'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்று அவரது புலமையின் காரணமாக அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. கலாநிதி க.கைலாசபதி அவர்களே தனது 'ஒப்பியல் இலக்கியம்'நூலை இவருக்குச் சமர்ப்பித்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தின் பின்வருமாறு கூறியிருப்பார்:
"பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங் கொடுத்து வந்தவரும் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் முன்னோடிகளில் ஒருவரும் பிறர்மொழி இலக்கியங்களைக் கற்று மகிழ்ந்து அவற்றைத் தழுவியும் பெயர்த்தும் தமிழுக்கு அணிசெய்தவரும், பல துறை வல்லுநருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்"
அது ஒன்றே போதும் இவரது புலமையினை வெளிப்படுத்த. இவர் ஒரு பண்டிதரல்லர்; பட்டதாரியுமல்லர். ஆனால் கவிதை, கதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் திடமாகக் காலூன்றியவர். அவர் தனது நண்பரும், சக எழுத்தாளருமான சில்லையூர் செல்வராசன் அவர்களை விமர்சித்த ஒருவருக்குப் பதிலடியாக எழுதிய இக்கட்டுரை அவரது புலமையினை நன்கு வெளிப்படுத்துமொரு கட்டுரை.
அவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள "நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ, பட்டதாரியோ ஆகி விட்டால் அவர் ஒரு படித்தவர் என்று கணித்துக் கொள்வதாகும். ஆனால் அவர்களில் பலர் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படித்தவர்களல்ல. இங்கு நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். தொல்காப்பியத்தின் ஒரு பகுதியையும், திருவாசகத்தின் ஒரு பகுதியையும், பாரதத்தின் இரண்டு சருக்கத்தையும் பள்ளிக்குச் சென்று படித்துப் பெற்றவனா அல்லது வீட்டிலிருந்து கொண்டே மூன்று நூல்களையும் முழுவதும் கற்றவனா அவற்றை முற்றாகப் படித்தவன்? ஞானசம்பந்தர் ஓதாதுணர்ந்தவர், முலைப்பாலைக் குடித்தே முழு அறிவும் பெற்றவர் என்கிறார்கள். ஒரு சில பண்டிதர்களும் பட்டதாரிகளும், ஏன் பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்களில் சிலர் கூட, தம்மை ஞானசம்பந்தர்கள் என்றுதான் காட்டப் பார்க்கிறார்கள்." என்னும் கூற்று சிந்தனைக்குரியது. இக்கட்டுரை வசந்தம் சஞ்சிகையின் நவம்பர் 1965 பதிப்பில் வெளியாகியுள்ளது. - பதிவுகள்.காம் -
ஒப்பியல் இலக்கணம்! தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள் Blank Verse ஆ?! - அ.ந.கந்தசாமி -
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது.
நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ, பட்டதாரியோ ஆகி விட்டால் அவர் ஒரு படித்தவர் என்று கணித்துக் கொள்வதாகும். ஆனால் அவர்களில் பலர் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படித்தவர்களல்ல. இங்கு நான் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். தொல்காப்பியத்தின் ஒரு பகுதியையும், திருவாசகத்தின் ஒரு பகுதியையும், பாரதத்தின் இரண்டு சருக்கத்தையும் பள்ளிக்குச் சென்று படித்துப் பெற்றவனா அல்லது வீட்டிலிருந்து கொண்டே மூன்று நூல்களையும் முழுவதும் கற்றவனா அவற்றை முற்றாகப் படித்தவன்? ஞானசம்பந்தர் ஓதாதுணர்ந்தவர், முலைப்பாலைக் குடித்தே முழு அறிவும் பெற்றவர் என்கிறார்கள். ஒரு சில பண்டிதர்களும் பட்டதாரிகளும், ஏன் பயிற்சி பெற்ற தமிழ் வாத்தியார்களில் சிலர் கூட, தம்மை ஞானசம்பந்தர்கள் என்றுதான் காட்டப் பார்க்கிறார்கள்.