அஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் யோ.புரட்சி அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்தார். பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் வே.ம.அருச்சுணன். அவரது படைப்புகள் பல 'பதிவுகள்' இதழில் வெளியாகியுள்ளன. சமுதாயப்பிரக்ஞை அவரது எழுத்துகளில் படர்ந்திருக்கும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்காய் அவை குரல்கொடுக்கும். மலேசியத் தமிழர்கள்தம் வரலாற்றை அவை பதிவு செய்யும், அவரது 'வேர் மறந்த தளிர்கள்' என்னும் நாவலும் பதிவுகள் இதழில் தொடராக வெளியாகியுள்ளது. அந்நாவலுக்கு முன்னுரையொன்றும் கேட்டு அனுப்பியிருந்தேன். நூல் வெளியானதா என்பது தெரியவில்லை. அவரது மறைவு பற்றிய மேலதிகத்தகவல்களைப் பெற இணையத்தில் தேடிப்பார்த்தேன். எவையும் அகப்படவில்லை. அருச்சுணனின் மறைவு பற்றிய மேலதிக விபரங்களை அறிந்த மலேசிய நண்பர்கள் எனது மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அவரது மறைவு பற்றி எழுத்தாளர் யோ.புரட்சியின் முகநூற் பதிவினைக் கீழே தருகின்றேன். அவரது மறைவால் வாடும் அனைவர்தம் துயரிலும் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. தனிப்பட்டரீதியில் நானும் பங்குகொள்கின்றேன்.
எழுத்தாளர் யோ புரட்சியின் முகநூற் பதிவு:
"மலேசியா வே.ம.அருச்சுணன் அவர்கள் காலமான துயரச்சேதி. ('1000 கவிஞர்கள் கவிஞர்கள்' படைப்பாளி). நேரே கண்டதில்லை, உள்ளத்தால் தள்ளி இருந்ததில்லை. எமது பெயரைச் சொல்லிச்சொல்லி தினம் வாழ்த்துவார். எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெயரைச்சொல்லியும் வாழ்த்துவார். அவருக்கு இருந்த முக்கியமான ஆவல் '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலினை பார்த்துவிட என்பது. முகநூலில் வெளிப்படையாகவே இது பற்றி அடிக்கடி எழுதியிருந்தார். அவரது தொலைபேசியூடாக தொடர்பு கிட்டிய பின்பு பெருநூலினை மலேசியா அனுப்பி இருந்தோம். அதனைப் பற்றி வலையொளியில்(யூ டியூப்பில்) பதிவு ஒன்றினையும் செய்திருந்தார். இந்த நூல்தான் அவருக்கும், எமக்கும் உறவுப்பாலமாகி நின்றது. குடும்பமாகச் சேர்ந்து அந்நூலினை கொண்டாடி இருந்தார். அந்தப் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தார். குடும்பப் புகைப்படங்கள் வெளியே இட வேண்டாம் என்றார். அவரிடம் பெருநூல் சென்று சேர்ந்த திகதியான 23.02.2021இல் அவர் இந்தச் செய்தியை அனுப்பினார். வணக்கமும் வாழ்த்துகளும் யோ புரட்சி! தாங்கள் எனக்கு அன்புடன் அனுப்பி வைத்த '1000 கவிஞர்கள்' நூல் நேற்று 22.2.2021 திங்கள் மதியம் இனிதே கிடைக்கப் பெற்றேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் அயரா முயற்சியில் மலர்ந்த அந்த நூலின் பக்கங்களைப் புரட்டும் போது பரவசமடைந்தேன்! உங்கள் உழைப்பைக் கண்டு அதிசயப்பட்டேன்.வாழ்த்துகள். தங்களது சார்பில் எனது துணைவியார் அந்நூலை எனக்கு அன்புடன் பரிசாக வழங்கி வாழ்த்தினார். அந்நூல் குறித்து எனது எண்ணப்பதிவைத் தங்களுக்குப் பின்னர் அனுப்பி வைக்கிறேன். தாங்கள் சொன்னது போல் மனமுவந்து நூலை அன்புடன் எனக்கு அனுப்பியமைக்கு மிக்க நன்றி. அன்புடன், கவிஞர் வே.ம.அருச்சுணன்,மலேசியா. 23.2.2021.
வே.ம.அருச்சுணன் அவர்களே! மாயமாக கரைந்துகொண்டிருக்கும் இந்தப் பூவலக வாழ்வில் வஞ்சகமின்றி எம்மை நேசித்த பண்பாளர்களில் தாங்கள் முக்கியமானவர். உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பும் சேர்ந்திருக்கும். உங்களோடு சில நிமிடங்களாவது பேச்சிலே உரையாடியமை மறக்கவியலா துளிகள். வருடக்கணக்காய் எழுத்தூடே இதயம் இணைந்திருந்தது. வே.ம.அருச்சுணன் அவர்களின் இழப்பினாலே துயருற்றிருக்கும் உறவுகளோடு எமது துயரினை பகிர்ந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்."