"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்" - கவிஞர் கண்ணதாசன்
மானுட விடுதலை பற்றிய கவிஞர் கண்ணதாசனின் மிகச்சிறந்த பாடல். 'சிட்டுக்குருவையைப் போல் விட்டு விடுதலையாகி' நிற்கக் கனாக்கண்டான் மகாகவி பாரதி அடிமையிருள் சூழ்ந்த இருந்தியாவில். சுதந்திரமாகச் சிறகடிக்கும் புள்ளினத்தைப்பார்த்து, ஆடும் கடல் அலைகளைப்பார்த்து விடுதலை பற்றிய கனவில் மிதக்கின்றான் கவிஞன் இங்கே. 'ஒரே வான். ஒரே மண். ஒரே கீதம்! உரிமைக் கீதம்' என்று மானுட விடுதலையின் மகத்துவத்தைப் பாடுகின்றான் இவன். கவிஞர் கண்ணதாசனின் மிகச்சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. எளிமையான மொழியில் எவ்வளவு ஆழமாக, சிறப்பாகக் கவிதையினை வடித்துள்ளார்.
படம்: ஆயிரத்தில் ஒருவன்
பாடகர்: டி.எம்.எஸ் & குழுவினர்
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
https://www.youtube.com/watch?v=g2Q0-XY4BeA
பாடல் முழுமையாக:
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்