- 7.5.2023 ஈழநாடு வாரமலரில் வெளியான சிறுகதை -
"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?" - "குறுந்தொகை 28, ஔவையார் -
'டொராண்டோ மாநகரின் 'தோர்ன்கிளிவ் பார்க் டிரை'விலிருந்த தொடர்மாடிக்கட்டடங்களிலொன்றில்தான் கடந்த ஆறுவருடங்களாக அமுதா வசித்து வருகின்றாள். இலங்கையிலிருந்து முள்ளிவாய்க்காலில் யுத்தம் மெளனிக்கப்பட்டதற்குப்பின்னால் கனடா வந்த தமிழர்களில் அவளும் ஒருத்தி. அவளது நல்ல காலம் அவளுக்கு அவளது இருப்பிடத்துக்கு அண்மையில் எக்ளிண்டன் வீதியும், டொன்மில்ஸ் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையிலிருந்த 'புளூ ஷிப்' நிறுவனங்களிலொன்றான 'கலக்டிகா'வில் வேலை கிடைத்திருந்தது. உலகின் பல பாகங்களில் கிளைகளைக்கொண்ட பெரியதொரு தொழிற்சாலை. கணனிக்குரிய 'பவர் சப்ளை', 'மெமரி கார்ட்' போன்ற பல பொருட்களைத்தயாரிக்கும் நிறுவனம். ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மூன்று 'ஷிவ்ட்டு'களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அமுதா வேலை செய்வது மாலை நேர 'ஷிவ்ட்'. மூன்று மணிக்குத் தொடங்கும் வேலை இரவு பதினொரு மணிக்கு முடிவடையும். வேலை முடிந்ததும் டொன் மில்ஸ் வழியாகச் செல்லும் நம்பர் 25 பஸ்ஸில் தோர்ன்கிளிவ் பார்க் சென்று அவளது இருப்பிடத்துக்கு அண்மையிலிறங்கிச் செல்வது அவளது வழக்கம்.
கனடாவில் தோர்ன்கிளிவ் பார்க் பகுதியில் பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் வசித்துவந்தார்கள். அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள், ருமேனியா நாட்டவர்கள் பலரும் வந்து குடியேறத்தொடங்கி விட்டார்கள். அதிக அளவில் குடிவரவாளர்களால் நிறைந்திருந்த அப்பகுதியில் கனடாவில் அதிக அளவிலான பி.எச்.டி பட்டதாரிகள் இருப்பதாக ஒருமுறை டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் வெளியான கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமுதாவுக்கு அப்பகுதி மிகவும் பிடித்த பகுதி. டொரோண்டோ 'டவுன் டவுனு'க்கும் ஸ்கார்பரோவுக்குமிடையில் அமைந்திருந்ததால் நகரின் பரபரப்பு சிறிதே தணிந்திருந்தபோதும், 'டவுன் டவுனு'க்கு அண்மையிலிருந்தது. பார்க் , நூலகம், மால் என அனைத்தும் அருகருகே அமைந்திருந்தன. உண்மையில் 'டிரைவ்' சுற்றிவரத் தொடர்மாடிக்கட்டடங்களும், நடுவில் மால், நூலகம் ஆகியவையும் அமைந்திருந்தன. நூலகத்துக்கு அண்மையில் மேலதிகமாகச் சிறியதொரு 'பார்க்' அமைந்திருந்தது. மாலை நேரங்களில் பாகிஸ்தான் பெண்கள் குழந்தைகளுடன் அப் 'பார்க்கில்' குழுமியிருப்பார்கள். குழந்தைகளை விளையாடவிட்டு ஊர் வம்பளந்துகொண்டிருப்பார்கள். 'மால்' போய் வரும் சமயங்களில் சில வேளைகளில் அவள் அங்கிருக்கும் 'பெஞ்சி'ல் அமர்ந்து அவர்களை இரசிப்பாள். நெஞ்சில் ஒருவித அமைதி அச்சமயங்களிலெல்லாம் பரவுவது வழக்கம்.
அன்று வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அமுதாவின் நினைவுகளில் கண்ணன் கூறியவையே ஒலித்துக்கொண்டிருந்தன. கண்ணன் அவளுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளி. அவனும் இலங்கையைச் சேர்ந்தவன். அவள் கனடா வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே அவன் வந்திருந்தான்.
"அமுதா. நீங்கள் இன்னும் எத்தனைகாலம்தான் இப்படியே இருக்கப்போகின்றீர்கள்? நான் சொல்லுறேனென்று குறை நினைக்காதீங்கோ. நீங்கள் உங்கள் ஃபியூச்சரைப்பற்றியும் திங் பண்ண வேண்டும். உங்களுக்கு அப்படியென்ன வயசு. இன்னும் முப்பது கூட ஆகவில்லை. இருபத்தேழுதானே ஆகிறது.."
அமுதா பதிலுக்குக் கேட்டாள் " என்ன கண்ணன். இப்படிக்கூறுகிறீர்கள். உங்களுக்கு என்னுடைய கதை தெரியும்தானே.. தெரிந்தும் கொண்டா இப்படிச் சொல்லுறீர்கள்?"
"ஓம் அமுதா. தெரிஞ்சுகொண்டுதான் கூறுகிறன்"
அவள் அதற்கு மெளனமாகவிருந்தாள். அவள் மெளனத்தைத் தனக்குச் சாதகமாக்கி அவன் தொடர்ந்தான் " என்ன அமுதா பேசாமல் இருக்கிறியள்? நான் சொல்லுறது சரிதானே"
"என்ன சரி. நான் அது பற்றியே யோசிக்கவில்லை. நான் இன்னும் அருணனைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறன. எனக்கென்னவோ அவர் நிச்சயம் திரும்பி வருவாரென்று நினைக்கிறன். நிறைய நம்பிக்கை இருக்கு"
அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டிருந்தது. இறுதி யுத்தக்காலத்தில் அவள் வன்னியில் முல்லைத்தீவில் வசித்து வந்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு அவசர அவசரமாக அவளது தாய் அருணனை அவளுக்குத் திருமணம் செய்து விட்டு, ஒரு நாள் இலங்கை விமானப்படைத்தாக்குதலில் பலியானாள். அவளும், அவனும் விமானத்தாக்குதல்கள், அரச படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்ற சண்டைகளிலெல்லாம் தப்பி, பதுங்கு குழிகளில் பதுங்கி ஒரு மாதிரி யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது இலங்கை இராணுவத்தின் தடுப்புமுகாமொன்றில் தஞ்சமடைந்தார்கள். அங்கு வைத்துத்தான் அருணனை இலங்கை அரசின் புலனாய்வு அதிகாரிகள் கூட்டிச்சென்றார்கள். அன்றிலிருந்து இன்று வரை எத்தனை வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. இன்னும் அவனைப்பற்றிய தகவல்கள் எவையுமில்லை.
" உங்களுக்கு இன்னுமா நம்பிக்கை? உங்களுக்குத் தெரியும்தானே புது சனாதிபதி கோத்தபாயா கூறியது. அவர் காணாமல் போன 20,000 பேருக்கும் மரணச் சேர்டிபிகட் தரவதாகக் கூறிய பிறகுமா நம்பிக்கை"
அமுதாவின் சிந்தையில் அருணனின் உருவம் தோன்றியது. எவ்வளவு நம்பிக்கையுடன் அவன் புலனாய்வு அதிகாரிகளுடன் சென்றான். அவர்களும் அப்படித்தானே கூறினார்கள். ஒன்றுக்கும் பயப்படத்தேவையில்லை. விசாரித்த பிறகு விட்டுவிடுவார்கள் என்று தானே கூறினார்கள். ஆனால் என்ன நடந்தது? இத்தனை வருடங்கள் கழிந்தும் அவனைப்பற்றிய தகவல்கள் எவையுமில்லை. ஆனால் அவளால் அவனை மறக்கவே முடியவில்லை. எவ்வளவு கனவுகளுடனிருந்தார்கள். அவளால் எப்படி அருணனை மறக்க முடியும். அவன் அவளது கணவன். யுத்தச் சூழலில் தப்பிப் பிழைத்திருந்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்தபோது அவனால் தப்பிப்பிழைக்க முடியவில்லையே. எங்கே அவன் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றானோ? எவ்வளவு சித்திரவதைகளை அவன் அனுபவித்திருக்கின்றானோ?
அவளது மெளனத்தைக் கண்டு கண்ணன் கூறினான்: "அமுதா. நீங்கள் இப்படியே வாழ்க்கையை வீணாக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம். நானும் உங்களைப்போல்தான் இருந்தன். என்னுடைய கமலா கிளிநொச்சியில் சண்டை நடக்கேக்கை , விமானப்படைத்தாக்குதலுக்குப் பலியான பிறகு நானும் இப்படித்தான் பல வருடங்கள் இருந்தன். ஆனால் உங்களைக் கண்ட பிறகு கொஞ்சங் கொஞ்சமாக அந்த நினைப்பே மாறிட்டுது. நாங்கள் இருவருமே ஒரு விதத்தில் ஒரே நிலையிலை இருப்பவர்கள். போனவை போனவையாகவே இருக்கட்டுமென்று முடிவு செய்திட்டன். இப்படியே தொடர்ந்து இருக்கிறதாலை ஒருத்தருக்கும் இலாபமில்லை. நன்மையில்லை. நான் இன்னொரு முறை கல்யாணம் செய்யிறதாக இருந்தால் அது உங்களுடன்தான். அப்படி நடக்காவிட்டால் எனக்கு இனிமேல் கல்யாணப் பேச்சுக்கே இடமில்லை. நீங்க என்றைக்கு உங்கட மனம் மாறி, கல்யாணத்துக்கு ஓகே சொல்லுறீங்களோ, அது வரையிலை நானும் காத்திருப்பன்."
அன்றிரவு படுக்கையில் சாய்ந்தபொழுது அமுதாவின் உள்ளமெல்லாம் கண்ணனே நிறைந்திருந்தான். 'நாமிருவருமே ஒருவகையில் இருப்பது ஒரே நிலையிலைதான். ஆனால்..' என்றெண்ணினாள். 'ஆனால் அதற்காகக் அருணனிருந்த இடத்தில் இன்னொருவனா?' அந்த எண்ணம் தோன்றிய அடுத்த கணமே கண்ணனின் கனிவு நிறைந்த பார்வையும், குரலும் நினைவிலாடின. 'கண்ணன் எவ்வளவு நல்லவர்' என்று மனம் எண்ணிக்கொண்டது. 'வாழ்க்கை முழுக்க எனக்காகக் காத்து நிற்கப்போவதாகக் கூறுகின்றாரே.. வேறை யாரையும் கல்யாணம் செய்ய மாட்டாராமே.. ஏன் நான் அவரைக் கல்யாணம் செய்யக் கூடாது..'
அவளது எண்ணத்தில் அருணனுடன் வாழ்ந்த காலத்து நினைவுகள் படம் விரித்தாடின. மனம் ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாறியது. எவ்வளவு நம்பிக்கையுடன் அவர் புலனாய்வு அதிகாரிகளுடன் சென்றார். 'அமுதா ஒன்றுக்கும் கவலைப்படாதை. மடியிலை கனமிருந்தால்தானே பயப்பட வேணும். தேவையில்லாமல் மனசை வருத்தப்பட வைக்காதை. நான் கெதியிலை வந்திருவன் தானே..'
ஆனால் இன்று எத்தனை வருடங்கள் கடந்து விட்டன. இன்னும் அவரைப்பற்றி ஒரு தகவலுமில்லையே...
நித்திரை வர மாட்டேனென்று முரண்டு பிடித்தது. பல்கணியிலிருந்த புறாச் சோடியிலொன்று அசைந்தது மெல்லிதாகக் கேட்டது. அன்று காலைதான் அவதானித்திருந்தாள் அங்கு அவை கூடொன்றைக் கட்டி இரண்டு முட்டைகள் இட்டிருந்ததை. தன்னைக் கண்டால் அவை பயந்துபோய் பறந்து விடுமேயென்று பல்கணிக்கதவருகில் கதவை மெதுவாகக்த்திறந்து எட்டிப்பார்த்தாள். அவள் இலேசாகக் கதவைத்திறந்ததுமே எச்சரிக்கையடைந்த புறாவொன்று சிறகடித்து பறந்து சென்று அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றில் சென்றமர்ந்தபடியே தன் துணையை அவதானித்தபடியிருந்தது. அது ஆண் புறாவாக இருக்கவேண்டுமென்று எண்ணினாள். பெண் புறாவோ பார்வையில் எச்சரிக்கையுடன் இட்டிருந்த முட்டைகளின் மேல் அமர்ந்திருந்தது. 'கடவுளே. எந்தப் பிரச்சினைகளுமில்லாமல் இந்தப்புறா முட்டைகள் பொரிக்க வேண்டும்' என்று எண்ணிக்கொண்டாள். மனம் வேண்டிக்கொண்டாள்.
ஒரு விதத்தில் அவளுக்கு அப்புறாக்கள் மேல் ஒருவிதப் பொறாமைகூட ஏற்பட்டது. எங்களைப்போல் எந்தவிதத் தேவையற்ற கவலைகளும் அவற்றுக்கில்லையே. அவளுக்கு யுத்தகாலத்தில் உயிரைக் காப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தபோது விண்ணில் சிறகடித்துக்கொண்டிருந்த பறவைகளைக் கண்டபோதெல்லாம் ஏற்பட்ட உணர்வுகள் மீண்டும் இப்போதும் ஏற்பட்டன. அப்போது அவள் எண்ணிக்கொண்டாள் 'இந்தப்பறவைகள் எவ்வளவு சுதந்திரமாகப் பறந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தெரியுமா இப்படி நாம் உயிருக்காக ஓடிக்கொண்டிருப்பது... '
அதே வகை எண்ணங்களை மீண்டும் அவளது உள்ளத்தில் புறாக்களின் அசைவுகள் ஏற்படுத்தின. 'பார் இங்கே நான் முடிவு எடுக்க முடியாமல் கிடந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறன். ஆனால் அவையோ அவைபோன்ற கவலைகள் எவையுமற்று உணவு, உறவு, முட்டை, குஞ்சு என்று குறுகியதொரு வட்டத்தில் வளைய வரும் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கின்றன. ஆணும் , பெண்ணும் ஒன்றுக்கொன்று எவ்வளவு உதவியாக இருக்கின்றன. எங்களை மாதிரி அவைக்கு பிரிவுகள், மோதல்கள் உண்டா? கொடுத்து வைத்த பிறவிகள்'
அவளது எண்ணங்கள் மீண்டும் மீண்டும் அருணனைப்பற்றியே சுழன்று வந்தன. ஒருவேளை அவனை எங்காவது இரகசியத் தடுப்புமுகாமொன்றில் இன்னும் வைத்திருப்பார்களோ? அப்படியுமொரு கதை நாட்டில் உலவியது அவளது நினைவுக்கு வந்தது. அன்று புலனாய்வு அதிகாரிகளுடன் சென்றவர் சென்றவர்தான்.அதன் பின் அவர் திரும்பவேயில்லை. கடல் கடந்தும் எங்குமே செல்லவில்லை. நிச்சயமாக நாட்டில்தான் எங்கோ இருக்கவேண்டும் என்றொரு எண்ணமும் அடிக்கடி எழுந்து மறைவதைப்போல் அந்த இரவில் படுக்கையில் எந்தவித முடிவுக்கும் வரமுடியாமல் அவள் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கையிலும் எழுந்து மறைந்தது.
ஜன்னலினூடு தெரிந்த நகரத்தின் இரவு வானில் சுடர்கள் சில தொலைவிலிருந்து கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தன. அவை அமைதியற்றதொரு நிலையில் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தும் நித்திரை வராது தவித்துக்கொண்டிருக்கும் அவளைப்பார்த்துக் கேலி செய்கின்றவனா?
அவளொருத்தி தவியாய்த்தவித்துக்கொண்டிருக்கும் அந்த இரவில் மாநகர் ஆழ்ந்த துயிலில் மூளத்தொடங்கி விட்டிருந்தது. அவளுக்கு அவளது நிலையறியாமல் ,ஆறுதல் எதனையும் தராமல் துஞ்சும் ஊர் மேல் ஒருவித ஆத்திரம்கூடத் தோன்றியது. அன்று காற்றும் அதிக வேகத்துடன் வீசிக்கொண்டிருந்தது. காலநிலையிலும் அக்காற்றின் வேகத்தைப்பற்றிக் குறிப்பிட்டு அவதானமாக இருக்கும்படி வேண்டிக்கொண்டது நினைவுக்கு வந்தது.
ஏ! மாநகரே! உனக்கு இரக்கம் என்பதேயில்லையா?
என் நிலை உனக்கின்னும் புரியவில்லையா? அல்லது
எதனையும் நீ அறியவில்லையா?
துஞ்சும் மாநகரே ! என் துன்பமின்னுமுனக்குத்
தெரியவில்லையே!
சூன்யத்தைத் துளைத்து வருமொளிக்கதிர்களே!
தூக்கமற்று நானிங்கு உலைவது கண்டுமா
கெக்கலி கொட்டிச் சிரிக்கிறீர்கள்?
இருந்தாலும் உங்கள் நெடும் பயணம்
என்னைப் பிரமிக்க வைக்கின்றது கதிர்களே!
'வெற்றிடங்களைத்துளைத்து வரும் இக்கதிர்கள் எத்தனை ஒளியாண்டுகளைக் கடந்து தனிமையாகப் பயணித்திருக்கின்றன. ஏன் நானும் அவ்விதம் இக்கதிர்களைப்போல் தனிமையில் என் அருணனின் நினைவுகளுடனேயே பயணிக்கக்கூடாது?' என்றொரு கணம் எண்ணினாள். எங்கோ ஒரு இரகசியத் தடுப்பு முகாமினுள் வாடி வதங்கிக்கிடக்கும் தோற்றத்திலிருக்கும் அருணனின் உருவம் நெஞ்சில் தோன்றியது. என்ன என்ன துன்பங்களுக்கு ஆளாகினானோ? ஆளாகின்றானோ? அவனைப் புலனாய்வுப்பிரிவினர் விசாரணைககாக அழைத்துச் சென்று பதின்மூன்று வருடங்களைத் தாண்டி விட்டன.
கூடவே கண்ணனின் அமைதியான, ஆறுதலளிக்கும் முகமும் தோன்றியது. 'அவனும் பாவம். தன்னைப்போல் யுத்தச்சூழலுக்குள் தன் காதல் மனைவியை இழந்தவன் தான். ஒரு விதத்தில் இருவருமே ஒரே விதமான படகில் பயணிப்பவர்கள். அவனும் தன் மறைந்த மனைவி மேல் உயிரை வைத்திருப்பவன் தான் அருணனின் மேல் வைத்துள்ள அன்பைப்போல்' என்றெண்ணினாள். உண்மையில் அவளது வேலையில் அவளுக்கு ஆறிதலாக இருப்பவன் அவன். ஏன் அவன் கூறுவதைப்போல் அவனுடன் இணைந்து வாழக் கூடாது?
இதுவரை உழன்று கொண்டிருந்த மனத்தில் ஒருவித அமைதியும் , தெளிவும் பரவிட அவள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிப்போனாள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி ; ஈழநாடு வாரமலர் 7.5.2023