அம்பியெனும் தமிழ்த்தும்பி அவ்வுலகம் சென்றது ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும்.எழுதுவதற்கு மிகவும் சிரமாமன இலக்கியம் எது என்றால் அது " குழந்தை இலக்கியமே " குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டால்த்தான் அது சாத்தியமாகும்.குழந்தைகளின் இலக்கியம் இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்த்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் "குழந்தை இலக்கியம் " என்பதுதான் மனமிருத்த வேண்டிய உண்மையெனலாம். அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களேஈடுபடுகிறார்கள்.குழந்தைகளுக்கான படைப்புக்களை படைப்பதை ஒரு முக்கிய பணியாக நினைத்தே அவர்கள் தங்களது படைப்புக்களை படைக்கின்றார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளர்.அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர்.சமூக அக்கறை கொண்டவர்.அடுத்த தலை முறை யினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை சிறப் பினைப் பெற்றது எனலாம்.