வாசிப்பும், யோசிப்பும் 373: புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' சிறுகதையும் , சிறுகதை பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் முக்கிய சிறுகதைகளில், பலராலும் அடிக்கடி நினைவுக் கூரப்படும் கதைகளிலொன்று இச்சிறுகதை. கதைக்குப் பங்கங்கள் மொத்தம் இரண்டே இரண்டுதாம். சிறந்த சிறுகதையொன்று பக்கங்களின் எண்ணிக்கையை வைத்து நிர்ணயம் செய்யப்படுமொன்றல்ல. அதற்கு உதாரணமாக விளங்கும் சிறுகதைகளிலொன்றுதான் பொன்னகரம்.
நம்மவரில் பலருக்குச் சிறுகதையொன்றின் வடிவம் அல்லது கூறும் பொருள் பற்றிய புரிதல் போதிய அளவில் இல்லையென்பதையும் உணர முடிகின்றது. அவர்கள்தம் ஆதர்ச எழுத்தாளர்கள் பல பக்கங்களை உள்ளடக்கிய சிறுகதைகளை எழுதியிருந்தால் இவர்களும் அவற்றையே , அவ்விதம் எழுதுவதையே சிறுகதையொன்றினை எழுதுவதற்குரிய வழியாகக் கருதிக்கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அதிக அளவில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைப் படித்திருக்க மாட்டார்கள். படித்திருந்தால் சிறுகதையொன்றின் தரத்தினை நிர்ணயிப்பது அதன் பக்கங்களின் எண்ணிக்கை அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்களுக்குச் சிறுகதைகள் என்றால் அது வெளிப்படுத்தும் அம்சம் என்ன என்பதைப்பற்றிய புரிதல் இல்லாமலிருக்கும். உதாரணத்துக்கு ஒரு சிறுகதை கருத்தினை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தால் உடனேயே அதனைப் பிரச்சாரமாகக் கருதி விடுவார்கள். இவ்விதம் இவர்கள் கருதுவதற்கு முக்கிய காரணம் போதிய அளவிலான வாசிப்பு இல்லாததே. ஒரு சிறுகதையானது ஒரு கருத்தினை மையமாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். ஓருணர்வினை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கலாம். ஓரிடத்தைப்பற்றிய அல்லது ஒரு விடயத்தைப்பற்றிய விவரணச்சித்திரமாக இருக்கலாம். ஓரிடத்து மாந்தரைப்பற்றிய நடைச்சித்திரமாக இருக்கலாம். ஒரு தேடலை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். நான் இங்கு என்ன கூற வருகின்றேனென்றால் ஒரு சிறுகதையை ஒருவர் வாசித்து முடிக்கையில் அச்சிறுகதை அதனை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு ஏற்படுத்தும் விளைவையே குறிப்பிடுகின்றேன்.