எழுத்தாளர் என்.சரவணனின் 'யாழ் நூலக எரிப்பு' பற்றிய 'தாய் வீடு' கட்டுரை பற்றிய முகநூல் பதிவும் , அதற்கான அவரது எதிர்வினையும்! - வ.ந.கி -
எழுத்தாளர் என்.சரவணன் அவர்கள் ஜூன் மாத 'தாய்வீடு' பத்திரிகையில் யாழ் நூலக எரிப்புப் பற்றி ஒரு கட்டுரை 'யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்க' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில் அவர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 ,1981 என்றே உறுதியாக எழுதியுள்ளார். ஆய்வாளரான அவரது இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது.
அப்போது யாழ் நூலகராகவிருந்த ரூபவதி நடராஜா தனது 'யாழ்பபாணப் பொது நூலகம் அன்றும் இன்றும் ' என்னும் நூலில் தெளிவாக நூலகம் எரிக்கப்பட்டது ஜுன் 1 இரவு என்றே குறிப்பிட்டிருக்கின்றார். 20.6.1981 வெளியான ஈழநாடு பத்திரிகைச் செய்தியிலும் யாழ் மாநகரசபை ஆணையாளர் சிவஞானமும் அவ்விதமே கூறுகின்றார். பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அமிர்தலிங்கம் அவர்களும் அவ்விதமே குறிப்பிடுகின்றார். இந்நிலையில் சரவணன் அவர்கள் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 என்று கூறும்போது ஏன் மேற்படி தகவல்கள் எல்லாம் தவறானவை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஏன்?