"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு " - கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல். ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிபதிவு & நடிப்பு எல்லாமேதாம்.
இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக்கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.
இப்பாடல் பலவகைகளிலும் சிறந்து விளங்குகின்றது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாடல் காட்சிகளை உருவாக்கியிருக்கும் உயிர்த்துடிப்புள்ள, இயற்கை வளம் கொழிக்கும் ஒளிப்பதிவு, விஜய் சேதுபதி & தமன்னாவின் நடிப்பு எல்லாமே நெஞ்ச வசியபடுத்திக் கட்டிப்போட்டு விடுவன. மன அழுத்தங்களிலிருந்து விடுபட வைக்கும் தன்மை மிக்கவை.
தனக்குத் தன் குரல் மூலம் இவ்விருது பெறக் காரணமாகவிருந்த பாடகி சின்மயிக்கு எவ்விதம் கவிஞர் வைரமுத்துவினால் பாலியல் தொல்லைகளைக் கொடுக்க முடிந்தது? ஒரு கேள்வி இப்பாடலில் வரும் 'ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு' என்னும் வரி 'ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு' என்பதா அல்லது 'ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு' என்பதா? எனக்குக் காரல் என்றும் கேட்கின்றது. காரல் என்றும் கேட்கின்றது. உங்களுக்கு எப்படிக் கேட்கின்றது. காரலை விடக் காதலே எனக்கு மிகவும் பொருத்தமாகப் படுவதால் அச்சொல்லையே இங்கு பாவித்துள்ளேன் :-) காதலில் தோல்வியுற்றாலும் காதல் போய்விடுவதில்லை. இறுதி வரை இருந்து விடும் உணர்வு அது. அதனாலதான் 'ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு' என்பது எனக்கு மிகவும் பொருத்தமாகப்படுகின்றது.
படம்: தர்மதுரை
பாடகர்கள்: சின்மயி சிறிபாத * ராகுல் நம்பியார்
பாடல் வரிகள்: கவிஞர் வைரமுத்து
இசை: யுவன் சங்கர் ராஜா
நடிப்பு: விஜய் சேதுபதி & தமன்னா
https://www.youtube.com/watch?v=WJbu2Ib3ozE
பாடல் முழுமையாகக் கீழே:
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்
என் ராஜா பையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் தானாகும்
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் கதைதான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக்காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரைத் தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட
ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…