நேற்று நண்பரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்களின் சகோதரருமான யோகராஜா தியாகராஜாவிடமிருந்து (முகநூலில் யோக வளவன் தியா) வடகோவையாரின் அண்மையில் வெளிவந்த நூலான 'ஆளப்போகும் வேர்கள்' நூலின் பிரதியொன்றினைப் பெற்றுக்கொண்டேன். கிழக்கு மாகாணத்திலுள்ள ஏறாவூரிலிருந்து செயற்படும் கஸல் பதிப்பகம் அண்மைக்காலமாக மிகவும் சிறப்பான வடிவமைப்பில், தரமான நூல்களை வெளியிட்டு வருவதை அவதானித்திருக்கின்றேன். வடகோவையாரின் இந்நூலையும் மிகவும் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றார்கள். மேலும் இத்துறையில் அவர்கள் பல நூல்களை வெளியிட்டு இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்க வாழ்த்துகள்.
வடகோவையாரை முகநூலில் அறிவதற்கு முன்னரே என் பதின்ம வயதுகளிலேயே அறிந்திருக்கின்றேன். அவரது சிறுகதைகள் ஈழநாடு வாரமலர், சிரித்திரன் என்று அக்காலகட்டத்தில் நான் விரும்பி வாசித்த ஊடகங்களில் வெளிவந்திருந்தன. சிறுகதைப்போட்டிகளில் இவரது சிறுகதைகள் முதற் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அப்போதே இவரது கதைகளில் அவ்வப்போது தென்படும் இயற்கையுடனான நேசிப்பை அவதானித்திருக்கின்றேன். ஆனால் அப்போது இவர் ஒரு விவசாயப் பட்டதாரி என்பதை அறிந்திருக்கவில்லை. முகநூலில்தான் இவரது பதிவுகளின் மூலம் இவரது கல்விப் பின்புலத்தை அறிந்துகொண்டேன்.
இவர் அண்மைக்காலமாக முகநூலில் 'விதானையார் வீட்டு முற்றம்', 'ஒரு கிராம அலுவலரின் நாட்குறிப்பில் இருந்து' என்னும் தலைப்புகளில் எழுதி வரும் தொடர்களை, இலங்கையில் காணப்படும் பல்வகைப் பறவைகளைப்பற்றி எழுதிவரும் கட்டுரைகளையெல்லாம் மிகவும் விரும்பி வாசிப்பவன் நான். 'விதானையார் வீட்டு முற்றம்' தொடரில் எழுதிய கட்டுரைகள் உள்ளடக்கிய தொகுப்பு இது. முழுமையாக உள்ளடக்கியதா அல்லது அத்தொடரில் வெளியான முக்கிய கட்டுரைகளின் தொகுப்பா என்பது தெரியவில்லை.
என்னைப்பொறுத்தவரையில் 'விதானையார் வீட்டு முற்றம்' அற்புதமானதொரு தலைப்பு. விதானையார் வீட்டு முற்றத்தையும், விதானையாரையும். நளினச் செல்லையரையும், பர்வதம் மாமியாரையும் சிந்தையில் சித்திரங்களாக விரிக்கும் தலைப்பு. அத்தலைப்பையே நூலின் தலைப்பாகவும் வைத்து, இத்தலைப்பில் எழுதிய , எழுதப்போகும் கட்டுரைகளைப் பல தொகுதிகளாக வெளியிடுவது சிறப்பாகவிருக்குமென்று தோன்றுகின்றது. அதுபோல் 'ஒரு கிராம அலுவலரின் நாட்குறிப்பில் இருந்து' என்னும் தலைப்பிலும், பறவைகளைப்பற்றியும் தொகுப்புகளாக வெளியிடுவதற்கப் போதுமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். வடகோவையார் சிந்திப்பாராக.
பயர்ச்செய்கை பற்றிய பயனுள்ள தகவல்களை விவசாயிகள் மட்டுமல்ல இந்நூலை வாசிக்கும் எவருமே நினைவில் வைத்திருக்கும் வகையில் அபுனைவையும், புனைவையும் கலந்து எழுதப்பட்டுள்ள விவரணச் சித்திரங்களை உள்ளடக்கியுள்ள நூலிது. வடகோவையாரின் எழுத்தாற்றலும், கல்விப்பின்புலமும் (அவர் குண்டகசாலை விவசாயக் கல்லூரிப் பட்டதாரி) இதற்கு நன்கு உதவியுள்ளன.
- எழுத்தாளர் வடகோவை வரதராஜன் -
தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை இலக்கியத்துக்குத் தேவையுண்டு. வாசிக்கையில் இன்பத்தைத் தருபவை அவை. இவ்வகையில் என் வாசிப்பனுபவத்தில் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் சாவி, பாக்கியம் ராமசாமி (ஐ.ரா.சுந்தரேசன்), செங்கை ஆழியான, பானுமதி ராமகிருஷணா, பொ.சண்முகநாதன். சாவியின் வாஷிங்டனில் திருமணத்துக்கு ஓவியர் கோபுலு வரைந்த ஓவியங்கள், பாக்கிய ராமசாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டி ஆளுமைகளை வெளிப்படுத்த ஓவியர் ஜெயராஜ்ம் வரைந்த ஓவியங்கள், பொ.சண்முகநாதனின் 'கொழும்புப் பெண்'ணைச் சித்திரிக்கும் ஓவியர் வீ.கே (வி.கனகலிங்கம்) ஓவியம், செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகிறாள்' ஆச்சியை நினைவில் நிற்க வைக்கும் ஓவியர் செளவின் ஓவியங்கள், பானுமதி ராமகிருஷ்ணாவின் மாமியாரைச் சித்திரிக்கும் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்கள் இவற்றையெல்லாம் மறக்க முடியுமா?
நளினச் செல்லையரையும் , விதானையாரையும் , பர்வதம் மாமியையும் சித்திரிக்கும் வகையில் சிறந்த ஓவியர் ஒருவரின் ஓவியங்களையும் எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்நூலில் பதிப்புகளில் சேர்ப்பது மிகவும் சிறப்பாகவிருக்குமென்றும் தோன்றுகின்றது.
பானுமதி ராமகிருஷ்ணா சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது மாமியார் கதைகள் தமிழ், தெலுங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ஆந்திர மாநிலத்தின் சாகித்திய விருதினை இவரது மாமியார் கதைகள் தொ9குப்பு பெற்றுள்ளது. தமிழில் ராணிமுத்தாகவும், வானதி பதிப்பக வெளியீடுகளாகவும் வெளியாகியுள்ளது. இவை பற்றிக் குறிப்பிடுகையில் தன் மாமியாரே மேற்படி கதைகளில் வரும் மாமியார் பாத்திரத்துக்கான தூண்டுதல் என்பார் பானுமதி கிருஷணா.
எழுத்தாளர் வடகோவை வரதராஜனுக்கு நளினச் செல்லையர் பாத்திரத்துக்கான தூண்டுகோல் யாராகவிருக்கக் கூடும்? அவர் சிறந்ததோர் எழுத்தாளார். அவரது எழுத்துத் திறமையும், கல்விப்பின்புலமும், அவருக்கு இயல்பாக வரும் நகைச்சுவை உணர்வுமே , அவரது சக மானுடர் ம் மீதான அவதானிப்பும் நிச்சயமான காரணங்களாகவுமிருக்குமென்பது வெள்ளிடைமலை. இவையெல்லாமிருந்தால்தான் இவ்விதமான கட்டுரைகளை ஒருவரால் எழுத முடியும்.
இந்நூலிலுள்ள கட்டுரைகளில் அவர் சித்திரித்திருக்கும் நளினச் செல்லையார் நம்மையெல்லாம் முதற் சந்திப்பிலேயே கவர்ந்து விடுவார். அவரது ஆர்வமும், மானுட உளவியலும் மறக்க முடியாதவை. உளுந்து, பயறு , மஞ்சள் என்று பல்வகைப் பயிர்ச்செய்கை பற்றித் தொழில்நுட்பரீதியாக விபரிக்கும் அதே சமயம், அவற்றை நளினச் செல்லையரின் ஆளுமையை வெளிப்படுத்தி அவற்றினூடு வடகோவையார் வெளிப்படுத்துகையில் அவரே சில சமயங்களில் கொடுப்புக்குள் சிரிப்பதைப்போல் எம்மையும் சிரிக்க வைத்து விடுகின்றார்.
உதாரணத்துக்கு...
!. 'நளினச் செல்லையரும் உளுந்துப் பயிர்ச்செய்கையும்' விவரணச் சித்திரத்திலிருந்து:
"இப்ப கொடிவிடாத செடியாக வளர்கிற MI-1, அனுராதா எண்டு இரண்டு புதிய இனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது."
"உதென்ன விண்ணானம்? சினிமாக்காறியளின்ரை பேரேல்லாம் சொல்லுறாய்?"
"காலமாற்றத்தோடு பேரும் மாறுது அண்ணை. பொன்னி, கருணா, பாசுமதி எண்டு நெல்லுக்குப் பேர் வைக்கலாம். உழுந்துக்கு அனுராதா எண்டு பெயர் வைக்கப்படாதோ? வன்னியில் இப்ப அதிகம் விளைகிற நெல்லின் பெயர் ஆட்டக்காரி"
2. 'காலை முறிச்ச செல்லையரும், மஞ்சள் பயிர்ச்செய்கையும்' சித்திரத்திலிருந்து...
"செல்லையா அண்ணரின் கடவாயில் கணநேரம் ஒரு புன்சிரிப்பு ஓடி மறைந்ததை எனது விதானைப் புத்தி குறித்துக்கொண்டது."
அப்படி என்ன செல்லைருக்கு நடந்தது? அவரது கால் முறிவுக்குக் காரணமென்ன? அது பற்றி ஊர்ப்பெடியள் கதைப்பதென்ன? அதை நீங்கள் ஊகித்துத்தான் கண்டு பிடிக்க வேண்டும்? அவ்விதம் கண்டுபிடிக்க நீங்கள் நிச்சயம் நூலைக் கஸல் பதிப்பகத்திடமிருந்து வாங்கி வாசிக்க வேண்டும். அவ்விதம் வாங்கி வாசிக்கையில் நீங்களும் அதற்கான காரணத்தை ஊகித்துக்கண்டு பிடிப்பீர்கள். அப்போது உங்கள் வாய்க்கொடுப்புகளிலும் மெல்லியதொரு புன்சிரிப்பு படரும்.
3. 'நளினச் செல்லையரும் மஞ்சள் பதப்படுத்த'லிலுமிருந்து..
"கொண்டா உதையும் கொண்டே மனிசிட்டை குடுப்பம்" என்றவாறே எனது மனைவி எங்கு நிற்கிறார் என எட்டிப்பார்த்தார். மனைவி அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு எனக்கு அருகில் வந்து குரலைத்தாழ்த்தி 'என்ன இருந்தாலும் மஞ்சள் தேச்சு குளிச்ச பெம்பிளையைப் பார்த்தால் ஒரு கிக்குத்தான்' என்று கண்ணடித்தார்.
நூலிலுள்ள கட்டுரைகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் அவை மண் வாசனை மிக்கவை. உரையாடல்கள், அவற்றில் கையாளப்படும் வழக்கிலுள்ள பழமொழிகள், மழை போன்ற இயற்கை நிகழ்வுகளின் வர்ணனைகள் இவையெல்லாம் கட்டுரைகளை வாசிக்கையில் எம்மை இன்பத்திலாழ்த்தி விடுகின்றன. முக்கியமாகச் சொந்த ஊரை விட்டுத் தொலைதூரத்தில் வேறு வேறு நாடுகளில் வாழும் எம்மவர்களுக்கு அவர்கள் இழந்த ஊர் நினைவுகளை மீட்டி விடுவதுடன் தாலாட்டவும் செய்கின்றன.
வடகோவையார் இக்கட்டுரைகளை முதலில் முகநூலில் எழுதினார். முகநூலில் எழுதுகையில் முக்கியமாக முகநூல் நண்பர்களுக்காகத்தான் எழுதுவது வழக்கம். அவ்விதம் எழுதுகையில் சில சமயங்களில் முகநூல் நண்பர்கள் மட்டுமே விளங்கும் வகையிலான கூற்றுகளும் அப்பதிவுகளில் இருப்பது இயல்பானதுதான். அவ்விதமானதொரு சந்தர்ப்பத்தையும் இந்நூலின் ஓரிடத்தில் கண்டேன். அது விதானையார் வளர்க்கும் இளங்கோ என்னும் பெயருடைய ஆட்டுக்குட்டியைப் பற்றியது.
குழப்படியும் விளையாட்டுப் புத்தியும் மிக்க அந்த ஆட்டுக்குட்டி கேற்றுக்குள்ளாலை பாய்ந்தோடும். அச்சமயத்து நிகழ்வை வடகோவையார் பின்வருமாறு விபரிப்பார்:
"இதற்கிடையில் மனைவி , "இஞ்சாரப்பா இளங்கோ கேற்றுக்குள்ளாலை ஓடுறானப்பா, பிடியுங்கோ பிடியுங்கோ.." என்று வெளியே ஓடிய ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கத்தினார். நான் சிங்காரியையும் நாச்சியாரையும் பாத்து , 'போய் பிடிச்சு வாங்கோ' என்றேன். இருவரும் பாய்ச்சலில் புறப்பட்டு, இளங்கோவை ஒவ்வொருவரும் காதில் கெளவி கொற இழுவையில் கொண்டு வந்தார்கள். இளங்கோ வழமையான திருட்டு முழியுடன் வந்து கொண்டிருந்தது.
மகன் அதைப் பிடித்துக் கட்டியபடி , "உதுக்குத்தானப்பா சொன்னனான் ஆட்டுக்குட்டிக்கு இளங்கோ எண்டு பேர் வையாதியுங்லோ எண்டு, உந்தப் பேர் வைச்சால் ஊர்சுத்தப் வெளிக்கிட்டிடும் எண்டனான் கேட்டியளோ" என்று புறுபுறுத்தான்."
இங்கு உந்தப் பேர் வைச்சால் ஊர்சுத்தப் வெளிக்கிட்டிடும் எண்டனான் என்று ஏன் விதானையார் சொன்னவரென்று வாசகர்கள் முழி பிதுங்கப்போகின்றார்கள். யாரிந்த இளங்கோ, சிலப்பதிகாரம் தந்த இளங்கோவாக இருக்குமோ என்று தலையைச் சொறியப் போகின்றார்கள். அவர்களுக்கெங்கே தெரியப்போகுது அது அவரது நண்பர் எழுத்தாளர் டிசெதமிழன் (இளங்கோ) பற்றிக் கூற்றென்று. இவ்விதமான சந்தர்ப்பங்களில் குழப்பத்தைத் தவிர்க்க அடிக்குறிப்புகள் அவசியம்.
இந்நூலில் ஓரிடத்தில் அவர் தனது பதிவொன்றில் நகைச்சுவை உணர்வு பற்றிப் பின்வருமாறு கூறியிருப்பார்: "நகைச்சுவை உணர்வு இல்லாத நண்பர்களுடன் பழகுவது என்பது கொடுமையானது . எனது அவதானிப்பில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் குடும்ப வாழ்க்கையிலும் சரி சமூக வாழ்க்கையிலும் சரி வெற்றியாளர்களாக இருக்கிறார்கள் . சிரித்துக் கடந்துவிடும் நுண்மதியாளர்கள் இவர்கள் ." வடகோவையாருக்கு இயல்பாக அமைந்த அந்த நகைச்சுவ உணர்வே 'ஆளப்போகும் வேர்கள்' நூலின எமக்குத் தந்திருக்கின்றது. இது போன்ற மேலும் பல நூல்களை எதிர்காலத்தில் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.
பதிப்பகம்: கஸல், ஏ.கே.எம்.வீதி , ஏறாவூர், இலங்கை
தொலைபேசி : + 94 770807787
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.