எனக்குப் பொதுவாக அதிகம் வாசிப்பவர்களை, அதிகமாக எழுதுபவர்களை. அதிகமாகத் தம் தர்க்கரீதியிலான சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்துபவர்களைப் பிடிக்கும், அவர்கள்தம் கருத்துகள் முரண்பட்டவைகளாக இருந்தால் கூட அவர்கள் தமக்குச் சரியென்று பட்டதைத் தாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டுமென்பதற்காக இயங்குபவர்கள் என்பதால் நான் அவர்களை மதிப்பவன். எழுத்தாளர் அகணி சுரேஷ் (சி.அ.சுரேஷ்) அத்தகையவர்களில் ஒருவராக நான் அடையாளம் காண்பவன்.
பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான இவர் ஐக்கிய இராச்சியத்தில் கணனித் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். தற்போது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தலைவராகவும் இருந்து வருபவர். இவரது எழுத்துலகப் பங்களிப்பு கவிதை (மரப்புக்கவிதையுட்பட), சிறுகதை, நாவல், கட்டுரை (அறிவியல், ஆன்மிகம், இலக்கியம்) , இசைப்பாடல் எனப் பன்முகப்பட்டது. சிறந்த பேச்சாளர். இவரது கரகரத்த குரல் கேட்பதற்கு இனிமையானது. தமிழகத்துத் திமுகப் பேச்சாளர்களை நினைவூட்டுவது.
அண்மையில் இவரது 'கட்டுரைச் சாரல்' (கட்டுரைத் தொகுப்பு), 'இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்' (கட்டுரைத்தொகுப்பு) மற்றும் 'இன்பமுற இருக்கிறது இனிய வாழ்வு' (நாவல்) ஆகியவற்றை வாசித்தேன். ஆன்மிக வாதி ஆனால் அறிவியலை ஏற்கும், நம்பும் இலக்கியவாதி என்பதை இவரது இலக்கியக் கட்டுரைகள் காட்டுகின்றன. மக்களுக்குப் பயனுள்ளதாக இலக்கியம் இருக்க வேண்டுமென்னும் கருத்துள்ளவர் என்பதையும் இவரது எழுத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியம், சங்கமருவிய இலக்கியம் போன்றவற்றில் இவருக்கிருக்கும் புலமையினை இவரது அவை பற்றிய இலக்கியக் கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக 'இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்' என்னும் தொகுப்பு நூல் பதினெண் கணக்கு நூல்களான ''இனியவை நாற்பது', 'இன்னா நாற்பது' ஆகிய நூல்களிலுள்ள பாடல்களை அவற்றுக்கான உரைகள் மூலம் விளக்குவதோடு அவற்றைப் பற்றிய அவரது சிந்தனைகளையும் வெளிப்படுத்தும். மிகவும் தெளிந்த, சுவை மிகுந்த , வாசிப்புக்கு இடையூறுகளை ஏற்படுத்தாத எழுத்து நடை இவருடையது.
'இன்னா நாற்பது' செய்யுள்களை முதலில் விளக்கிப் பின் 'இனியவை நாற்பது' செய்யுள்களை விளக்கும் வகையில் நூலை ஒழுங்குபடுத்தியிருப்பது ஆரோக்கியமானதொரு செயல். வாசித்து முடிக்கும் ஒருவருக்கு வாழ்வில் செய்ய வேண்டியவை எவை எனச் சிந்தனையினை ஏற்படுத்தும் ஒழுங்குமுறை. 'இன்னா நாற்பது' கட்டுரையில் முதலில் செய்யுள்களைக் குறிப்பிட்டு, அதன் பின்னர் அவற்றை புணர்ச்சி நீக்கி எளிமைப்படுத்தி, பின்னர் அவை பற்றிய விளக்கத்தை, தனது புரிதலை வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் முறை நல்லதொரு முறை. ஆனால் அதே மாதிரி அடுத்த கட்டுரையான 'இனியவை நாற்பது'வில் கையாளவில்லை? காரணம் தெரியவில்லை. இக்கட்டுரைகள் 'தமிழ் மிரர்' பத்திரிகையில் வெளியான கட்டுரைகள்.
'கட்டுரைச் சாரல்' தொகுப்பு நூலிலுள்ள கட்டுரைகள் ஆன்மிகம், அறிவியல் , இலக்கியம், விமர்சனம், நினைவு கூர்தல், நேர்காணல் என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் கட்டுரைகள் 'நேர்மறையான தொடர்பாடல்', 'புன்சிரிப்பு செய்திடப் பூத்திடும்', 'தன்முனைப்பாற்றல்', 'கால நிர்வாகம்' போன்ற மானுட ஆளுமையை வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் கட்டுரைகளை உள்ளடக்கியவை. இலக்கியக் கட்டுரைகள் பிரிவு அறிவியல் சிறுகதைகள் பற்றி, திருக்குறள் பற்றி, புலம்பெயர் வாழ்வில் தமிழ் பற்றி, 'எழுத்தாளர் சிற்பி', 'அறிஞர் அ.ந.கந்தசாமி' பற்றிப் பேசுகின்றன. விமர்சனக் கட்டுரைகளில் நூலாசிரியர் எழுத்தாளார் குரு அரவிந்தனின் 'எங்கே அந்த வெண்ணிலா' , 'சொல்லடி உன் மனம் கல்லோடி', கனி விமல்நாதனின் 'விந்தை மிகு விண்வெளி விபத்து' (அறிவியல் நாவல்), கவிஞர் தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கத்தின் 'கனடாக் காவியம்' , அருட்கவி ஞான கணேசன் தம்பிஐயாவின் 'அருட்கவியமுதம்', வித்துவான் கனகரத்தின்ம் செபரத்தினத்தினதின் 'செபரத்தின வெண்பா' பற்றிய தனது கருத்துகளை முன் வைக்கின்றார். நூலைத்தானே தட்டச்சு செய்து, வடிவமைத்து (அட்டைப்படமுட்பட) 'சாமந்தி' பதிப்பகம் (மார்க்கம், கனடா) மூலம் வெளியிட்டுள்ளார். அட்டையில் எழுத்தாணியுடன் இருக்கும் திருவள்ளுவர் ஓவியமுள்ளது. அத்துடன் நூலை வாசகர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளது நல்லதொரு முன்மாதிரி.
இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு' நாவலின் தலைப்பு ஜனரஞ்சகமான தலைப்பு. ஆனோல் அதில் தெரியும் ஆரோக்கியமான கருத்து என்னைக் கவர்ந்தது. வாழ்க்கை இத்துடன் முடிந்து போய் விடவில்லை. இனியும் இருக்கிறது. இதுவரை நடந்தவற்றால் மனம் தளர்ந்து , சோர்ந்து போய்விடத்தேவையில்லை என்னும் , வாழ்க்கைக்கு நேர்மறையாக வழி காட்டும் கருத்தை வெளிப்படுத்தும் கருத்து இத்தலைப்பிலுள்ளது. 'இலக்கியமானது கற்பதற்கு மட்டுமன்றி வாழ்வதற்கும் உரியது' என 'இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்' என்னும் இவரது நூலின் என்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுவதை வெளிப்படுத்தும் தலைப்பு.
இத்தலைப்புக்கேற்ப இந்நாவலை இவர் கட்டமைத்துள்ளது அகணி சுரேஷின் கதைப்பின்னலை உருவாக்கும் திறமையினை வெளிப்படுத்துகின்றது. கதை இதுதான்: கணினித்தொழில்நுட்ப வல்லுநரான அமலா என்னும் ஓரிளம் பெண் , தன் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட சுதாகரன் என்னுமோரிளைஞனை மணம் முடித்துக் கனடா வருகின்றாள். அவளை மணமுடித்த பின்னர் சுகாதரனுக்கு இன்னுமொரு பெண்ணுடன் தொடர்பு எற்படுகின்றது. இது அமலா கனடா வருவதற்கு முன்னர் நிகழ்ந்து விடுகின்றது. ஆனால் சுதாகரனின் குடும்பத்தவர்கள் இதனை அமலாவிடமிருந்து மறைத்து விடுகின்றார்கள். ஏன்? அவள் கனடாவுக்காவது வரட்டுமே என்னும் நல்லெண்ணமாம்.
இவ்விதம் கனடாவுக்கு வரும் அமலா காலப்போக்கில் சுதாகரனின் நடத்தையை அறிந்துகொள்கின்றாள். அவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்து விடுகின்றார்கள். இவ்விதமாகச் செல்லும் அமலா தன் கல்வித்திறமையால் கணினி நிறுவனமொன்றில் வேலை பெற்று,உயர் நிலை அடைந்து, அங்கு அவளுடன் பணியாற்றும் அரவிந்த் என்னும் இன்னுமோரிலைஞன்ம் காதல் கொண்டு, அவனைக் குடும்பத்தவர் சம்மதத்துடன் மணம் முடித்து, சொந்தமாக வீடொன்றும் வாங்கி வாழ்க்கையை வெற்றிகரமாகத் தொடர்கின்றாள்.
இதற்கிடையில் அவளை மணம் முடித்து, இன்னுமொரு பெண்ணுடன் சென்ற அமலாவின் முன்னாள் கணவனின் வாழ்க்கையும் சீர்குலைந்து போகின்றது. அந்தப்பெண்ணுடமிருந்து பிரிந்து , வாகன விபத்தொன்றில் சிக்கி, நடைபிணமாகிவிடுகின்றான். இந்நிலையில் அவளது குடும்பததவர்கள் அரவிந்துடன் காதல் கொண்டு தன் புதிய வாழ்க்கையில் அமலா இறங்கியிருப்பதை அறியாது அமலாவுட்ன தொடர்புகொள்கின்றார்கள். இச்சமயத்தில் எமது தமிழ்த்திரைப்படக் க்தாசிரியர்கள் போல், வெகுசன நாவலாசிரியர்கள் போல் அமலாவையும் கதாசிரியர் குத்துக்கரணமடிக்க வைத்து விடுவாரோ என்னுமோர் எண்னம் எழுந்தது. நல்லவேளை அவர் அதைச் செய்யாமல், அமலாவின் கடந்த காலத் துயரச் சம்பவங்களால் அவளது வாழ்க்கையை முடித்து விடவில்லை, 'இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு; என்று
புதிய வாழ்க்கை இன்பத்துடன் தொடர வழி செய்திருக்கின்றார். பாராட்டுக்குரிய விடயம். அதற்காக அவரைப் பாராட்டுகின்றேன்.
'இலக்கியமானது கற்பதற்கு மட்டுமன்றி வாழ்வதற்கும் உரியது' , 'நாமும் வாழ்வோம். நம்மைச் சூழவுள்ளவுள்ளவர்களும் நன்றாக வாழட்டும்' ( 'இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்' நூல் என்னுரை) என்று செயற்படும் எழுத்தாளர் அகணி சுரேஷ் மேலும் இவ்விதம் மானுடரை ஆரோக்கியமான வழிநோக்கி வழிகாட்டும் நூல்களைத் தர வாழ்த்துகின்றேன்.