"தேனீ இணைய இதழை நீண்டகாலமாக தனிமனிதராக நடத்திவந்தவர். சிறந்த அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் கலை, இலக்கிய படைப்புகளுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் சிறந்த களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே பெற்றுக்கொண்டவர். எனினும், தேனீயில் வரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்ற ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும் பட்சத்தில், அவற்றை உரியவர்களுக்கே சேர்ப்பித்து கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றியவர்.
ஆங்கில ஊடகங்களில் ஏதேனும் சிறந்த அரசியல் ஆய்வுகள் வெளிவரும் பட்சத்தில் அவற்றை தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்த ஒரு மொழிபெயர்ப்பாளரிடமிருந்து மொழிமாற்றம் செய்து தருவித்து, தானே கணினியில் பதிவுசெய்து வெளியிட்டவர். மணியம் என்பவர் தொடர்ச்சியாக எழுதிய ஈழப்போராட்டத்தின் உறைபொருளும் மறைபொருளும் தொனித்த நீண்ட கட்டுரைத் தொடரை தோழர் ஜெமினி கங்காதரனே தினமும் கண்விழித்திருந்து பதிவுசெய்து தேனீயில் வெளியிட்டார். கணினியில் தமிழில் பதிவு செய்யத் தெரியாத பலரதும் ஆக்கங்களையும் கையெழுத்துப்பிரதியில் பெற்றும் பதிவுசெய்து வெளியிட்டார். தனது குடும்பத்திற்காக இரவுநேர வேலைக்குச்சென்று, அதிகாலை வீடு திரும்பி, உறங்காமல் விழித்திருந்து தேனீயை பதிவேற்றிவிட்டே ஓய்வெடுத்துவந்தவர். புகலிட தேசத்தில் அவர் இணையத்தின் ஊடாக தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் சேவையாற்றி அறிவார்ந்த தேடலையும் அமைதியாக விதைத்தவர். உலகடங்கிலும் வாழும் பலரைப்பற்றிய ஆக்கங்களும் தேனீயில் வெளியாகியிருக்கின்றன. நானே பல கலை, இலக்கிய, ஊடகத்துறை, சார்ந்த ஆளுமைகள் பற்றி தேனீயில் தொடர்ச்சியாக எழுதியிருக்கின்றேன். "