ஞாபகங்களை மீட்பதென்றால்,அதேபோல  இன்றும் அத்தகைய சூழ்நிலைகள் அமைதல் அவசியம்.அப்படித்தான் இன்று என் பெயர்த்திகளுடன் கூடியிருந்து,ஒரு A4 கடதாசியை எடுத்து மூத்தவளிடம் காண்பித்து "உனக்கு என்னம்மா இந்தக் கடதாசியில் ஐயா செய்து தரவேணும்?"என்று கேட்டேன்.

    "ஐயா எனக்கு ஒரு பட்டம் கட்டித்தாங்கோ.பட்டம் கட்டி   அதைப்பறக்க விட ஆசை ஐயா.பட்டத்துக்கு வாலும் எப்படிக்கட்டுவது,கட்டி பட்டத்தை காற்றிலே பறக்கவிடுவது எப்படி ஐயா?".

    சின்னவளும் வந்து'ஐயா அக்காவுக்கு கட்டினமாதிரி எனக்கும் பட்டம் வேணும்' என்றாள்.'அப்பப்பா','அப்பம்மா' என்று அழைப்பதை விடவும்;எம்மிடமிருந்து தொலைந்துபோன பாசம் கலந்த உயிருள்ள உணர்வு கலந்த உறவுச்சொற்களான ஆச்சி,ஐயா என்று கூப்பிடுவதே எமக்கு விருப்பம்.அப்படியே குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தோம்.அப்படித்தான் தண்ணிபட்ட பாடாய் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவைகள் எங்கள் செல்லங்கள் எம்மைக் கூப்பிடும்போது எங்கள் உள்ளம் உருகிவிடும்.இன்றும் அப்படித்தான்,ஐயா ஐயா என்று ஒன்று மாறி ஒன்றாக இருவரும் என்னைக் கூப்பிட,"இப்படியே நீண்டகாலம் நீ வாழ்ந்திடல் வேண்டும்"என்று இந்த உள்ளம் எனக்குச் சொல்லி என்னை அரவணைத்தது.

    "குட்டிம்மாக்கு ஒன்று.என்ர பட்டுக்குட்டிக்கும் ஒன்று,சரியா?சரி வாங்கோ எல்லோரும் சேர்ந்து கட்டுவம்"என்றதும் சின்னவள் என் மடிக்குள் வந்து இருந்துகொண்டு,கடதாசியில் ஒவ்வொரு மூலையும் எப்படி மடிக்கப்படுகின்றது என்பதை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.மூத்தவள்,நான் கட்டுவதைப் பார்த்து தானும் தனியாக ஒன்றைக்கட்டிமுடிக்க முயற்சித்தாள். அத்தருணத்தில் அன்றைய ஊர் கூடி,புழுதியில் கலந்து கொண்டாடிய ஞாபகங்கள் என் மனசுக்குள் மழையாய் அடித்துப் பெய்து ஓய்ந்தது.

    "தேரும் திங்களும்"எனும்  மகாகவி உருத்ரமூர்த்தி (1969)யின் கவிதைதான் முதலில் நினைவுக்கு வந்தது.கவிதையில்,

    "ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே;
    வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை"
    என்று வந்தான் ஒருவன்."என்பதுபோல நாமும் ஊர்கூடிப்பட்டம் விட்டோம் அன்று!

    ' ஊர்கூடித் தேர் இழுத்தோமே' என்பது மட்டுமல்ல அன்றைய நம் பொற்காலம்,மட்டுமன்றி ஒற்றுமையாய் ஊர் சேர்ந்து பட்டம் ஏற்றியதுமே எமக்கான கொண்டாட்டம்தான்.விடிந்தால் பெருமாள் கோயிலிலிருந்து காற்றிலே பவனிவரும்

    "கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா..எனும் சுப்ரபாதம்.கண் முளித்தாலும் படுக்கையை விட்டு எள்ளளவும் அசையாமல் எம்மைக் கட்டிப்போட்டுவிடும் அந்த மங்களகரமான விடியல்.
    இருளை அப்பிக்கொண்ட எம்மண்  விடியலில் குளித்து மெல்லத் தன்னை விடுவித்து,எம்மை ஆட்கொள்ளும் அழகோ அழகு!காற்றை அள்ளிக்கொண்டு வரும் திசையின் வேகத்தை சுப்ரபாதத்தின் ஓங்கிஒலிக்கும் சத்தத்திலிருந்தே ஊகித்துவிடலாம்.

    ஊகிக்கும்போதே;" இன்று எப்படியாவது எல்லோரும் சேர்ந்து பட்டம் ஏற்றியே தீருவோம்"என்ற தீர்மானமும் எல்லோர் மனங்களிலும் பதிந்துவிடும்.

    அநேகமாக பட்டம் ஏற்றும் நாள் சனிக்கிழமையென்றால் கல்லூரி மைதானங்களும்,யாழ் முற்றவெளியும் நிரம்பி வழியும்.எமக்கு அதைப்பற்றிக் கவலையேயில்லை.

    இருக்கவே இருக்குது;எமக்கு எங்கட ஒழுங்கை.கொஞ்சம் வளைவுதான் அது.ஆனால்,அந்த வளைவுக்கு முன்பாகவே எங்கட பட்டம் நல்ல உச்சிக்குப் போய்விடும்.கீச்சென்று எல்லோரும் கத்தி,ஆரவாரமா நின்று அண்ணாந்து பார்த்து ஒங்கித் தட்டின கைதட்டல்களும் அயலை ஒருக்கா அதிரவைத்து எட்டிக் கூப்பிடும்.

    "வெளியிலே வாங்கோ.வந்து எங்கட கொக்குப் பட்டத்த வந்து பாருங்கோ.எவ்வளவு "மெனக்கெட்டு"நிதானமாக தென்னோலையில சீவி எடுத்துக் கட்டின

    "விண்"தெரியுமா?

    அது காற்றின் வேகம், நூலின் இழுவை, மற்றும் விண்ணின் வடிவத்தைப் பொறுத்து:

    • “ஊஊஊ…” என்ற நீளமான மெல்லிய முணுமுணுப்பு,

    • “வீஈஈ…” அல்லது “ங்ங்ங்…” போன்ற அதிர்வொலி,

    • காற்று அதிகரிக்கும்போது “வ்ர்ர்ர்…”, “ப்ர்ர்ர்…” என்ற சுழலும் ஒலி,

    சில நேரங்களில் உயர்ந்து-தாழும் “ஊ—ஈ—ஊ—ஈ” போன்ற இசைத்தன்மை கொண்ட ஒலிகளை நாம் கட்டிய விண் ஒலித்துக் காட்டும்.இவற்றைக் கேட்கும் எம் மனசு துள்ளிக் குதிக்கும்."கட்டின விண்ணின்ர சத்தத்தைக் கேளுங்கோ.நீங்களும் கேட்டு அந்த ரீங்காரத்தை அனுபவியுங்கோ,முதலில் எல்லோரும் வெளியில வாங்கோ".என்று அயலவர்களையும் கூட்டிவந்து காட்டி பரவசமடைந்த காட்சிப்படிமங்களையும் எப்படி நாம் மறப்பது?

    விடிய ஆவி பறக்கப்பறக்க சமைத்த பலகாரங்களின்ர மணமும்,காத்தில பூத்த பூக்களின்ர வாசமும் பின்னிப்பிணைந்து  உள்ளங்களை ஆசுவாசப்படுத்த,“உங்களுடன் நானும் வாழ்கின்றேன்"என்பதுபோல பட்டமும் உயரப் பறந்துகொண்டேயிருந்தது.  தெருவில் மின் கம்பங்களுடன் மின்சாரக்கம்பிகள் இணைக்கப் பட்டிருந்தமையால் எங்கட ஒழுங்கைக்குள் ஒரு பிரச்சனையிருந்தது. தெருவின் மின்கம்பங்கள் சமாந்தரமாகவும் நீண்ட நேர்பாதையாகவும் இருந்திருந்தால் நீண்ட தூரம் ஓடி பட்டத்தை ஏற்றுவது வெகு சுலபமாக இருந்திருக்கும்.எவ்வளவு தூரம் ஓடவேண்டுமோ அதற்கிடையில் ஒழுங்கை வளைகின்றபடியால் இடையில் மின்சாரக்கம்பிகளும் குறுக்காகப் பிணைக்கப்பட்டிருந்தது.இங்கேதோன் இது ஆபத்தாகவும்,அதேசமயம் எமக்கான சவாலாகவும் அமைந்திருந்தது.முதலில் காய்ந்த தடியை எடுத்து தடியில் பட்டம் விடும் கயிற்றைச்சுற்றுக்கட்டி மின்கம்பிகளின் மேலாக அடுத்த பக்கத்திற்கு எறிந்தால் அது வந்து விழும்.பட்டத்தை ஒருவன் பிடித்து நிற்க,பட்டம் ஏற்றுபவன் ஓட ஆரம்பிக்க,இன்னொருத்தன் “இப்ப பட்டத்தை விடடா" என்று உரத்துக் கத்த,எங்கட "கொக்கு"எங்களைப் பார்த்தபடி காத்தில பறக்கும்.பட்டம் ஏத்திறவனுக்கு கையில பலமும்,அனுபவமும் வேண்டும்."விண் "கட்டின எங்கட கொக்கு பட்டம் உயர உயர காற்றின் வேகத்தில நல்லா எங்களையே இழுத்தது.அதற்காக நாலு ஐந்து பேரென தொடுத்து நின்றோம்.கஷ்டப்பட்டு பட்டம் ஏற்றி,அந்தப்பட்டம் நிலைத்து பலமணிநேரங்கள் நின்றுவிட்டது.

    அந்த மத்தியான வெயிலிலும்,சுற்றுவட்டாரத்திலுள்ள அயலட்டம் மண்சட்டி வைத்து,விறகு மூட்டி சமைக்கும் மரக்கறிகளும்,மீன்குளம்பு,  சூடைமீன் பொரியல்,கெட்டியான தேங்காய்ப்பாலில் முதல் பாலும் விட்டு, பச்சைமிளகாய்,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை,இஞ்சி, மஞ்சள்தூள் என்று போட்டு வைக்கிற பால் சொதியும் என அத்தனை வாசமும் காற்றில பரவி மூக்கைத் துளைக்கும்.பசியும் மெல்லக் கிளம்பி,வயிற்றை விறாண்டும்.அப்படியிருந்தும், "பட்டத்தைப்பார்த்துக் கொள்ளுங்கடா,நாங்கள் உடன சாப்பிட்டு வந்திடுவம்,அதன் பிறகு நீங்களும் சாப்பிடப்போகலாம்"என்றுதான் இருவராகப் பிரிந்து சாப்பிடப்போவோம்.இப்படியாக நமது புரிதலும்,நட்பின் ஆழமும் வேரோடிச்  செழித்திருந்த காலமது.அதன்பின்பு அந்திசாய பட்டத்தை நிரந்தரமாக வீட்டிற்கு கொண்டுசென்று பெரிய மரத்தில் கட்டினோம்.இருட்டிய பின்பும் இடையிடையில் வீட்டைவிட்டு வெளியே வந்து அதனை அண்ணாந்து பார்த்ததும்,

    "போதுமான காற்று இப்போதும் நன்றாக அடிக்குதா,பட்டம் இப்போதும் நிலைத்து நிற்குதா?"என மேல்நோக்கி பார்க்கையில் ஆஹா இந்த நட்சத்திரங்களும் அழகல்லவா?"என்று எண்ணும்போது ரேடியோவில "இரவின் மடியில்"நிகழ்ச்சியில் "செந்தூர் முருகன் கோயிலிலே" என்ற பாட்டும் ஒலித்து என்னைப் பரவசப்படுத்திய பொற்காலம் அது.

    அன்று பட்டம் கட்டுதல் என்பதே எமக்கான பெருந்திட்டம்.பட்டம் நேராகப் பறக்க

    சுழன்று விழாமல் இருக்க , காற்றைப் பிடிக்கும் திறனை அதிகரிக்க,  பட்டத்தின் எடைச் சமநிலையைச் சரிசெய்ய, அளத்தல்,கணித்தல்,மூங்கில் தடியை வளைத்தல்,ஒட்டுதல்,விட்டம் பார்த்து  மூலை ஓடுதல்,கனத்திற்கேற்றாற்போல னைலோன் கயிறு வாங்கி பட்டம் ஏற்றுதல் என பெருந்திட்டத்துடன் ஆரம்பித்து பெருவெற்றி அடைய நாம் பட்ட பாடும் ஓர் பெருங்கதைதான்.ஒவ்வொரு வருடமும் பருத்தித்துறைக்குச் சென்று,பெரியம்மா வீட்டில் தங்கி அண்ணன்மாருடன் பருத்தித்துறை கடற்கரைக்கு நடந்து வந்து பட்டம் ஏற்றும் போட்டி பார்த்து,சந்தையில தோசையும் வறுத்து இடிச்ச சம்பலும் வாங்கிச்சாப்பிட்டு,அடுத்தநாள் பருத்தித்துறை சிவன் கோயில் வெளி வீதியில் வைத்து இன்னொரு பெரிய பருந்துப் பட்டம் ஏற்றிச் சொந்த பந்தமெல்லாம் கூடிக் கும்மாளமடித்து;

    " இதுவல்லவோ வாழ்க்கை"யென்று பூரித்துப்போன வாழ்வெங்கே போனது?  எந்தக்காலத்திலும் பட்டம் பறந்து,காற்றை வென்று நிலைத்து நின்றது போலல்லவா  எல்லாவற்றிலும் போராடி வென்று நின்றோம்.     குச்சு ஒழுங்கையென்றாலும் காக்கைக் கூட்டங்கள்போல கொண்டாட்டங்களும் கும்மாளங்களும் ஓயாத்தெருக்களே   நிரம்பி வழிந்தன.இன்று பொற்கால நினைவுகளைத் தொலைத்து பெருவெளியாய்,வரண்டுபோய் க்கிடக்கின்றன எம் பாதம் பட்ட  பாதைகள் அனைத்தும்.   ஞாபகங்களைச் சுமந்தபடி இப்போது பெயர்த்திமாருடன் சேர்ந்து பட்டம் ஏற்றுகின்றேன்.எனக்கு எப்போதும் என் மண்போல,அந்த வானம் போல,இன்னும்  இன்னுமாய் ஆயிரம் நினைவுகனை என் உயிர் சுமக்கின்றதே;அதேபோல இனி  "எங்கட குட்டிம்மா,எங்கட பட்டு,எங்கட மாம்பழம்"எனும் இந்த மூவரின் ஞாபகங்களை நாளை அவர்களே எழுதுவார்கள் என்ற நம்பிக்கையுடனும்.

 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்