சிறுகதை: புண்ணியத்தை தேடி .... - இணுவை சக்திதாசன் டென்மார்க் -
டெலிபோன்மணி விடாமல் அடித்துக்கொண்டு இருந்தது. நல்ல தூக்கக் கலகத்தில் இருந்த சகுந்தலா, திடுக்கிட்டு எழுந்து டெலிபோனை தூக்கினாள் . அது யாழ்ப்பாணத்தில் இருந்து வாசுகி " நான்தான் அக்கா" என்றாள் .
"என்ன இந்த நேரத்தில என்று" மணிக்கூட்டை பார்க்காமலே சகுந்தலா கேட்க , " என்னக்கா ! இஞ்ச இப்ப ஒன்பது மணியாப் போச்சுது உங்க இன்னமும் விடியேல்லையோ ? "என்றாள்.
அப்பதான் சகுந்தலா 'லைற்'றை போட்டு நேரத்தைப் பார்த்தாள் அதிகாலை ஐந்து மணியை அது காட்டியது .
டென்மார்க்கில் கோடை காலங்களில் இரவெல்லாம் பகலாகவும் பகலெல்லாம் இரவு போலவும் இருக்கும். கோடை காலங்களில் இரவு ஒன்பது பத்து மணிக்கே சூரியன் வானில் தெரியும். பனி காலங்களில் விடிந்தாலும் இராவகத் தான் இருக்கும் .
அப்படி ஒரு பனிக்காலம் தான் டென்மாக்கில் இப்போ ....
வேலை வெட்டிக்கு போகாததினால் இரவிரவா நாடகத் தொடரும் ... பேஸ்புக்கு மாக ... மேஞ்சு போட்டு படுக்க சமமாகிப் போகும். பேந்து விடிய விடிய படுத்துக் கிடப்பாள் சகுந்தலா . இப்ப அவள் வேலை இல்லாமல் வீட்டோடு தான் . டென்மாக்கில் வீட்டோடு இருந்தாலும் அரசாங்கம் பணம் கொடுக்கும். அவள் வந்து கொஞ்சக்காலமாக வேலை செய்தவள். செய்து கொண்டிருக்கேக்க நாரியை பிடிச்சுப் போட்டுது என்று, ஒரு நாள் வேலைத் தளத்தில விழுந்தவள் தான் எழும்பவேயில்லை. மனைவியை அம்புலன்சில ... ஹோல்பேக் வைத்தியசாலைக்கு கொண்டுபோவதாக அறிவித்தல் வர துடிச்சுப் போன கணவன் சிவசாமி அலறியடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கு போனபோது, அரை மயக்கமாக கிடந்த சகுந்தலா கணவனின் குரல் கேட்டவுடன் கடைக் கண்ணை திறந்து கண்ணடித்தாள். அப்போதான் சிவசாமிக்கு நிம்மதியாக இருந்தது .