தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது…..!(9) - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
அத்தியாயம் ஒன்பது!
“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”
அனவருமே சற்று ஆடித்தான் போனோம்.
தன்னைச் சுதாகரித்துக்கொண்ட ஐயர் கேட்டாக.
“என்ன சொல்லிட்டேள்….. அதுக்கிண்ணு நாள் பாக்கவேண்டாமோ…. பந்தல்கால், பத்திரிகை எதுவுமே இல்லாம…… ”
பேச்சிலே சுதி குறைந்தது.
அண்ணன் சிரித்தபடி பேசினாங்க.
“என்னசாமி பேசிறீங்க…. என்னடா இவங்க நிச்சயார்த்தம்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்தாங்க….. பேசின ரேட்டுக்குள்ளையே கலியாணத்தயும் முடிச்சிட்டு, நோவாம நம்மளைக் கழட்டி விட்டுருவாங்களோண்ணு பயப்பிடாதீங்க…. ரெண்டுக்கும் சேத்தே துட்டுக் குடுத்திடுறோம்….”
ஐயர் சமாளித்துச் சிரித்தார்.
“என்ன புசுக்கிண்ணு இப்பிடிச் சொல்லிட்டேள்…. அது அதுக்கிண்ணு முறைகள் உண்டில்லையா….. அதைத்தான் சொல்ல வந்தேன்….. அத்தோட அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டில வெச்சு நடத்தவேண்டிய பங்சன் பாருங்கோ…..”
“சாமி…. நியதிகளையும், முறைகளையும் மனிசனுக்காக, அவன் வசதி, வாழ்க்கைக்காகத்தான் ஆக்கியிருக்காங்க….. அந்த நியதிகளே மனிசனோட வசதிகளுக்கும், வாழ்க்கைக்கும் இடைஞ்சலா வர்ரப்போ அதயெல்லாம் மாத்திக்கவேண்டியதுதான் புத்திசாலித்தனம்…. இண்ணிக்கு பொதுநாள் கிடையாது….. நெறைஞ்ச முகூர்த்தநாள்…. நேரமும் அதுக்கிண்ணு உள்ளதைப் பாத்துத்தான் எல்லாமே செய்யிறோம்…. அந்த நேரத்துக்குள்ள செய்து முடிக்கலாமான்னுதான் கேக்குறேன்….”
ஐயர் உள்பட அனைவரிடமுமிருந்து அமைதியே வெளிப்பட்டது.