்தத்துக்கு முன்பாக வெறும் காதல் நவீனமாகத் தொடங்கும் நாவல், யுத்தம் ஆரம்பித்து ஜேர்மனி பிரான்ஸ{ள் பிரவேசித்து பாரிஸ் நகரைநோக்கி முன்னேறிக் கொண்டிருக்கையில் காதல் உள்ள மனிதர்களின் தேசாபிமானமும் மனிதாபிமானமும் மிக்க கதையாக நகரத் தொடங்கிவிடுகிறது.
ஆயினும் வாழ்வின் ஆதார உணர்வுகளைச் சுற்றியே நாவல் நகர்ந்து, கதாநாயகி ஹெலனின் மரணத்தோடு முடிவடைகிறது. ஜேர்மன் படையின் ஆக்கிரமிப்புக்கெதிரான தேசபக்த புரட்சியாளரின் இரகசிய குழுவில் தன் காதலனின் தலைமையிலேயே ஒரு எதிர்ப்பில் கலந்துகொண்ட ஹெலன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தானே அவளது அந்த நிலைமைக்குக் காரணமென எண்ணி வருந்தும் அவளது காதலனான ழீன் புளொமார், அவள் படும் உத்தரிப்புக்களைத் தாங்க முடியாது அவளது மரணத்தை ஒவ்வொரு விநாடியும் இச்சித்தபடி மறுகும் இடம் எவர் மனத்தையும் உலுப்பக்கூடியது. இருந்தும் இது ரொமாண்டிச வகையான நாவலாக அமையவில்லை என்பதுதான் இதன் முக்கியத்துவம்.
ஹெலன் பாத்திரத்தின் வார்ப்பு அபாரமானது. பதின்ம வயதில் தன்னிடம் தோன்றும் காதலை, சமூகப் பொறுப்புணர்வுடன் சிந்திக்கத் தெரிந்த ழீன் புளொமார் மறுதலிக்கும்போது, அந்தத் தோல்வியை, இழப்பை, ஆற்றாமையைத் தாங்கமுடியாத ஹெலன் ஆக்ரோஷம்கொண்டு தன்னையே ஒருவனிடம் இழந்து கருத்தரிக்கிறாள். மிக்க இயல்பில்லாத இந்த விஷயமே ஹெலன் பாத்திரத்தின் வார்ப்புமுறையால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாய் ஆகிவிடுகிறது வாசகனால். அவள் ழீன் புளொமார்மீது கொண்டிருந்த வெறித்தனமான காதலையே அதில் அவன் காண முடிந்திருக்கும். அத்தகைய ஒரு பெண், ழீன் புனொமாரின் அன்பை நீண்ட சம்பவங்களின் பின் பெற்றபிறகு தேசத்தின் யுத்தநிலைமை காரணமாய் ழீன் புளொமார் பிரான்ஸ் ராணுவத்தில் சேர்ந்தவுடன் ஜேர்மனி செல்ல முடிவெடுக்கிறாள்.
ஜேர்மனியின் பிடிக்குள் பிரான்ஸில் நிலவிய பசி, பிணி, மரணங்கள் அதற்குக் காரணமாகின்றன. அவ்வாறு தப்பியோடுவதே உயிர்பிழைக்கும் வழியாகவும் பலபேருக்கு ஆகிவிடுகிறது.
இந்த நிலையில்தான் யுத்தவெறியின் பயங்கர முகத்தை வழியிலே ஹெலன் தரிசிக்கிறாள். ரத்தமும், பிணங்களும், அங்க இழப்புக்களும், இறந்தவர் மேலான இருக்கும் உறவினரின் பிரலாபிப்பும் அதுவரை அவள் கண்டிராத சோகத்தின் சாறாய் அவளுள் இறங்குகிறது. பாதி வழியிலேயே தன் ஜேர்மன் பயணத்தை நிறுத்திக்கொண்டு தன் ஊர் திரும்புகிறாள். அடுத்தவர் குருதியெனினும் அது குருதி. தன் குருதி சிந்தலுக்குப் பயந்து எதிரி நாட்டிலேனும் உயிரோடு வாழ்ந்துவிட ஜேர்மனி ஓடும் ஹெலன், அடுத்தவர் குருதியில் ஞானோதயம் பெறுவது நாவலில் மைய இடம். இதுவே தன்னையும் பிறரையும், அகத்தையும் புறத்தையும், தன்னலத்தையும் தார்மீக நியாயங்களையும் அவளுக்குக் கற்பித்துவிடுகிறது. வாசக சிந்தனை அலைபொங்கும் இடமாகிறது.
இத்தகைய உள்ளோட்டமான விஷயங்களைவிட, இதன் மொழி சார்ந்தும் கூற நிறைய உண்டு. மாதிரிக்காக ஒன்று. இன்றைய தமிழ் உரைநடை பயணித்துக்கொண்டிருக்கும் பாதை, தொல்காப்பியமோ நன்னூலோ இன்னும் பின்னேயுள்ள இலக்கண நூல்களோ சொன்ன எழுத்து, சொல் அதிகாரங்களின் வரம்பினை மீறியதென்பதை ஒரு கல்விப்புல வாசகன் அறிந்தே இருக்கிறான். நீண்ட வாக்கியங்களில், எழுவாய் பயனிலை செயப்படுபொருள்கள் இலக்கண விதிமுறைக்குள் அடங்கியதாய் தமிழ் உரைநடை மரபு அண்மைக் காலம்வரை இருந்து வந்திருக்கிறது. அந்த மரபினை, அடித்து நொருக்கி ஒரு புதிய உணர்வோட்டமான, பேச்சின் இயல்பு தாங்கி சிறிய சிறிய வாக்கியங்களில் அமைந்து வருகிறது இன்றைய தமிழ்ப் படைப்பிலக்கிய மொழி.இதை ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சுமொழி செய்துவிட்டிருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் விஷயம்தான். ஆம், அதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது ‘அடுத்தவர் குருதி’.
பிரெஞ்சு இலக்கியத்திலும், பெண்ணியக் கருதுகோள்களை வகுத்த முன்னோடிப் பெண்களுள் ஒருவர் என்ற வகையிலும் மிக முக்கியமான இப் பெண்படைப்பாளியைச் சுற்றி ஒரு இருளான இரகசியம் எப்போதும் உறைந்தே வந்துள்ளது. தத்துவார்த்தத் துறையில் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படும் சார்த்தரின் பூதவுடல் அடக்கம்செய்யப்பட்டிருந்த அதே மயானத்தில், அவரது கல்லறைக்கு அருகிலேயே சிமோன் டி போவுவாவின் உடலும் அடக்கம்செய்யப்பட்டது என்பதுமட்டும் அந்த இரகசியத்தை விடுவிக்கப் போதுமான சம்பவமில்லை.
பெரும்பாலான படைப்பாளிகள், அவர் மேற்கிலிருந்தோ கிழக்கிலிருந்தோ எந்தத் திசையில் தோன்றியிருப்பினும், தம்மைச் சூழ ஒரு இருளான இரகசிய மண்டலத்தை இறக்கிவைத்துவிட்டே இறந்துபோயிருக்கிறார்கள் என்று சொல்லலாம்போலக் கிடக்கிறது. இந்தநேரத்தில் தருமு சிவராமுபற்றி யோசனை வருகிறது. ஆத்மாநாம் இன்னொரு புதிர். மரணத்தையே புதிராக்கிய இன்னொரு ஆளுமை சிவரமணி.
இவர்களை இவர்களது படைப்புகளாலன்றி அறிந்துகொள்ள எந்த மார்க்கமும் இல்லை. சிமோன் டி போவுவாவையும் அவர் படைப்புக்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். என்னளவில் அதற்கான தேர்ந்த படைப்பு ‘அடுத்தவர் குருதி’யாகவே தோன்றுகிறது.
http://devakanthan.blogspot.com/2011/09/9-blood-of-others-h.html