
- எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் "இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் எம்மை விட்டுப் பிரிந்த நினைவு தினம் டிசம்பர் 8. அவர் எழுதிய இக்கட்டுரை வாசகர்களுக்கு பயனளிக்கும் " என்று குறிப்பிட்டு, எமக்குத் தம் தந்தையாரின் நினைவு தினத்தையொட்டி அனுப்பி வைத்த அமரர் அகஸ்தியரின் கட்டுரையிது. -
சமூகவியற் படைப்பாளிகளும், விமர்சகர்களும், வாசகர்களும் எதிர்பார்த்தவாறு தமிழ் இலக்கியம் பற்றி ஐரோப்பாவிலும் தற்போது பேசப்படுவதற்கு இங்கு வெளிவரும் மாத, முத்திங்கள், வார இரு வாரப் பத்திரிகை சஞ்சிகைகள், சிறு நூல் வெளியீட்டுப் பதிப்பகங்கள், ஆண்டு மலர்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், நூல் விற்பனை நிலையங்கள் காரணமாக அமைந்தமை மனங் கொள்ளத்தக்கது. ‘ஐரோப்பாவில் தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரையில் விரிவாக எழுதியதால் இதில் அவற்றைத் தவர்த்துள்ளேன்.
‘நடை பயில முன் படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது இளம் படைப்பாளிகளைச் சோர்வடையச் செய்துவிடும்’ என்று சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்வதே படைப்பாளிகளை அவமதிப்பதாகும். படைப்பாளி மட்டுமன்றி, வாசகனும், விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் ஆரம்பப் படைப்பாளியும் இதனால் சிறந்த படைப்பாளர்களாகத் திகழ முடியும். படைப்பாளி படைப்புகள் பற்றி ஏதோ ஒரு வகையிலேனும் தன்னையே விமர்சிப்பதாலும் விமர்சிக்கப்படுவதாலும் படைப்புகள் பட்டை தீட்டப்படும் தங்கம் போலாகின்றன. எனவே, விமர்சனத்தைக் கண்டு, எந்தப் படைப்பாளனும் தன் பேனாவைக் கீழே போடக்கூடாது. மனச்சோர்வு அடையவும் கூடாது. எனெனில், நேர்மையாக விமர்சிக்கின்றவன்தான் படைப்பாளியின் உண்மையான இலக்கிய நண்பனாகத் திகழ்கின்றான். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடல் பொருத்தம் என்று கருதுகின்றேன்.
1958ஆம் ஆண்டு வாக்கில் என்று நினைக்கிறேன். தமிழரசுக் கட்சியைச் சார்ந்த எழுத்தாளர்களான ம.த.லோறன்ஸ், சிவலிங்கம் என்ற உதயணன், சிங்களக் காடையர்களால் துன்புறுத்தப்பட்ட தமிழ்ப் பெண் நிலையை மையப்படுத்தி, ‘அழு சந்திரா அழு’ என்ற தலைப்பில் இருவாரச் சிறுகதை எழுதினார்கள். நானும் கே.டானியலும் ‘அழாதே சந்திரா அழாதே’ என்ற தலைப்பில் அந்தக் கதைக்குப் பதிலளிக்குமுகமாக அதே சுதந்திரன் பத்திரிகையில் சிறுகதையாகவே எழுதினோம்.
லோறன்ஸ{ம் உதயணனும் அந்தப் பிரச்சினையைப் பார்த்த கோணம் வேறு. நானும் டானியலும் பார்த்த கோணம் வேறு. அவர்கள் இனரீதியாக மட்டுமே பார்த்தார்கள். நாங்கள் இன ரீதியாகவும் அதற்குள்ளான சமூகவியல் வர்க்க நோக்கிலும் பார்த்தோம். அதன்பின் எங்களுக்குள் அவர்களின் நட்பு இறுக்கமானது. கருத்து மாறுபட்ட படைப்புகளை ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் அதே பத்திரிகையில் பிரசுரித்த ஜனநாயக விமர்சனப் பண்பு - அந்தத் துணிச்சல் ஐரோப்பிய நாடுகளின் வெளியீடுகளில் காண்பது அரிது. அந்தப் பண்பும், இலக்கிய வாஞ்சையும், எழுத்து ஆளுமையும் கொண்டவராதலால்தான் எஸ்.டி. சிவநாயகம் ஈழத்தின் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர்களில் முக்கியஸ்தராகத் திகழ்கிறார். அவர் ‘சிந்தாமணி’யில் வாரந்தோறும் எழுதிய ‘நான் கண்ட பாரதி;’ என்ற கட்டுரை இதை நிரூபிக்கப் போதுமானது. க.கைலாசபதியும், எஸ்.டி. சிவநாயகமுமே பாரதி பற்றித் தொடர்கட்டுரை எழுதிய ஈழத்துப் பத்திரிகையாளர்களுமாகும். எஸ்.டி. சிவநாயகம் விமர்சனத்தை ஜனநாயக பூர்வமாக நடத்திச் சென்ற பாங்கினை ஏனைய பத்திரிகை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளல் நன்று.
அன்று சுதந்திரனில் எழுதிய சிறுகதை எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஒவ்வோர் வகையில் இன்று சிறந்த படைப்பாளர்களாகத் திகழ்வதற்குக் காரணம், இலக்கிய விமர்சனப் படைப்புகளோடு நேர்மையாக அதன் ஆற்றலோடு நின்றதுதான். சுதந்திரனில் எழுதிய எனக்கும் உதயணனுக்கும் உள்ள இலக்கிய நட்பின் காரணமாக, உதயணனால் எனக்கு அறிமுகமான ஈழத்தச் சோமு பின் என்னால் இ.மு.எ.ச வுக்குக் கொண்டுவரப்பட்ட பின்பும் எங்கள் இலக்கிய நட்பு இன்றுவரை இறுக்கமாகவே இருக்கிறது. அடிப்படையில் நேர்மையான ஓர் இலக்கிய நேசிப்பு எமக்குள் இன்றும் நிலவுவதே இன்றும் இதற்குக் காரணம். இத்தனைக்கும் நாம் கருத்து வேறுபாடுள்ளவர்கள். எம்மை விமர்சனம் வளர்த்தது. இலக்கியம் நட்புறவுபூண வைத்தது.
அன்று முரண்பட்டவர்களுக்குள் விமர்சனம் ஜனநாயக ரீதியாக இலக்கியத்திற்காகவே நடைமுறைப்படுத்தப்பட்ட பண்புகள் இவை. இவ்விதம் விமர்சனத்திற்கு முகங்கொடுக்கும் துணிச்சலும் நேர்மையும் ஜனநாயகப் பண்பும் தற்காலம் இல்லை. இதனால் இலக்கியப்பரப்பு எதிர்பார்த்த தாக்கமான படைப்புகளுக்குப் பதிலாக பெரும்பாலும் உருவம் உள்ளடக்கம் எனும் நயத்திலும் கருத்திலும் செப்பமான அழுத்தம் கொள்வதாக இல்லை. இதுபற்றிச் சொல்லத்தக்க நடுநிலையான தக்க விமர்சகர்களும் இல்லை. இருக்கும் சிலர் ஊமை கண்ட கனவினர்போல் மௌனித்து விடுகின்றனர். எழுதுவோரோ குழுவாத - தன்னிச்சா நோக்கில் எழுதி, சொல்ல வந்த விஷயத்தையே சொல்ல முடியாமல், - அல்லது சொல்லாமல் நழுவி விடுகின்றனர். யதார்த்த பூர்வமாக அழுத்தம் பெறும் படைப்புகள் அத்தி பூத்தாற்போல் சிற் சில போது சிற்றேடுகளான சஞ்சிகைகளில் தலை காட்டுகினும், அவற்றிற் பல ‘ஜனரஞ்சகம்’ எனும் மலினப்படுத்தப்பட்ட வணிக பூதத்தில் சிக்கிவிடுவதால், புதுமைப்பித்தன் சொன்ன மாதிரி உள்ளதும் கெட்டு எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது.
சமூகவியற் கோட்பாடற்ற ‘கலை கலைக்காக’ எனும் ‘சுயவாத’ப் படைப்புகளும், நடப்பியல்வாத இலக்கியங்களும் பத்திரிகைச் செய்திகள் போல் பெரும்பாலும் வருவதால் இலக்கிய அந்தஸ்த்துப் பெறாமலே போய்விடுகின்றன. இலக்கியப் பரப்பைக் கொஞ்சமாவது கவனத்தில் எடுத்தால், ‘உற்பத்தி’ செய்யப்படும் படைப்புகளுக்காகப் ‘பிரசவமாகும்’ நல்ல படைப்புக்கள் தோன்ற வாய்ப்புண்டாகும். எழுத்தை, மொழியை, சொல்லை, நடையை ஆளத் தெரியாமல் எழுத்தாளர்களாயிருப்போர் எழுத்தாளர்கள் அல்ல என்ற உண்மையை முதலில் ஜீரணிக்கின், எழுத்தும், நடையும், நயமும் சொல்லாட்சியும் வாலாயமாகும். இது பற்றிப் பத்திரிகைகள் அக்கறை எடுப்பின் நன்று. இதனை ஒரு இலக்கிய நேசிப்பில் சொல்கிறேன்.
சில பத்திரிகைகள் வணிகத்துக்காக மட்டுமன்றி, விளம்பரங்களுக்காகவே வருகின்றன. கலை, இலக்கிய நிகழ்வு விளம்பரங்கள் மட்டுமே பத்திரிகைத்துறை சார்ந்தவை. விளம்பரத்துக்கும் வணிகத்துக்கும் வேறு துறைகள் திறந்து விடப்பட்டுள்ளன. ஆனால், இலக்கியம், இலக்கியசேவை, கலைத்தாகம் என்றெல்லாம் சொல்லும் பத்திரிகை – சஞ்சிகைகள் வணிகமயப்படும் போது, மலினப்படுத்தப்படும் கலை இலக்கியங்களே அவற்றிற்குத் தோதாக அமையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் உட்பட நேர்கின்றன.
(பாரிஸ் தமிழர் கல்வி நிலையம் வழங்கிய ‘முத்தமிழ் விழா’ (10.10.1994)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









