தொடர் நாவல்: கலிங்கு (2012: 11-13) - தேவகாந்தன் -
11
முன்னொரு காலத்தில் வழித் தடங்களும் அற்றிருந்த பெருவனம் மாங்குளத்துக்கும் முல்லைத் தீவுக்குமிடையே செறிந்து கிடந்தது. உள்நுழைந்து செல்கிறபோது தடங்கள் தோன்றி மறைந்து மீண்டும் தோன்றுவதான விந்தையை அவை கொண்டிருந்தன. பெருமரங்களின் அடியில் புல் பூண்டு செடி கொடிகள் துளிர்விடாதென்று யார் சொன்னது? அந்த விதி வனத்துக்கு இல்லை. விதிகள் பிறப்பதும் நிலைப்பதும் மண்ணில் காண்பவை. மனிதரால் இழைக்கப்படுபவை. வனம் தனக்கான விதிகளை தானே வகுக்கிறது.
மழை பெய்யும் காலத்தில் வனம் தாகம் தணிக்கிறது, நனைகிறது, விளையாடுகிறது. வெயிலடிக்கும் காலத்தில் அது உயிர்தரித்திருக்க மட்டும் நீரைத் தேடுகிறது. அந்த நீரை அது மண்ணில் காபந்துசெய்து வைத்திருக்கிறது. அந்தவகையில் யாருமறியா ஒட்டகமாய் இருக்கிறது வனம். பூக்கும் மரங்கள் வனத்தில் நிறையவேயெனினும், அவைகளில் தேத்தாமரம் ராணியாக இருக்கிறது. அதன் வாசம் வெகுதூரத்துக்குப் பரவி வனத்தையே வாசக் காடாக்கிவிடுகிறது. அது பூக்கும் காலத்தில் வனமெங்கும் வானவரும் வந்து மகிழ்ந்து விளையாடி களித்துச் செல்வர் என்கின்றன வனவரது கதைகள்.
கனி தரும் மரம் ஒவ்வொன்றும் பூக்கும். பூத்துவிட்டு சினைப்படுவதற்காய் சிப்பிபோல் வாய் பிளந்து காத்திருக்கும். காற்றிலும் தும்பிகளிலும் தேனீக்களிலும் தொற்றிவரும் ஒரு மகரந்தத் துகளுக்கானதுதானே பூவின் தவம்? தவத்தின் சித்தியில் சூல் கொள்கின்றன பூக்கள். காய்கள் தோன்றுகின்றன. காய்கள் கனிகளாகின்றன. குருவிகளின் பட்சணிப்பிலும், காற்றின் வீச்சிலும் இனவிருத்தி தூரதூரங்களிலும் நடக்கிறது. மரம் ஒரு சுற்று வாழ்வை முடித்த ஆசுவாசம் கொள்ள மழை வருகிறது.