தீவிர இலக்கியவாதியும் மின்னிதழாளரும் இருபத்தைந்து நூல்களைத் (மின்னூல்களையும் உள்ளடக்கி) தந்தவருமான வ.ந.கிரிதரனின் அண்மைக்கால நூலான ' வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ' , அழகிய அச்சமைப்போடு 'ஜீவநதி' பிரசுரமாக வெளிவந்துள்ளது.இத்தொகுப்பில் பதிநான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.கவனிப்புக்குரிய படைப்பாளிகள் பற்றியதாகவும் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் நிச்சயமாக இலக்கிய வாசகர்களை ஈர்க்கும்.
இதில் எனது கவனத்தை ஈர்த்த விடயம் அ.ந.க.பற்றிய கட்டுரைகளே.அவர் தொடர்பாக மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1) அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை.
2) அ.ந.க.வின் - மனக்கண் -
3) ஈழத்து தமிழ் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு.
இம்மூன்று கட்டுரைகளும் நூலின் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருப்பது கவனத்திற்குரியது.இன்னும் சில விடயங்களையும் உள்ளடக்கி தனியே ஒரு நூலாக வெளியிட்டிருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது.
அ.ந.கந்தசாமி என்ற நாவலாசிரியர் எனக்குப் படிக்கும் காலத்திலேயே அறிமுகமானார்.தினகரனில் 'மனக்கண்' தொடர்நாவலைப் போட்டிபோட்டுக்கொண்டு வாசித்தது இன்னும் ஞாபகமுள்ளது.அந்நாட்களில் வாசித்த - சிவகாமியின் சபதம் - கடல் புறா - கரித்துண்டு - பெற்றமனம் - குறிஞ்சி மலர் - முதலான நாவல்களைப் போன்ற ஒன்றாகவே ' மனக்கண்'ணும் தெரிந்தது.அ.ந.க. ஓர் இலங்கை எழுத்தாளர் என்பதைத் தெரிந்துகொள் ளச் சில ஆண்டுகள் சென்றன.இலங்கையிலும் இப்படி எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது வியப்பாக இருந்தது.
- அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் தினகரனில் தொடராக வெளிவந்தபோது..
நூல் வடிவில் முதன்முதலில் வாசிக்கக் கிடைத்தது ' வெற்றியின் இரகசியங்கள்' என்ற அவரது மனநல நூல்தான்.அதுவும் இந்திய எழுத்தாளர் அப்துற் றகீமின் - எண்ணமே வாழ்வு - உளத்தூய்மை - மனதை வெல்லுவாய் மனிதனாகுவாய் - போன்ற நூல்களை ஞாபகமூட்டின.இருந்தும் ' மனக்கண்' ணும் , வெற்றியின் இரகசியங்களு' ம் இரண்டுவிதமாகவே இருந்தன.
இந்தக் கட்டத்தில்தான் அ.ந.க.வையும் அவரது எழுத்துக்கள் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள வேண்டிய தேவை என்கேற்பட்டது.அதற்கு எமது பாடசாலை ஆசிரியராக இருந்த கவிஞர் ஏ.இக்பால் உதவினார்.
" இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு உண்டு.அதனை உருவாக்கிய ஆரம்ப கர்த்தாக்களில் அவரும் ஒருவர்.அ.ந.க.நல்லதொரு அறிஞர் , சிந்தனையாளர்.ஆனால் அதிகம் படிக்கக்கூடிய வாய்ப்புஅவருக்குக் கிடைக்கவில்லை.சிறுகதை - நாவல் - நாடகம் - கவிதை - மொழிபெயர்ப்பு - சிறுவர் இலக்கியம் - இப்படிப் பலதுறைகளிலும் சாதித்துள்ளார்.ஆனால் அவை எதுவும் நூலாகவில்லை.அவர் நோய்வாய்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நான் பலதடவை அவரைப் பார்க்கச் சென்றேன்.அப்போதெல்லாம் எழுத்தாளர்கள்தான் அவரைச் சுற்றியிருந்தனர்.அவரது உறவினர் - மனைவி - மக்களென்று எவரையும் காணவில்லை " இவ்வாறெல்லாம் சொன்னார் .
ஒருசமயம் டொமினிக் ஜீவா ' மல்லிகை' யில் ' எனது ஞானாசிரியர்கள்' என்றொரு குறிப்பு எழுதியிருந்தார்.அதில் அ.ந. கந்தசாமி பற்றியும் , அவரை ஆர்.ஆர். பூபாலசிங்கமே தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் பதிவுசெய்திருந்தார்.பேராசிரியர் க.கைலாசபதி தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளதாகவும் பின்னர் அறிந்தேன்.
எழுபதுகளில் இலக்கியப் புலத்தில் சேர்ந்து இயங்கியதனால் அதிகமான விடயங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.அ.ந.க.பற்றிப் பலரும் பேசுவதை அவதானித்துள்ளேன் .எல்லோரும் அவரைச் சிலாகித்துப் பேசுவது ஒரு பொதுப் பண்பாகத் தெரிந்தது.அவர்களுள் சில்லையூர்ச் செல்வராசன் - பிரேம்ஜி ஞாணசுந்தரம் - கொழும்பு எம்.எஸ் எம் இக்பால் - பி.ராமநாதன் - போன்றோர் முக கியமானவர்கள் எனலாம் .அந்தனி ஜீவா ஒருபடி மேலேபோய் பல கட்டுரைகள் எழுதிவந்தார்.
அ.ந.க.பற்றி மனதில் எழுந்த கேள்விகளுக்கும் , அரைகுறையாகத் தெரிந்தவற்றை முழுமைப் படுத்தும் வி்தமாகவும் ' வ.ந. கிரிதரனின் கட்டுரைகள் 'என்ற நூலில் இடம்பெற்றுள்ள அ.ந.க.பற்றிய கட்டுரைகள் அமைந்துள்ளன.நீண்ட காலத் தேடலின் வெளிப்பாடாகவும் தரவுகள் காணப்படுகின்றன.
அ.ந.கந்தசாமி ஆக 44 ஆண்டுகள் மாத்திரமே(1924 --1968) வாழ்ந்திருக்கிறார்.தந்தையார் யாழ் - வண்ணார்ப்பண்ணையில் வாழ்ந்து பல சொத்துக்களின் அதிபதியாவார். அ.ந.க. ஐந்து வயதில் தகப்பனை இழந்துள்ளார்.தந்தையை இழந்து 41 நாளில் தாயையும் இழந்துள்ளார். சட்டரீதியான பாதுகாவலர்களும் பொறுப்பான சட்டத்தரணியும் சொத்துக்களைத் துஷ்ப்பிரயோகம் செய்து இல்லாமல் செய்துள்ளனர்.எஸ்.எஸ்.எல். சி- வரை கல்விகற்றுவிட்டு கொழும்பு சென்றுள்ளார்.கொழும்பில் திருமணம் செய்தபோதும் ஆள்மாறாட்டம் காரணமாக குடும்ப வாழ்வு நீடிக்காது போயுள்ளது.இவ்வாறாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தரவுகளை மட்டுமன்றி , அவரது இலக்கிய மேன்மையை- படைப்புக்கள் சம்பந்தமான விபரங்களை - இலக்கியச் செயற்பாடுகளை - வ.ந. கிரிதரன் மிகச் சிறப்பாகத் திரட்டித் தந்துள்ளார்.
- எமிலி சோலாவின் 'நாநா' நாவல் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் சுதந்திரனில் வெளியானபோது..-
இவற்றை ஒட்டு மொத்தமாக அவதானிக்கும்போது அ.ந.க.வின் ஆளுமையையும் முழுமையையும் தரிசிப்பதற்குப் பின்வருவன நூல்களாக வெளிவர வேண்டுமெனக் கருதலாம்.
* அ.ந.க.வின் வாழ்க்கை வரலாறு.
* அவர் எழுதியுள்ளதாகத் தெரியவந் துள்ள அறுபது கதைகளில் கிடைப்பவற்றை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுதி.
* ' மனக்கண்' தொடர் நாவல்.
* ' கவீந்திரன் ' மற்றும் புனைபெயர்களி ல் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.
* எமிலிஸோலாவின் ' நானா' மொழி பெயர்ப்பு நாவல்
* அ.ந.க.கட்டுரைகள்
* சிறுவர் கதைகள்
ஏற்கெனவே ' வெற்றியின் இரகசியயங்கள் ' மற்றும் ' மதமாற்றம் ' என்ற நாடகநூலும்வெளியாகியுள்ளன.
அ.ந.க. ஐந்து வயதிலேயே பெற்றாரை இழந்தார்.அவருக்கு அன்பு கிட்டவில்லை.உயர் கல்வி பெற முடியவில்லை.சொத்துக்கள் கிடைக்கவில்லை.வாழ்க்கைத்துணை சரியாக அமையவில்லை.இத்தனைக்கும் மத்தியில் அறியப்பட்டுள்ள இலக்கியச் சாதனைகள் பிரமிப்பூட்டுகின்றன.அவரது படைப்புக்கள் நிச்சயமாக அவரிடம் இருந்திருக்குமென நம்பலாம் .ஆனால் அதி எங்கேயென்றுதான் தெரியவில்லை.அவரது சமகால நண்பர்களும் அநேகமாக நம்மத்தியில் இல்லை.அவர்மீது அபிமானம் வைத்துள்ள அடுத்த பரம்பரையினர்தான் தேடிச் சேர்க்க வேண்டும்...யுத்தமும் இயற்கையின் சீற்றமும் விட்டுவைத்திருந்தால்!
பொதுவாக படைப்பாளிகள் இயற்கை எய்தும்போது அவர்கள் நூலுருவாக்கிய எழுத்துக்கள்போக , எஞ்சிய வெளிவந்த - வெளிவராத படைப்புக்கள் வீடுகளில் இருக்கும்.சமகால நண்பர்களிடமும் இருக்கும் .அவற்றை நூலாக்கும் பொறுப்பு குடும்பத்தினரைச் சேரும்.அவர்களிடம் வசதியோ அக்கறையோ இல்லாமை வேறுவிடயம். அ.ந.க.வைப் பொறுத்தமட்டில் மூலப்பிரதிகள் இல்லாமலிருப்பதே அடிப்படைப் பிரச்சினை.அவற்றை வெளியிட இலக்கியவாதியும் அ.ந.க.வின் உறவினருமான வ.ந.கிரிதரன் தயாராகவே உள்ளார் .
' புதுமைப்பித்தன் போன்றவர்களை மீண்டும் இனம் கண்டதுபோல் அ.ந.க.வையும் மீண்டும் விரிவாக இனம் காண்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியம்' - என்று கிரிதரன் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது. அ.ந.க.வைத் தேடுவோம்.கிடைப்பவற்றை அவர் கணக்கில் வைப்பிலிட்டு உதவுவோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி; ஜீவநதி மாசி 2024