ஆய்வு: மா.சு.செளந்தரராசன் சிறுகதைகளில் மகள் பாத்திரப் படைப்பு! - பி.ஆர்.இலட்சுமி (முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்) , வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை-117. -
முன்னுரை
பெண்களாய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா - கவிமணிகுடும்பம் என்பது உறவுகள் கூடி வாழும் இல்லம். அத்தகைய உறவுகளில் தாய்ப்பாசத்திற்கு அடுத்த நிலை உறவாக மதிப்பிடக்கூடிய உறவு மகளாகும். இத்தகைய பெருமைக்குரிய மகள் நிலை உறவு குறித்துப் பெருந்தன்மை குடும்பக்கதைகள் சிறுகதைத்தொகுப்பில் எழுத்தாளர் செளந்தரராசன் படைத்துள்ள தன்மையினை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தளவை மா.சு.சௌந்தரராசன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் இராயகிரியில் சுப்பையா-மாரியம்மாளுக்கு பத்தாவது மகனாகப் பிறந்தார் (27-8-1953). விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டியில் தமது மனைவி-தங்கேஸ்வரியுடன் வாழ்பவர். ஒன்பதாம்வகுப்பு வரை படித்த இவர் தளவாய்புரம் அம்மையப்ப நாடார் பெண்கள் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணி செய்தவர். ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவுகளோடு படிக்க முயற்சி செய்து முடியாமல் போனதால் எழுத்தாளராக வளர்ந்தவர். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தினர் உதவியுடன் இவரது சிறந்த கதைகளைத் திரு. அப்துல்ஹமீது அவர்கள் வானொலிக் கதைகளுக்காகப் பேசியுள்ளார். இவரது முதல் சிறுகதை14-10-1985 மாலைமுரசு இதழில் வெளி வந்தது. மேதகு.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தபோது இவரது சிறுகதைகளைப் பாராட்டி உள்ளார்.
நா.கவிதா என்ற சிவகாசி கல்லூரி மாணவி இவரது படைப்புகளை ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார். நல்லஉள்ளம், தரிசனம், சுபசகுனம், பெருந்தன்மை, யோசனை போன்ற பெருமை மிகுந்த பல சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள இவர் சிறுவர்களுக்கான பல நூல்களையும் எழுதியுள்ளார்.