காலம் நுஃமான் சிறப்பிதழ் “நுண்மாண் நுழைபுல நுஃமான்” - ஈழக்கவி -
‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ வெளியீட்டு நிகழ்வில் (February 23.02.2025: Scarborough Villege Center; Canada) அவ்வை நிகழ்த்திய வெளியீட்டுரையின் காணொளியை அண்மையில் முகநூலில் கண்ணுற்றேன். உணர்வை உந்தச்செய்த உயிர்ப்பான உரை. நுஃமான் , மஹாகவி உறவின் ஆத்மார்த்தம் பற்றி அவ்வை உயிரோட்டமாய் உரையாடியிருந்தார். தந்தை மஹாகவி, மாமா நுஃமான் ஆகிய ஆளுமைகளது ஆப்த நேசம் பற்றிய அவ்வையின் உரையாடல் விரிபடுத்தப்பட்டு எழுதப்படுதல் நல்லது. அவ்வை அப்படி எழுதினால் அது ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆவணமாக அமையலாம் என்ற உணர்வை அப்பேச்சு எனக்குள் உருவாக்கிற்று. அவ்வையின் வெளியீட்டுரை குறிப்பிட்டது போல, ‘எப்போதுமே சிறந்த படைப்புகளை தாங்கி வரும் காலம் இம்முறை நுஃமான் சிறப்பிதழாக வந்துள்ளது. இவ்விதழை முதலில் இருந்து கடைசிவரை ஒரே மூச்சாக வாசித்து முடித்தபோது அப்படியொரு பரவசமான நிலை’. இவ்விதழின் (ஜனவரி 2025) உயிர்ப்பான உள்ளடக்கம் எனக்குள்ளும் அப்படியொரு பரவசத்தை உருவாக்கிற்று. புன்முறுவல் பூத்த நுஃமான் அவர்களின் ‘அமுத’ புகைப்படம் அட்டையில் ‘நுண்மாண் நுழைபுல நுஃமானாக மினுக்கமுறுகிறது.
காலம் இதழ்களை என்னால் தொடர்ச்சியாக படிக்கமுடியவில்லை. ஆனாலும் படித்த இதழ்கள் மனசுக்குள் பதியமாயிற்று. மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களின் புத்தகங்களால் குவிந்த தலாத்துஓயா இல்லத்தில்தான் முதன்முதலாக காலம் சஞ்சிகையை கண்டேன். என்னுடன் அதிநேசத்தோடு இருந்த கே.கணேஷ் அவர்கள் நான் மிகுந்த ஆர்வத்துடன் காலம் இதழ்களை படிப்பதைப்பார்த்து ஒருசில காலம் இதழ்களை எனக்கு அன்பளிப்பாக தந்தார்; (பல பெறுமதியான நூல்களை அவரது கையொப்பத்துடன் எனக்கு தந்திருந்தார்). கொழும்பு போகும்போது புத்தக கடைகளில் காலம் இதழை கண்டால் வாங்கிக்கொள்வேன். என் வாசிப்புப் புலத்துக்கு காலம் சஞ்சிகையும் வெளிச்சமிட்டிருக்கிறது.