மலைத்தலைய கடற்காவிரி -பட்டினப்பாலை காட்டும் காவிரியின் அழகு! - இளவரசி இளங்கோவன் , மொன்றியல்,கனடா -
உலகத்தமிழ் உறவுகளுக்கு அன்பின் வணக்கங்கள். சங்க இலக்கியம், வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை மெய்ப்பிக்கும் இலக்கிய சான்றுகள். இவற்றில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். பழம் இலக்கியங்களை படித்து என்ன ஆகப்போகிறது என நினைப்பவர்கள் சற்றே நேரம் ஒதுக்கி இவ்விலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியலை படித்தர்களானால், அறம், காதல், வீரம் , வணிகம் , தலைமை , ஆளுமை என்பதெல்லாம் என்ன என்பதில் தெளிவான பார்வையை பெறுவார்கள். தெளிவு பிறந்தால் அச்சமூகம் நிச்சயம் சிறந்ததொரு சமூகமாக வளர வாய்ப்புள்ளது. மேலைநாட்டு வாழ்வியலை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கேனும் நம் பண்டைத்தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள காட்டுவோமாக.
இந்த கட்டுரையில் காவிரியின் பெருமையை, அழகை சங்க இலக்கியம் பட்டினப்பாலையின் வழியாக பருகுவோம் வாருங்கள்.
301 வரிகளைக் கொண்டதும் ,வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சமூகவியல் நோக்கர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் மற்றும் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் விருப்பமானதும், பயன்தரத்தக்கதுமான நூல்களில் பட்டினப்பாலையும் ஒன்று. உள்ளதை உள்ளபடியே கண்ணாடி போல காட்டுவது சங்க இலக்கிய நூல்களில் காணப்படும் இயல்பு.